142. மதுரை காருலவியங் கூத்தனார்
இவரைப்பற்றி யாதுந் தெரிந்திலது. பாலையில் நெறியினது ஏதங் கூறியது பாராட்டத்தக்கது. பாலையையே புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியது நற் (325)ஆம் பாட்டு.
143. மதுரைக் கண்ணத்தனார்
இவர் கண்ணத்தனாரெனவும் வழங்கப்படுவர். குறிஞ்சி நெய்தல் வளங்களை நன்றாக ஆய்ந்து பாடியுள்ளார். அந்திமாலையில் மேலைக்கடல் சங்கரநாராயண அவதாரத்தின் தோற்றம் போன்றதென்று கூறியது வியக்கத்தக்கது; (அகம். 360) இவர் பாடியனவாக நற்றிணையில் 351 ஆம் பாடலொன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
144. மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
திருத்தண்கால் பொற்கொல்லன் வெண்ணாகனாரென்பவர் இவராயிருக்கலாமென்று ஊகிக்கப்படுகின்றது; ஆயினும் மதுரையென்றமையின் வேறாகக் குறிக்கப்பட்டனர். இவர் குறிஞ்சியையும் பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் தமது பாடலிற் பொன்செய்காசெனக் கூறிய அருந்தொடர் மொழியாற் பொற்கொல்லனெனத் தெளியப்படுவர். இவர் பாடியனவாக நற்றிணையில் 285 ஆம் பாடலொன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
145. மதுரைச் சுள்ளம்போதனார்
இவர் சுள்ளம்போது என்னுமூரிலிருந்து மதுரையை யடைந்து வைகியவர்; இஃது ஊர் பற்றிவந்த பெயர். நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். மீன் கொழுப்பாலாகிய நெய்யால் விளக்கெரிக்கும் வழக்கம் முற்காலத்து முளதென்று இவர் பாடலாலறியலாகும். இவர் பாடியது நற். 215 ஆம் பாட்டு.
146. மதுரைப்பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
இவர் மருதங்கிழார் மகனார் சொகுத்தனாரெனவும், மதுரைமருதங்கிழார் சொகுத்தனார்ரெனவுங் கூறப்படுவர். இவர் உடன்பிறந்தார், இளம்போத்தனார், பெருங்கண்ணனாரென இருவர், தொகை நூல்களிற் காணப்படுகிறார்கள். இச் சொகுத்தனார் பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இடைச்சுரத்துத் தலைமகன் தலைமகளது உருவெளித் தோற்றங்கண்டு மருளுவதாக இவர் கூறியது சிறப்புடையதாகும். இவர் பாடிய பாட்டு இரண்டு; (நற். 329, 352).
147. மதுரைப் பூவண்டனாகன் வேட்டனார்
பூவண்டல் - ஓரூர். இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். (317)ஆம் பாட்டு.