103. நல்வெள்ளியார்
இவர் மதுரை நல்வெள்ளியாரெனவும் நல்லொளியாரெனவும் கூறப்படுவர். இஃது ஏடெழுதுவோர் மிகை. இவர் பெயரானே பெண்பாலரென்று தெரிகின்றது. இவர் பாடியவற்றில் குறைநேர்ந்த தோழி குறைநயப்பக் கூறியது நுண்ணுணர்வினோரை மகிழச்செய்யும்; (அகம். 32) இவர் குறிஞ்சியையும் பாலையையும் புனைந்து பெருஞ்சுவை பயப்பப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (7, 47) பாடல்களும் குறுந்தொகையிலொன்றும், அகத்திலொன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
104. நல்வேட்டனார்
இவர் மிளைகிழான் நல்வேட்டனாரெனவுங் கூறப்படுவர்; வேளாண் மரபினர். மிளை-ஓரூர். இவர் பேய்க்காஞ்சியைத் தலைமகன் தனக்கு உவமை கூறியதாகப் பாடியுளர்; (நற், 349) எல்லாத்திணையையும் பாடியுள்ளார்; அடைந்தார்க்கு வரும்துன்பத்தைப் போக்குவதே செல்வமெனப்படும். ஏனைச் செல்வந் தவப்பயனா லெய்துவனவாமென்கிறார்; (நற். 210) இரவு வரும் நெறியினேதத்தை விரித்துக் கூறுகிறார்; (நற். 292) இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு (53, 210, 292, 349.) பாடல்களும், குறுந்தொகையிலொன்றுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
105. நற்சேந்தனார்
இவர் கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனாரெனவுங் கூறப்படுவர்; வாதுளியென்றதனால் வாதுளகோத்திரத்தின ரெனவும் அந்தணர் மரபினரெனவுங் கொள்ளப்படும். பாலைத்திணையையுங் குறிஞ்சித்திணையையும் புனைந்து பாடியுள்ளார்; இவர் பாடிய குறைநயப்பு நுண்ணுணர்வினோரை மகிழப் பண்ணாநிற்கும்; (நற். 128) இவர் பாடியனவாக நற்றிணையில் மேற்காட்டிய பாடலொன்றும், அகத்திலிரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
106. நற்றங் கொற்றனார்
இவர் குறிஞ்சியைப் புனைந்து பாடியுள்ளார்; தலைவன் பிரிவினாலே தலைவி தன்னுடம்பிளைத்தமை யறிவுறுத்துவாள் யான் கைவளை வேண்டினேனாக எவ்வளவு இளைத்தாலும் கழலாதபடி எந்தை சிறுவளை அணிந்தனனென்று கூறியது பெருநயம் பயக்கும் தன்மையதாகும். இவர் பாடியது நற் 136 ஆம் பாட்டு.
107. நற்றமனார்
இவர் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார்; பிரிவிடைத் தோழியாற்றுவிப்பது இரும்பினைப் பழுக்கக் காய்ச்சிய உலையிற் கொல்லன் பனை மடற்சின்னீர் தெளித்து நெருப்பைத் தணிப்பதுபோலாகுமென்று கூறியுளர். இவர் பாடியது நற். 133 ஆம் பாட்டு.
108. நிகண்டன் கலைக்கோட்டுத்தண்டனார்
மான்கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் கொண்டமையால் இவர் கலைக்கோட்டுத்தண்ட னெனப்பட்டார். இவரது இயற்பெயர்