lii


போலக் காட்டிப்பின்பு கொடானாய் ஏமாற்றிவிட்டனன். புலவர் வருத்தமுற்றுத் தமது வறுமையி னிலைமையும் அதனாலே தம் மனைவியும் புதல்வனும் படுந் துன்பமும் விரித்துக்கூறி, அவனையும் நீ பொய்ம்மையுடையையென்று குறிப்பாகப் பலவாறு மொழிந்து இகழ்ந்துவிட்டு (புறம். 210, 211) வையாவிக் கோப்பெரும் பேகனிடஞ் சென்றனர். அங்கு அவன் தன் மனைவி கண்ணகி யென்பாளைத் துறந்தமையறிந்து அவனைப்பாடி, நீ நின் மனைவியை மீட்டுக் கொள்வதே எமக்குப் பரிசில் கொடுத்ததாகுமென்று கூறி (புறம். 147) மீண்டு, சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியிடஞ் சென்று தம் வறுமை புலப்படக் கூறி, அவனால் ஆதரிக்கப்பெற்றிருந்தனர்; (புறம். 266) அங்ஙனமிருக்கு நாளில் சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறை யிறந்துவிட, அவன் தம்பி குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை யென்பான் அரசாட்சி கைக்கொண்டனன். அதனை யறிந்த நம் புலவர் பெருமான் அவ்வரசனிடஞ்சென்று, அவன் விச்சிக்கோனைவென்றதும், பெருஞ்சோழனையும் பழையன் மாறனையும் போர் தொலைத்ததும் ஆகிய இன்னோரன்ன சிறப்பெல்லாம் அமைத்துப் பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடி, அவனால் அளவுகடந்த பரிசில் கொடுக்கப்பெற்று வாழ்ந்திருந்தனர்; (பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தின் பதிகம்) இவர் பாடிய ஒன்பதாம் பத்தில், "நல்லிசைக் கபிலன் பெற்றவூரினும் பல" என்று கபிலரைப் பாராட்டிக் கூறியது அறியத்தக்கது. இவர் குறிஞ்சித் திணையைப் பலபடியாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். சந்தனமரத்துவேர் தனியே யிருந்தால் மரத்தில் வாசனை யமையாதென்றும் பிற வேர்களொடு கலந்தால் மரம் நறுமணங் கமழுமென்றும் குறிப்பிக்கிறார்; (நற். 5) உள்ளுறையும் இறைச்சிகளும் அடுக்கிவரக் கூறியுள்ளார்; (நற். 119) தலைவியின் பசலையை மணலுண்முழுகி்க் கிடக்குந் தேரையோடு உவமிக்கிறார்; (நற். 347) இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு (5, 112, 116, 347) பாடல்களும், குறுந்தொகையிலொன்றும், அகத்தில் ஒன்றும், புறத்தில் ஐந்தும், பதிற்றுப்பத்தில் பத்துமாக இருபத்தொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
125. பெருங் கௌசிகனார்

    இவர் தொண்டைநாட்டு இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனா ரெனப்படுவர். தொண்டைநாட்டுப் பல்குன்றக்கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னனை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) பாடியவர் இவரே. அந்தணர் மரபினர்; "ஊரும் பெயரும்" என்ற தொல். பொரு 630 ஆம் சூத்திரவுரையிற் "பெருங்குன்றூர் பெருங்கௌசிகன் என்ற அந்தணர்க்குரியது" என்று பேராசிரியர் கூறுமாற்றானுமறிக. இவர் மலைபடுகடாத்தில் "தீயி னன்ன வொண்செங் காந்தள் (145) என்று பாடியதனை "நன்னனென்னும் பெயர் தீயோ டடுத்தமையின், ஆனந்தக் குற்றமாய்ப் பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங் கூறினாராலெனின், அவர் அறியாது கூறினார், " என்று நச்சினார்க்கினியர் தம் உரையகத்துக் கூறியுள்ளார். அஃது ஆனந்தக் குற்றமாயினும் அன்றாயினும் பாடினாரும் பாட்டுண்டாரும் ஒருகாலத்து இறந்தனரென்றதனை மறுத்திலாமையின் அங்ஙனமே இப் பெருங்கௌசிகனார் மலைபடுகடாம்பாடி யரங்கேற்றியவுடன் இறந்தனராதல் வேண்டும். இவர் குறிஞ்சியையும் முல்லையையும் புனைந்து பாடியுள்ளார்; வினைமுடித்து