பாடியனவாக நற்றிணையில் இரண்டு (297, 321) பாடல்களும், குறுந்தொகையில் இரண்டும், அகத்தில் ஐந்தும், புறத்திலொன்றுமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன,
138. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
அறுவை வாணிகன் புடைவைவியாபாரி. அவர் வைசியர். புலி முழங்குவதை இடிமுழக்கமாமென்றுகொண்டு குறவர் தினையைக் குவிப்பரென நயம்படக் கூறியுள்ளார்; (நற். 344) பெரும்பாலும் குறிஞ்சி முல்லைகளையும் சிறுபான்மை பாலையையுஞ் சிறப்பித்துப் பாடியுள்ளார். புறாவொடுவிளையாட்டயரும் மைந்தரை நோக்கிக் காதலி வருந்துமென்று தலைவன் கூற்றாக இவர் கூறுவது பாராட்டத்தக்கது; (அகம். 254) இவர் பாடியனவாக நற்றிணையில் 344 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்தில் ஆறும், புறத்திலொன்றும், திருவள்ளுவமாலையிலொன்றுமாகப் பத்துப்பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
மேலே (10) ஆலம் பேரிசாத்தனார் பார்க்க.
139. மதுரை இளம்பால் ஆசிரியன் சேந்தன்கூத்தனார்
இளம்பால் - ஓரூர். ஆசிரியன் எனப்படுதலால் இவர் அந்தணர் மரபினராவர். சேந்தன் என்பது தந்தை பெயர்போலும்; கூத்தன் - இயற்பெயர். இவர் குறிஞ்சியிற் பயின்றவர்போலும்; குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். களவிலே இரவுக்குறிக்குத் தலைவன் வந்துபோதலை நன்சுவை பயப்பப் பாடியுள்ளார், (அகம். 102) இவர் பாடியனவாக நற்றிணையில் 273 பாடலொன்றும், அகத்தில் இரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
140. மதுரை ஈழத்துப் பூதன்றேவனார்
இவர் ஈழநாட்டினின்று மதுரையில்வந்து தங்கிய பூதன் மகன் தேவனெனப்படுவார். ஈழம்-இலங்கை. ஏடெழுதுவார் பிழையினால் இவர் பெயர் மதுரை ஏறத்துப் பூதன்றேவனெனவும் ஈழத்துப் பூதன்றேவனெனவும் காணப்படும். வாடை வீசுங் குளிர்காலத்தே தலைவியைப் பிரிவோர் மடமையுடையரென்று இவர் கூறுவது நன்கறிதற்பாலது. இவர் பாலையையுங் குறிஞ்சியையும் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 366 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் மூன்றுமாக ஏழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
141. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
இவரது பெயரினால் இவர் பெண்பாலரென் றூகிக்கப்படுகின்றது. "நிறையடு காமம் சிறையடு கடும்புனலோ டொத்த" தென்றிவர் கூறியது வியக்கத்தக்கது. இவர் இமயமலையையுங் கங்கையாற்றையுங் கூறியுள்ளார்; மருதம், நெய்தல் இரண்டனையும் நயந்தோன்றப் பாடியுள்ளார். இவர் பாடிய பாட்டு இரண்டு; (நற். 250, 369)