புலப்படவில்லை. நிகண்டன் என்ற அடைமொழியால் இவர் தமிழில் நிகண்டொன்று செய்தாரென்று தெரிகிறது; அதுவே கலைக்கோட்டுத்தண்டெனப்படுவது. இதனை இடுகுறிப்பெயரென்று கொண்டார்கள வியலுரைகாரரும் நன்னூல் விருத்தியுரைகாரரும் (சூத் 49) அஃது இதுகாறும் வெளிவந்திலது. இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 382 ஆம் பாட்டு.
109. நெய்தல் தத்தனார்
இவர் இயற்பெயர் தத்தனென்பதே, வேறு தத்தனென்பார் பலருளராதலானும், இவர் நெய்தற்றிணையைச் சிறப்பித்துப் பாடியிருத்தலானும் ஏனைய தத்தர்களின் இவர் வேறென்பது தெரிய நெய்தற்றத்தனா ரெனப்பட்டார். நெய்தலே யன்றிப் பாலையையும் பாடியுள்ளார். நீ படுந்துயரைத் தலைமகனூர்க்குச் சென்று அவனறியும்படி கூறுவோமோவென்று தோழி தலைமகளை நோக்கிக் கூறியதாகக் கூறி மகிழ்விக்கின்றார்; (நற். 49) இவர் பாடியனவாக மேற்கூறிய பாடலொன்றும், அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
110. நொச்சிநியமங் கிழார்
இஃது ஊர் பற்றி வந்த பெயர். நொச்சிநியமம் - ஓரூர். இவர் வேளாண் மரபினர். இக்காலத்து ஆராய்ந்தறிதற்குமரிய பூக்கோட்காஞ்சி இயற்றியவர்; (புறம். 2") குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடி யுள்ளாராதலின் இவரூர் குறிஞ்சியினகத்ததுபோலும். நீ படுந்துயர்தான் யாதென்று வினவிய தாய்க்குத் தலைவன் மார்பணங்கென்று தவறியுரைக்கத் தொடங்கினேனென்று தலைவி கூறுவதாகப் படிப்போர்க்கின்சுவை யூட்டுகின்றார்; (நற். 17) தலைவியின் மொழி கேட்பினுய்வேன் அன்றே லென்னுயிரோடெல்லா மொருங்கழியுமென்று தலைவன் கூறுவது இனிய சுவையதாகும்; (நற் 209) புதுவதாகப் பூத்த வேங்கை மலரைப் பெறவேண்டிய மகளிர் புலிபுலியென்று பூசலிடுவதையும் அதனைக்கேட்டுப் புலிபோலுமென்று ஆடவர் வில்லம்புடன் வருவதையும் விரித்துக் கூறியுள்ளார்; (அகம். 52) (புலிபுலி யென்றால் வேங்கையின்கிளை தாழ்ந்து கொடுக்குமென்பது வழக்கு.) இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று (17, 208, 209) பாடல்களும் அகத்திலொன்றும், புறத்திலொன்றுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
111. பரணர்
இவர் கடைச்சங்கப் புலவருளொருவர்; கபிலரொடு நட்புடையராயிருந்தவர்; சோழன் உருவப்பல்தேரிளஞ்சென்னியைப் புகழ்ந்து பாடியவர்; (புறம். 4) நெடுஞ்சேரலாதனும் பெருவிறற்கிள்ளியும் போர் புரிந்து மடிந்ததனையும், போர்க்களத்தின் அழிவையும் நோக்கி இரங்கி்க் கூறினார்; (புறம். 63) வையாவிக் கோப்பெரும்பேகனைப் பாணாற்றுப் படையும் இயன்மொழியும் பாடி உவப்பித்தருளினார்; (புறம். 141, 142) அவனால் நீக்கப்பட்ட கண்ணகியென்பாளை மீட்டும் அவன் அழைத்துக்கொள்ளும்படி பாடியருளினார்; (புறம். 144, 145) மகட்பாற்காஞ்சி யென்னுந் துறை, பலரினும் பலபடப் புனைந்து பாடியுள்ளார்; (புறம். 336, 341) அம் மகட்பாற்காஞ்சியின்கட் குட்டுவனையும் அவனது முசிறியையும் புகழ்ந்து பாடினார்; (புறம். 343)