"வாய்மொழித் தழும்ப னூணூரன்ன" எனத் தழும்பனையும் அவனது ஊனூரையும் பாராட்டிக் கூறுவாராயினார்; (புறம். 348) தித்தனையும் அவனது உறையூரையுங் கூறியுள்ளார்; (புறம். 352) சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனை ஏர்க்களவுருவகம் பாடிப் பரிசில் வேட்டனர்; (புறம். 369) (சிலப்பதிகாரத்திற் கூறப்படுஞ் செங்குட்டுவனிவனே.) இச் செங்குட்டுவனைப் பதிற்றுப் பத்து ஐந்தாம்பத்துப் பாடி அவன் கொடுத்த வரிசையெல்லாம் பெற்று மீள்வாராயினார்; அகத்தில் இவரால் அச் செங்குட்டுவன் புகழ்ந்து பாடப் பெற்றான்; (அகம். 396) வள்ளலாகிய வல்விலோரியைப் புகழ்ந்து கூறுவாராயினார். (நற். 6) கொல்லிமலையிலமைந்த கொல்லிப்பாவையின் தோற்றமும் அதனியல்பும் ஆங்காங்கு உவமை முகத்தால் கூறியுள்ளார்; (நற். 201; குறு. 89; அகம். 62, 208) கொண்கானத்து (கொங்கணம் - மலையாளம் சில்லா) முன்பிருந்த நன்னன் என்னும் சிற்றரசனது கொடை முதலியனவும், அவனது கொடுஞ்செயல்களும், அவனொடு சேரமான் போர்செய்ததும், சேரன் சேனாபதி ஆஅய் எயினனை நன்னன் சேனாபதி மிஞிலி யென்பான் கொன்றதும் பிறவும், நன்னனது பாழியில் பொருள் சேமித்துக் காவலோம்பியதும் இவரே விரித்துக் கூறுகின்றார்; (நற். 265, 270; குறு. 73, 292; அகம். 152, 181, 208, 258, 356, 396.) சேரலனது தொண்டியைப் புகழ்ந்தது; (குறு. 128) சேந்தனது உறையூர், காவிரி, அழிசியின் ஆர்க்காடு இவற்றைப் பாராட்டிக் கூறியது. (குறு 258) அஃதை தந்தையைப் பாராட்டியது; (குறு. 298) விச்சியர்கோன் போரும் குறும்பூரார் ஆரவாரிப்புங் கூறியது; (குறு. 328) தித்தனது உறையூருங் காவிரியும் மத்தியின் கழாருங் கூறியது; (அகம். 6) வெளியன் தித்தனது கானலம் பெருந்துறையும் பிண்டன் தோல்வியும் நள்ளியின் சோலைச்சிறப்பும் ஆஅய் கானத்துச் சிறப்புங் கூறியது; (அகம். 152) அதிகனது வேங்கை மலையைப் புகழந்து கூறியது; (அகம். 162) மணல் வாயில் உறத்தூரைப் பாடியது; (அகம். 262) பேஎர் என்னு மூரிலுள்ள சோழர் சேனாபதி பழையனைப் புகழ்ந்தது; (அகம். 186) ஆஅய் அண்டிரனது பொதிய மலையைப் புகழ்ந்தது; (அகம். 198) மற்றும் இவர் சோழன் கரிகாற் பெருவளத்தான் மகள் ஆதிமந்தி என்பாள் தன் காதலனை யிழந்து புலம்பிய கதையை விரித்துஞ் சுருக்கியும் உவமமாக்கியும் பலவிடங்களிலுங் கூறுகின்றார்; (அகம். 135, 226, 236, 322, 376, 396) திருவழுந்தூர்த்திதியனும் அன்னிகுடி அன்னியும் பொருத கதையை விளக்கிப் பலவிடங்களினும் உவமிக்கிறார்; (அகம். 196, 262) அதிகமானெடுமானஞ்சி திருக்கோவலூரை வென்றதனைப் பாராட்டிக் கூறினார்; (அகம். 372) அங்ஙனம் பாடியதனை யெடுத்துக்காட்டிய "பரணன் பாடினன் மற்கொல்" என ஒளவையாராற் புகழ்ந்து பாடப்பெற்றார்; (புறம். 99)
இவர் பாடிய பாடல்க ளொவ்வொன்றினும் யாரையேனும் புகழாமலும் அக்காலத்து நிகழ்ந்த கதைகளினொன்றைப் புகுத்தாமலும் பாடுவதில்லை; இன்னும் வாகைப் போரிற் பாண்டியன், அதகன், கொங்கர், சேர சோழ பாண்டியர், வேளிர், சேரலன் சேனாபதி கணையன், இவரெல்லாம் நம் புலவர் பாடலால் நிலைபெற்று விளங்குகிறார்கள்; இவையேயன்றி அகத்துறைகளில் இவர் காட்டிய வியப்புக்களை யெடுத்துக்கூறற்கு என்னாலியலாமையால் அவற்றைப் படிப்பவர்களே கண்டு