155. மள்ளனார்
இவரது இயற்பெய ரொன்றொழிய வேறியாதும் தெரியவில்லை. கள்ளூரில் இளமகளொருத்தியின் கற்பழித்தானொருவனைப் பற்றி நீற்றறையிலிட்ட கதையையும் வையை நீராடற் சிறப்பையுங் கூறுகிறார்; (அகம். 256) நெஞ்சை நோக்கி நின் கைப்பட்ட ஒருத்தியை நீ கைவிட்டு ஏமாந்திருக்கலாமோ வென்றது வியப்புடையதாகும்; (நற். 204) இவர் குறிஞ்சியையும் மருதத்தையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 204 பாடலொன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
மாறன்வழுதி
மேலே (113) பாண்டியன் மாறன்வழுதி பார்க்க
மாங்குடிகிழார்
இவரே மாங்குடி மருதனாரெனப்படுபவர். இவர் மதுரைக்காஞ்சி பாடினமையிற் காஞ்சிப் புலவரெனவும் கூறப்படுவர். மேலே (48) காஞ்சிப் புலவன் பார்க்க.
156. மாமூலனார்
இவர் அந்தணர் மரபினர்; முக்காலமும் அறிந்த யோகியார்; இதனைத் தொல், பொருள், 75 ஆம் சூத்திர வுரையில் "பார்ப்பனப் பக்கத்து வகையாவன" என்பதன்கீழ் நச்சினார்க்கினியர் "யோகிகளாய் உபாயங்களால் முக்காலமுமுணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனைநிலை வகையோராவார்" என்று கூறுவதனாலறிக. அறிவன்கலச யோனியாகிய அகத்தியன் என முன்னர்க் கூறியிருத்தலினால் மாமூலனார் அகத்தியரோடு அவர் வகையில் சேர்ந்தவரென்றறியற்பாலது. இவ்வளவு மேம்பாடுற்ற இவர் அகப்பொருட் சுவையை அளவுகடந்து அனுபோக முடையாருஞ் சொல்லமாட்டாதவாறு இன்பம் பெருகத் தெளியக் கூறுவது வியப்புடையதாகும். இதற்கு "எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப்பட்டாலு, முத்தர் மனமிருக்கு மோனத்தே" என்பதொன்றல்லது வேறு காரணங் கூற யான் அறிந்திலேன்.
சைவசமய நூலாகிய திருமந்திரம் எழுதிய திருமூலர் வேறு; இவர் வேறு. இவர் அகத்திற் கூறும் பாடல்களில் யாரையேனுங் கூறாதுவாளா செய்யுள் செய்திலர். அது வருமாறு: ஆவி நெடுவேள்பொதினியைப் பாராட்டியது; (அகம். 1, 61) சந்திரகுப்தன் மகன் துளுவென்பவன் தாபித்த துளுநாட்டையும் (தென் கன்னடம்) நன்னனது பாழியையும் பாராட்டியது; (அகம். 15) மூவேந்தர் தமிழ்நாட்டைக் கூறியது; (அகம். 31) கரிகாற் சோழனொடு கோயில் வெண்ணிப் போர்க்களத்திற் போர் செய்த பெருஞ்சேரலாதன் தோற்றுப் புறப்புண்பட்டு நாணமுற்று உயிர் விடத் துணிந்து வடக்கு நோக்கியிருத்தலும் அதனையறிந்த அவனுக்கு நட்பாளராகிய பல சான்றோர்தாமும் உடனிருந்து உயிர் விட்டமை கூறியது; (அகம். 55) கள்வர் கோமான் புல்லி யென்பவனது வேங்கட மலையைப் புகழ்ந்தது; (அகம். 61) பெருஞ்சோறு பயந்த உதியஞ் சேரலின் கொடையைப் புகழ்ந்தது; (அகம், 65) குடநாட்டைப் புகழ்ந்தது; (அகம். 91) நன்னன் வேண்மான் வியலூரைச் சிறப்பித்தது; (அகம். 97) வடுகர் தலைவன் எருமையென்பானது குடநாட்டைக் கூறுவதுடன் எவ்வியிறந்ததற்குப்