lv


(நோட்டக்காரன்) பேரிசாத்தனென்பது. பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இவர்கள் காலத்தினர். இச் சேரனுஞ் சோழனும் போர் செய்தபொழுது சோழனுக்குத் துணையாய் நின்ற தேர்வண்மலையனைப் பாடி யுவப்பித்தார்; (புறம். 125) மேற்கூறிய பாண்டியன் நன்மாறனைப் பரிசில் கேட்டு அவன் கொடானாக, இவர் வருந்திக் கூறிய பாடல் ஆராயத்தக்கது; (புறம். 198) நெய்தலையும் குறிஞ்சியையும் சிறுபான்மை பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் கூறிய குறைநயப்பு நுண்ணுணர்வினோரை மகிழ்விக்கும்; (நற். 25) இவர் பாடியனவாக நற்றிணையில் எட்டுப் (25, 37, 67, 104, 199, 299, 323, 378.) பாடல்களும், குறுந்தொகையில் நான்கும், அகத்தில் ஐந்தும், புறத்தில் இரண்டுமாகப் பத்தொன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
132. பொதும்பில் கிழார்

    இஃது ஊர்பற்றி வந்த பெயர். பொதும்பில் பாண்டியநாட்டிலுள்ள தோரூர்; மதுரைத் தாலூகாவிலுளது; இப்பொழுது பொதும்பு என வழங்குகிறது. இவர் இயற்பெயர் புலப்படவில்லை. இவர் வேளாளர். இவர் கூறிய உள்ளுறை யாவரும் வியக்கத்தக்கது. இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துள்ளார். இவர் பாடியது நற். 57 ஆம் பாட்டு.

  
133, பொதும்பில்கிழார் மகனார் வெண்கண்ணியார்

    இவர் மேற்கூறிய பொதும்பில் கிழாரின் புதல்வர்; வெண்கண்ணியென்னும் இயற்பெயருடையவர். வெண்கண்ணி யென்றதனானே இவர் பெண்பாலார் போலுமெனவுமாம்; கிழார் மகனார்", "கிழார் மகன்" என்றிருத்தலானே பெண்பாலாகக் கூற வழியில்லை, இவர் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சிறப்பித்துப் பாடியிருத்தலானே அவ்வரசன் காலத்தினராவார்; (நற். 387) அகத்தில் (130) வெண்கண்ணன் என்றொருவர் காணப்படுகிறார்; அவர்தாமோ இவர் என்றையப்படவுமமையும். அவரும் பாண்டியரைப் புகழ்ந்து பாடியவரே, இவ்வெண்கண்ணியார் நெய்தலையும் பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (375, 387) பாடல்களும் அகத்திலொன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
134. பொய்கையார்

    இஃது ஊர்பற்றி வந்த பெயர்; பொய்கை ஓரூர். இவர் சேரன் கணைக்காலிரும்பொறையின் அவைக்களத்தில் சிறப்புற வீற்றிருந்த புலவர் பெருமான். சேரன் கணைக்காலிரும்பொறைக்கும் சோழன் செங்கணா கோச் செங்கட் சோழனுக்கும் பகைமை மேலிட்டதனால் இருவரும் வெண்ணிப்பறந்தலை (கோயில் வெண்ணிவெளி) யில் பெரும்போர் செய்தார்கள். அப் போரிலே சேரமான் தோற்கச் சோழன் வென்று அச் சேரனைப் பிடித்துக் குடவாயிற் கோட்டத்திற் சிறையிட்டனன். இதனையறிந்த பொய்கையார் சோழனது வெற்றியைச் சிறப்பித்துக் களவழிநாற்பது என்னும் ஒரு நூலியற்றிச் சோழனவைக்களத்து விரித்துக்கூறி தம் அரசனை மீட்டுக்கொண்டார்.