liii


மீண்டுவந்து தலைவியின்பந் துய்த்து அவளுடனிருந்த தலைமகன் மழையை வாழ்த்துவது இனியசுவை பயவாநிற்கும்; (நற். 139) இவர் பாடிய பாட்டு இரண்டு (நற், 44, 139)

  
126. பெருந்தலைச் சாத்தனார்

    இவர் ஆவூரில் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச்சாத்தனாரெனவும், மூலங்கிழார் மகனார் பெருந்தலைச்சாத்தனா ரெனவுங் கூறப்படுவர்; வேளாண் மரபினர். ஏனைய வெளிப்படை, பெரிய தலையையுடையராதலிற் பெருந்தலைச்சாத்தனா ரெனப்பட்டார் போலும். இவர் வறுமை மேலீட்டினால் வருந்திக்கொடைவள்ளலாகிய குமணனிடஞ் சென்றனர்; அவன் தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் காடுசென்றன னென்பதறிந்து அவனிருக்குங் காட்டையடைந்து தாம் வறுமையால் படுந்துன்பமெல்லாங் கூறினார்; (புறம். 164) அதனைக் கேட்ட குமணன் என் தலைகொணர்ந்தார்க்கு இவ்வளவு பொருள் கொடுப்பேனென்று தம்பி புலப்படுத்தியுளனாதலின் அவ்வாறே என் தலையைக் கொய்து கொண்டு போய் கொடுத்து நின் வறுமையைப் போக்கிக் கொள்ளென்று தன் வாளை அவர் கையிற் கொடுத்தனன்; அதனைப் பெற்ற புலவர் உடனே இளங்குமணனிடஞ் சென்று நிகழ்ந்தது கூறி அவனுள்ளத்திருந்த கறையைப் போக்கி நட்பாக்குவித்தனர்; (புறம். 165) ஒருகால் நள்ளியென்பவனின் தம்பி இளங்கண்டீரக்கோவும், விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோவும் ஓரிடத்து இருந்தபொழுது அங்குச் சென்ற இப் புலவர் நள்ளியின் தம்பியை மட்டும் அணைத்து மகிழ்ந்து அளவளாவினர். இளவிச்சிக்கோ என்னைத் தழுவாதது என்னென "நீ பெண் கொலைபுரிந்த நன்னன் மருகனாதலோடு பாடுவார்க்கு யாதுங்கொடாது கதவையடைக்கின்றனையாதலால் தழுவுதற்கு உரியையல்லை" யென்றிகழ்ந்து கூறினார்; (புறம். 151) மற்றொருகால் கோடைமலைத் தலைவனும் பாண்டியன் சேனாபதியுமாகிய கடிய நெடுவேட்டுவனிடஞ் சென்று பரிசில் வேண்ட அவன் கொடாது தாழ்த்தனன்; (புறம். 205) அதுகண்டு புலவர் வெறுத்துக்கூறிப் பின்பு அவனால் பரிசளிக்கப்பெற்றனர். பெற்றதனால், பின்பு புகழ்ந்தனர் (அகம். 13) அப்பால் மூவனென்பானிடஞ் சென்று அவனும் ஈயானாக அவனையும் அங்ஙனமே கூறி மீண்டனர். (புறம். 209) இவர் பாலையையும் முல்லையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 262 ஆம் பாடலொன்றும், அகத்தில் இரண்டும், புறத்தில் ஆறுமாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
127. பெருந்தேவனார்

    பெருந்தேவனாரெனப் பலருளர். இவரின் வேறென்பது தெரிய மற்றையோர் பாரதம் பாடிய பெருந்தேவனாரெனவும் கடுகுபெருந்தேவனாரெனவும் கவிசாகரப் பெருந்தேவனாரெனவும் அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் வேறுபடுத்த அடைமொழி கொடாது. இவர் பெயர் மாத்திரையாகவே கூறப்பட்டார். கூகையை நோக்கித் தலைவி கூறியதாக இவர் பாடிய செய்யுள் மிக்க சுவையுடையது; (நற். 83) இவர் குறிஞ்சியையும் பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 83 ஆம் பாடலொன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.