148. மதுரைப் பெருமருதனார்
இவர் பாடியைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 241 ஆம் பாட்டு.
149. மதுரைப் பெருமருதிள நாகனார்
இவர் பெருமருதனுக்குப் புதல்வனார் போலும். தினையை நோக்கிக் காலம் நீட்டித்துக் கதிரீன்று விளைவாயாகவென்று அதற்குரிய காரணத்துடன் தோழி கூற்றாக இவர் கூறுவது ஆராய்ந்து மகிழவேண்டிய தொன்றாகும். இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற்.251 ஆம் பாட்டு.
மதுரைப் பேராலவாயர்
மேலே (130) பேராலவாயர் பார்க்க
150. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
இவர் மேற்கூறிய சொகுத்தனாரின் உடன் பிறந்தார். நெய்தல் குறிஞ்சி முல்லைகளை நற்சுவை பயக்குமாறு பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 388 ஆம் பாடலொன்றும், அகத்தில் மூன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
151. மதுரை மருதனிளநாகனார்
எழுதுவோர் மிகையால் இவர் பெயர் மதுரைப் பூதனிளநாகனெனவும், மருதனிளநாகனனெனவுங் காணப்படும். இவர் சிவபெருமான் திரிபுரமெரித்ததை விதந்து கூறியுள்ளார்; திருச்செந்தூர் முருகக்கடவுளைப் பாராட்டிக் கூறியுளர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளியிலே துஞ்சிய நன்மாறனைச் செவியுறிவுறூஉப் பாடி இடித்து நெறிநிறுத்தினவர் இவரே; (புறம். 55) இவர் கூறிய மகட்பாற்காஞ்சி வெகுநயமுடையதாயிருக்கும்; புறம். (346) தும்பைத் திணையில் தானைநிலைகூறியது பாராட்டற்பாலது; (புறம். 276) நல்லந்துவனார் பரிபாடலில் திருப்பரங்குன்றைபாடியதனைப் பாராட்டி "தண்பரங்குன்றம் அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை" எனக் கூறியுள்ளார்; (அகம். 59) தொழுனையாற்றுள், வாசுதேவன் குருந்து முறித்ததனைச் சிறப்பித்துள்ளார்; (அகம். 59) சேரமான் சேனாபதி பிட்டனைப் புகழ்ந்துள்ளார். (அகம். 87): நடுகற் சிறப்புக் கூறியுள்ளார்; (அகம். 136, 261, 267, 343, 387.) விடியற் காலத்தில் எருமை மேய்க்கச் செல்லும் சிறுவர் அம் மாடுகளின் மீதேறிச் செல்வதனைக் கூறுகின்றதனோடு வேளிரது வீரைநகரையும் அருகிலுள்ள கடலையும் விதந்து கூறுகின்றார். (அகம். 206) திருவழுந்தூர்த் திதியனுக்குரிய செல்லூரில் பரசுராமமுனி வேள்வி செய்தது கூறுவதுடன் தழும்பனது ஊணூரும் சாயாவனமும் (திருச்சசாய்க்காடு) இவராற் கூறப்பட்டுள்ளன; (அகம். 202) வழுதியின் வெற்றியைப் பாராட்டிக் கூறியுள்ளார்; (அகம். 312) இடையர் தலைவன் கழுவுளென்பானையும் அவனது காழூரையும் புகழ்ந்து பாடியுளர்; (அகம். 365) உள்ளிவிழாவென்னுந் திருவிழா நடப்பதும் அக் காலத்துக் கொங்கர் மணிகளை அரையிற்கட்டியாடுவதும் இவராற் கூறப்பட்டுள்ளன; (அகம். 368)