li


119. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

    இவர் வேளாண் மரபினர்; கம்பூரென்னு மூரினர்; வண்ணக்கன் - நாணயசோதகன், நோட்டக்காரன். புதுக்கயம் என்னும் ஊரில் நோட்டக்காரராய் வந்து தங்கியவர். இவர் குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 2" ஆம் பாட்டு.

  
120. பூதங்கண்ணனார்

    இவர் பூங்கண்ணனாரெனவும் கூறப்படுவர். இவர் குறிஞ்சித் திணையைப் பலபடப் புனைந்து பாடியுள்ளார். தோழியாலே குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சைநோக்கி அவளருளினும் அருளாதுவிடினும் என் நோய்க்கு அவளன்றிப் பிறிதொரு மருந்தில்லையென்று கூறுவதாக இவர் பாடியது மகிழ்ச்சி தருவதாகும்; (நற். 140) இவர் பாடியனவாக நற்றிணையில் மேற்காட்டிய பாடலொன்றும் குறுந்தொயைிலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
121. பூதனார்

    இவர் பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். மகட்போக்கியதாய் பாலையை வருணிப்பதாக இவர் கூறியது மிக்க சுவையுடையதாகும். இவர் பாடியது நற், 29 ஆம் பாட்டு.

  
122. பூதன்றேவனார்

    ஈழத்துப் பூதன்றேவனாரென்பவரொருவர் காணப்படுகிறார்; அவர் தாமோ இவரென்றையமெய்துமாயினும், இவர் மருதத்திணையைச் சிறப்பித்துப் பாடி அத் திணையிலே களவு நிகழ்ந்ததாகவும் கூறியிருப்ப, ஈழத்துப் பூதன்றேவனார் பாடியதெல்லாங் குறிஞ்சித்திணையே; ஆதலால் இருவரும் வெவ்வேறாவரென்று கருதலாயிற்று. வைகறையில் எருமையை மேய்க்கக் கொண்டுசெல்லுஞ் சிறுவர் அம் மாட்டின் முதுகிலேறியிருந்து நடத்தாநிற்பரென்று கூறுகிறார்; தலைமகன் நெஞ்சினை நெருங்கித் தைந்நீராடும் அத் தலைமகளல்லது யானுற்றநோய்க்குப் பிறிதொரு மருந்தில்லை யென்று கூறுவதாக இவர் மொழியாநிற்பர்; (நற். 80) இவர் பாடியனவாக நற்றிணையில் 80 ஆம் பாடலொன்றும் குறுந்தொகையி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
123. பெருங்கண்ணனார்

    மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனா ரெனவும், விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனாரெனவும் இருவருளர்; அவரின் இவர் வேறென்பது தெரிய அடைமொழி கொடாது கூறப்பட்டார். இவர் பாலையையும் நெய்தலையும் புனைந்து பாடியுள்ளார்; இவர் பாடியனவாக நற்றிணையில் 137 ஆம் பாடலொன்றும் குறுந்தொகையிலிரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
  
124. பெருங்குன்றூர் கிழார்

    இஃது ஊர்பற்றி வந்த பெயர்; இவர் வேளாண்மரபினர். இவர் தமிழ்பயின்று பெரும்புலமையுடையராய் வறுமை மேலீட்டினால் வருந்திக் குடக்கோச் சேரலிரும்பொறை யென்பா னிடஞ்சென்று பாடிப் பலநாள் காறும் அவன்பாலிருந்தும் அவன் யாதோ பரிசில் கொடுப்பவன்