liv


128. பெரும்பதுமனார்

    மீளிப் பெரும்பதுமனார் என்றொருவருளர். இவ்விருவரும் பாடியவெல்லாம் பாலைத்திணையேயாதலின் இருவரும் ஒருவரேயென்று கருதற்கிடனாயிற்று. மீளி - ஓரூர். ஸ்ரீவில்லிபுத்தூர்த் தாலுகாவில் "மல்லி" என்றோரூருளது; மீளியென்பதே மல்லியென்று திரிந்து வழங்குகிறதோ தெரியவில்லை. குறுந்தொகையில் இவர் பாடிய "வில்லோன் காலன கழ" லென்ற பாடலும் புறத்திலிவர் புலவர்கள் பறவைக் கூட்டமாகவும் செல்வமுடையவர் ஆலமரமாகவும் வைத்துக் கூறிய பாட்டும் எவர்க்கும் இன்பம் பயப்பனவாம். இவர் பாலைத்திணையைப் பலபடப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (2, 106) பாடல்களும், குறுந்தொகையிலொன்றும் புறத்திலொன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
129. பெருவழுதி

    இவர் கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதியெனவும் இளம்பெருவழுதி யெனவுங் கூறப்படுவார். இவர் திருமாலிருஞ்சோலை வாசுதேவனையும் பலதேவனையும் பரவியவாறாகப் பரிபாடலில் "புலவரையறியாப் புகழொடு பொலிந்து" என்னும் பாடலை யியற்றியவர். இப் பாட்டிற்கு இசை வகுத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார், இவர் பாடல் நற்றிணையில் தாய்கேட்பத் தோழி ஏமாற்றியதாகக் கூறும் கூற்றும் நெஞ்சம் பிரிந்து சென்று மீண்டு வந்து தன் தலைவி வேறுபாட்டை நோக்கி இவளல்லளெனப் போயிற்றோ வென்று தலைவி கூறும் கூற்றும் வியப்பைத் தருவனவாம். கடலுட் சென்றவிடத்து இறந்தமையின் இவர் கடலுண்மாய்ந்த வழுதியென்று கூறப்பட்டார். குறிஞ்சியையும் பாலையையும் நயந்தரப் பாடியுள்ளார். இவர் பாடியவை நற்றிணையில் இரண்டும் (55, 56) பரிபாடலில் ஒன்றும் (15 ஆம் பாட்டு) புறத்திலொன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
130. பேராலவாயர்

    இவர் மதுரைப் பேராலவாயரெனவுங் கூறப்படுவார். சிவபிரான் நக்கீரரொடு வாதுதொடுக்கவேண்டி ஒரு புலவராக வந்தபொழுது நும்பெயர் யாதென்றார்க்கு யாம் "பேராலவாயர்" என்னும் பெயருடையோமென்று கூறியதாகப் பழைய திருவிளையாடல் கூறாநிற்கும். இவர் மதுரையையும் அதனையாளும் பாண்டியன் செழியனையும் அவனது கொற்கை நகரையும் வைகையாற்றையும் சிறப்பித்துளார்; (அகம். 296) இவர் எல்லாத்திணையிலும் பயின்றுளராதலின் அவ்வவற்றைப் புனைந்து பாடியுள்ளார். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தினர். அவனிறந்தானாக அவன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்பாயப் போதலும், அவர் அதனைக் கண்டு பரிந்து ஆற்றாராய் வருந்திப் பாடியது மனத்தை நெகிழ்விக்கும்; (புறம். 247) வெட்சித்திணையில் உண்டாட்டுக்கு இவர் கூறிய பாட்டு ஆராயத்தக்கது. இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (51, 361) பாடல்களும், அகத்தில் இரண்டும் புறத்தில் இரண்டுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
131. பேரிசாத்தனார்

    இவர் வடவண்ணக்கன் பேரிசாத்தனெனவும் வடம வண்ணக்கன் பேரிசாத்தனெனவுங் கூறப்படுவார்.வடக்கிலிருந்து வந்த நாணய சோதகன்