l


உயிருடையரெனத் தலைவி கூற்றாகக் கூறாநிற்பர்.(அகம். 185) பிரிவோர் பழியுடையரல்லர்; அவரைப் பிணிக்க அறியாத என் தோள்களே தவறுடையனவெனத் தலைவி கூறுவதாக அமிழ்தம் பொழியாநிற்பர்; (அகம். 267) மான்கொம்பு முளைத்து முதிருமளவுந்தோல் பொதிந்திருப்பது கூறுகின்றார்; (அகம். 291) பாலைநிலத்திற் பாம்பு வாடிக் கிடப்பது பணஞ்சொரிந்த பைபோன்ற தென்கிறார். (அகம். 313) இவர் பாடியனவாக நற்றிணையில் பத்துப் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391) பாடல்களும், குறுந்தொகையில் பத்தும், அகத்தில் பதினொன்றும், புறத்திலொன்றுமாக முப்பத்திரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
116. பிசிர் ஆந்தையார்

    இவர் பாண்டி நாட்டுப் பிசிர் என்னுமூரிலுள்ள ஆதன் தந்தையார்; உறையூரையாண்டிருந்த கோப்பெருஞ்சோழனுக்கு உயிர்த்தோழராயுள்ளவர். பரிமேலழகர் 785 ஆம் குறள் உரையில் "கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சியொப்பின் அதுவே உடனுயிர் நீங்குமுரிமைத்தாய நட்பினைப் பயக்கும்" என்றெழுதியதனாலும் இவர் நட்பின் திறமையறிக. ஒரு காலத்துக் கோப்பெருஞ்சோழன் தன் மக்களொடு பகைத்துப் போருக்கெழுதலும், புல்லாற்றூர் எயிற்றியனார் தடுத்து நன்னெறிப் படுத்தினர்; (புறம். 213) அவர் மொழிவழி நின்ற அரசன் தன் இராச்சியத்தை வெறுத்து ஒரு மரத்து நிழலில் வடக்கு முகமாகப் பட்டினியிருந்து உயிர்விடத் துணிந்தனன்; (புறம். 214) அப்பொழுது பற்பல புலவரும் அறிவுடை முதியரும் அருகிருப்ப அரசன் என் நட்பாளன் பிசிர் ஆந்தை இன்னே வருகுவன்; (புறம். 215) அவனுக்கு என்னோடு இடமொழிப்பீராக (புறம். 216) வென்னுமளவிற் பிசிராந்தையாரும் வந்து சேர்ந்தனர்; (புறம் 217) வந்த இவரும் பட்டினியாகி வடக்குமுகமாவிருந்து அரசனோடு உயிர் நீத்தருளினார். இவ்விருவரும் ஏனைப்புலவரும் ஆங்குப்பாடிய பாடல்கள் கேட்போரை உருக்குந்தன்மைய. இப் பிசிராந்தையார் நரைதிரையின்றி நெடுங்காலம் வாழ்ந்திருந்த முதியோர்; (புறம். 191) இவர் பாண்டியன் அறிவுடைநம்பியைப் பாடி மகிழ்வித்தார்; (புறம். 184) இவர் நெய்தலையும் குறிஞ்சியையும் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 161 ஆம் பாடலொன்றும் அகத்திலொன்றும் புறத்தில் நாலுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
117. பிரமசாரி

    இவர் பெயரினாலேயே இவர் மணம்புரிந்து கொள்ளாது பிரமசரியம் காத்திருந்த அந்தணரென்பது தோன்றுகின்றது. "கடவுளாயினு மாக, மடவை மன்ற வாழிய முருகே" என முருகவேளை இவர் பாடலிற் கடிந்துகூறிய மனத்திட்பம் கருதத்தக்கது. இவர் குறிஞ்சியைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 34 ஆம் பாட்டு.

  
118, பிரான் சாத்தனார்

    இவர் குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார்; மகளிர் விளையாடாது இல்லின்கணிருத்தல் அறனுமன்று, ஆக்கமுந் தேயுமென்று அன்னையிடங் கூறுமாறு இற்செறிக்கப்பட்ட தலைவி கூறியதாக வியப்பெய்தக் கூறியுள்ளார். இவர் பாடியது நற் 68 ஆம் பாட்டு.