நற்றிணையிலும் அகத்திலும் பெருந்தேவனாரென ஒருவர் காணப்படுகிறார். அவரின் இவர் வேறென்பது பாரதம்பாடிய என்ற அடைமொழியாற் பெறப்படும்; நற்றிணையிலே திருமாலையும் மற்றவற்றிற் சிவபிரான் முதலாயினோரையும் இவர் வணக்கங் கூறுதலால் எல்லா மதத்தினையுந் தன்வயினடக்கிக்கொண்ட அத்துவைத மதத்தினராவர்.
இவர் பாடியனவாக நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகம். புறம் ஆகிய இவ்வைந்து தொகை நூல்களின் காப்புச் செய்யுள்களைந்தும்; திருவள்ளுவமாலையி லொன்றுமாக ஆறு செய்யுள்கள் கிடைத்திருக்கின்றன.
பாலத்தனார்
மேலே (97) நப்பாலத்தனார் பார்க்க.
115. பாலைபாடிய பெருங்கடுங்கோ
இவர் சேரமான்மரபினர்; சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ வெனவும் பெருங்கடுங்கோ வெனவுங் கூறப்படுவர்; பாலைத்திணையைப் பலபடியாகச் சிறப்பித்துப்பாடும் ஆற்றலுடையவர்; பெருங்கடுங்கோ வென்னு மியற்பெயருடையவர்; பாலைத் திணையொன்றனையே பாடியதனாற் பாலைபாடியவென்று அடைமொழி கொடுக்கப்பட்டார்; கொண்கான (கொங்கண) த்து நன்னனையும் அவனது ஏழில் மலையையும் பாடியுள்ளார்; (நற். 391) பேய்மகள் இளவெயினி என்பவளாற் பரிசில் வேண்டிப் பாடப்பெற்றவர்; (புறம். 11) மிக்க வீரமும் கொடையுமுடையவர்; பிரிவச்சங்கூறுந் தலைமகன் கூற்றாக "நிற்றுறந் தமைகுவே னாயினெற்றுறந், திரவலர் வாராவைகல், பலவாகுகயான் செலவுறுதகவே", (குறு. 137) என்றதனால் இவர் கொடைத்தன்மை இவ்வண்ணமாயிருக்குமென்பது தெரிந்துகொள்க. பாலைத்திணையை உடன்போக்கு முதலாய பலவகைத் துறைகளையுமமைத்து விரித்து விளங்கப் பாடியுள்ளார்; தலைமகளைத் தலைமகன் பெற்றமை ஒருவன் தான் வழிபடுதெய்வத்தைக் கண்ணெதிர் வரப்பெற்றாற் போன்றதென்று கூறுகின்றார்; இதில் தலைமகளை இனிதுகூறி நடத்திச் செல்வது வியக்கத்தக்கது; ( நற். 9) பிரிவுணர்த்தியவழித் தோழி நான் முன்பு வந்த கொடிய சுரம் இப்பொழுதும் என் கண்ணெதிரிலுளது போலச் சுழலாநிற்குமென இறும்பூதுபடக் கூறுகின்றார்; (நற். 48) பூவிலைமடந்தையைக் கண்டு பருவம் வந்தும் அவர் வந்தாரில்லையென்று தலைவி கூற்றாக நொந்து கூறுகின்றார். (நற். 118) கோங்கம் மலர்ந்திருப்பதைக் கார்த்திகை விளக்கெடுத்தலுக்கு உவமிக்கிறார்; (நற். 202) கூந்தலின் சிறப்புக் கூறி அக் கூந்தலிற்கிடந்து கொள்ளும் பயனைக்கொள்ளாது பிரிவோர் அடைந்தாரைக் காப்பதை மறந்தனரோவெனத் தோழி கூற்றாக விரித்துக் கூறாநிற்பர்; (நற். 337) குறு. 37 இல் இவர் கூறிய உள்ளுறையை அங்ஙனமே கொண்டார் வாதவூரடிகள்; (திருக்கோவையார் 276) . தலைவன் வாராமையும் தன்னை முயங்காமையும் தன்னை அயலார் சுடலைபோல அகற்றலுமாகியவற்றைத் தலைவி கூறிய பகுதி இரங்குந்தன்மையதாகும்; (குறு. 231) பிரிவுண்மையறிந்த தலைவி காதலனை மயக்குந் தன்மையுடைய கோலத்தொடு வந்து அவன்மீது சாய்ந்து முயங்கி வருந்துவதாக இவர் கூறியது நீத்தாரையும் விழைவிக்குந் திறத்ததாகும்; (அகம். 5) பிரியுங்காதலர் இரும்பினாலாகிய