நற்றிணையில் 304 ஆம் பாடலொன்றும், அகத்திலொன்றும், புறத்திலேழுமாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
மிளைகிழான் நல்வேட்டனார்
மேலே (104)நல்வேட்டனார் பார்க்க
மீளிப் பெரும்பதுமனார்
மேலே (128) பெரும்பதுமனார் பார்க்க
158. முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முக்கல் - ஓரூர். ஆசான் என்றதனால் அந்தணராவார். இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆங்கு உள்ளுறை கூறியது ஆராயத்தக்கது. இவர் பாடியது நற். (272) ஆம் பாட்டு.
159. முடத்திருமாறன்
இம் முடத்திருமாறனார் இடைச்சங்கத்திறுதியிற் பாண்டிநாட்டை அரசாட்சி புரிந்தவர். இவர் காலத்துச் சங்கமிருந்த கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டுச் சங்கமழிந்துபோதலும் உடனே இப்பொழுதுள்ள மதுரையிற் கடைச்சங்கத்தை நிலைநிறுத்தினவராவர். இதனை இறையனார் களவியற்கு உரைசெய்த நக்கீரர் முகவுரையானும் சிலப்பதிகாரத்தின் உரைப்பாயிரத்திற்கு மேற்கோளாகக் காட்டப்பட்ட "வேங்கடங்குமரி" என்ற அகவலானுமுணர்க. இவர் பாண்டியர் மரபினர். பாலையையும் குறிஞ்சியையுஞ் சுவைமிகப் பாடியுள்ளார். குட்டுவன் சேரலைப் பாராட்டிக் கூறியிருத்தலானே அவன் காலத்தினரென்றும் அவனொடு நட்புடையாரென்றுங் கொள்க; (நற். 105) இவர் "வெறிகோள்சாபத்து" என்று வடசொல்லைக்கையாண்டிருப்பதால் வடசொல் கடைசி சங்கத் தொடக்கத்தே தமிழிற் கலந்தது தெளிக; (நற். 228) இவர் பாடியவை மேற்காட்டிய இரண்டு பாடல்களே.
160. முதுகூற்றனார்
இவர் உறையூர் முதுகூற்றனாரெனவும் முதுகூத்தனாரெனவும் படுவர். சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியின் தந்தையாகிய வீரைவேள்மான் வெளியன் தித்தனைப் புகழ்ந்து பாடியிருத்தலானே அவன் காலத்தினராகக் கருதப்படுகிறார்; (நற். 58) சோழரது உறையூரையும் காவிரியையும் பாராட்டிக் கூறியுளர்; (அகம். 137) பெரும்பாலும் பாலையையும் சிறுபான்மை குறிஞ்சியையும் நெய்தலையுஞ் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் கூறிய குறை நயப்பு நுண்ணுணர்வினோரை மகிழப் பண்ணுந் தன்மையது; (நற். 28) இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (28, 58) பாடல்களும், குறுந்தொகையில் நான்கும், அகத்தில் இரண்டும், புறத்தில் ஒன்றும், திருவள்ளுவ மாலையில் ஒன்றுமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
161. முப்பேர் நாகனார்
முப்பேர் என்பது ஓரூர். (திருவாடானைத் தாலூகாவில் முப்பையூர் என்று ஒன்றுளது.) இவர் பாலையைப் பாடியுள்ளார். நாளது சின்மை இளமைய தருமை முதலாயவற்றை விரித்துக்கூறுவர். இவர் பாடியது நற். (314) ஆம் பாட்டு.