xlviii


மகிழ்வார்களாக, அகம். 202 இல் மாதரை இவர் வருணித்திருப்பது வியக்கத்தக்கது. இவர் பாடியனவாக நற்றிணையில் பன்னிரண்டு (6, 100, 201, 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356.) பாடல்களும், குறுந்தொகையில் பதினைந்தும், பதிற்றுப்பத்தில் பத்தும், அகத்தில் முப்பத்திரண்டும், புறத்தில் பன்னிரண்டும், திருவள்ளுவமாலையிலொன்றுமாக எண்பத்திரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
112. பராயனார்

    இவரைப்பற்றி யாதும் விளங்கவில்லை. நெய்தலைச் சுவைமிகத் தோன்றப் பாடியுள்ளார். இவர் பாட்டில் தலைமகன் தலைமகளை ஐயுற்றுவினாவுவது இனிமை பயவாநிற்கும். இவர் பாடியது நற். 155 ஆம் பாட்டு.

  
113. பாண்டியன் மாறன்வழுதி

    இவன் மாறன்வழுதியெனவுங் கூறப்படுவான்; மதுரைப் பாண்டியர் மரபினன். குறிஞ்சியையும் முல்லையையும் புனைந்து பாடியவன்; பூவிலை மடந்தையைக் காண்டலும் பருவவரவறிந்து தலைமகள் பிரிவிற்கிரங்குவது கேட்போரிரங்குதற்குரியதாகும், (நற். 97) இவன் பாடிய பாட்டு இரண்டு; (நற். 97, 301)

  
114. பாரதம்பாடிய பெருந்தேவனார்

    இவர் எட்டுத் தொகையுட் பெரும்பாலனவற்றுக்கும் காப்புச் செய்யுள் பாடியவர். பெருந்தேவனார் என் பிறருமுளராதலின் அவரின் இவர் வேறென்பது தெரியப் பாரதம்பாடிய பெருந்தேவனாரென அடைமொழி கொடுக்கப்பட்டார். வியாசபாரதத்தை வெண்பாவும் அகவலும் உரைநடையும் விரவிவரப் பாடி வெளியிட்டமையிற் பாரதம் பாடிய பெருந்தேவனாரெனப்பட்டார். இவர் பிறந்தது தொண்டைநாடு எனச் "சீருறும் பாடல்..... பாரதம்பாடும் பெருந்தேவர் வாழும் பழம்பதிகாண், மாருதம் பூவின் மணம்வீ சிடுந்தொண்டை மண்டலமே," என்று தொண்டை மண்டல சதகங் கூறாநிற்கும். இப்பொழுது பாரதவெண்பாவென அச்சிட்டு வழங்கும் நூலில் முதலில் விநாயக வணக்கமும் அடுத்துத் தெள்ளாற்றிற் போர்வென்ற அரசன் சிறப்புங் கூறுவது காரணமாக இவர் தொண்டை நாட்டிற் பிறந்தவரென்று படிக்காசுப் புலவர் தமது தொண்டைமண்டல சதகத்து எழுதிவைத்தார். தெள்ளாற்றிற் போர்வென்றது கடைச்சங்கம் அழிந்த பல்லாண்டுகளுக்குப் பின்னரேயாம். அதனைக் கூறுதலின் இப் பெருந்தேவனார் கடைச்சங்கப் புலவரல்லரென்பது தேற்றம். ஆதலின் இப்பொழுது வழங்கும் பாரத வெண்பா பெருந்தேவனார் பாடியதன்றெனவும் பெருந்தேவனார் பாடியது உதாரணமாக எடுத்தாண்ட சில செய்யுளன்றி நூல்முழுவதும் அழிந்துவிட்டதென்றும் சில பெரியோர் கூறுவதுண்மையெனக் கொண்டு தொண்டை நாட்டினரென ஒருதலையாகக் கொள்ளாதொழிக. அச்சிட்டு வழங்கும் பாரத வெண்பா நடையையும் உதாரணமாக முன்பெடுத்தாண்ட பாரத வெண்பா, அகவல்களி னடையையும் ஒப்பு நோக்கியறிக.

    மற்றும் இந் நற்றிணைக்குக் கூறிய காப்பு விட்டுணுசகத்திர நாமத்தியான சுலோகமாகிய (பூ:பாதௌ) என்றதன் மொழிபெயர்ப்பேயாம்.