162. முறுவெங்கண்ணனார்
இவர் வெங்கண்ணனாரெனவும் படுவர். குறிஞ்சித் திணையிற் பாடியுள்ளார். இவர் உள்ளுறை கூறியது வியப்புடையதாகும்; (நற். 232) இவர் பாடியனவாக நற்றிணையில் மேற்கூறிய பாடல் ஒன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
163. மூலங்கீரனார்
இவர் பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; பேய்களை வருணிப்பதில் வல்லவர். முள்முருக்கின் நெற்றைப் பேயின் கைவிரலுக்கு உவமை கூறியது வியக்கத்தக்கது. சோழனாட்டின்கணுள்ள திருச்சாய்க்காட்டை (சாயாவனத்தை)ப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர் பாடியது நற். 73 ஆம் பாட்டு.
164, மோசி கண்ணத்தனார்
மோசி என்பது ஓரூர். திருப்பூவணந்தாலூகாவில் மோசிப்பட்டி யெனவும் பரமக்குடித் தாலூகாவில் மோசுகுடியெனவும் இரண்டு ஊர்கள் காணப்படுகின்றன.) இவ்வூர் மோசிகீரனார், மோசிசாத்தனார், முடமோசியார் எனப்படும் பல வித்துவான்களைத் தன்னிடத்தே தோற்றுவித்து அளவிலாப் புகழைப் பெற்றது. அதன்கண்ணே அவர் குழாத்தில் தோன்றிய இக் கண்ணத்தனார் நெய்தல் வளத்தைச் சிறப்பித்துப் பிரியிற் காமந்தாங்கா திறந்துபடுவதுண்மை யென்பதைக் காரணத்தோடு விளக்கிக் காட்டியிருக்கிறார். இவர் பாடியது. நற். 124 ஆம் பாட்டு.
165. மோசி கீரனார்
இவர் மோசி யென்னும் ஊரிலே தோன்றிய கீரனென்னும் இயற்பெயருடையவர். ஒரோவிடத்துப் படுமாற்றூர் மோசி கீரனெனவுங் கூறப்படுவார். படுமாற்றூர் மதுரையைச் சார்ந்ததோரூர். சிவகங்கைத் தாலூகாவிற் படமாத்தூர் எனவொன்று காணப்படுகிறது. படமாற்றூரில் வந்து தங்கிய மோசி கீரனாரெனக் கொள்க. ஒரு காலத்துச் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை யிடத்துப் பரிசில்பெறச் சென்றிருந்த இவர், அவனரண்மனையிலிருந்து நீராட்டக் கொண்டுபோயிருந்த வீரமுரசம் மீண்டு வருமுன், அம் முரசு வைத்திருந்த கட்டிலிலேறிப் படுத்து உறங்குவாராயினார். அதனை அறிந்த அரசன் தமிழருமை யறிந்தோனாதலின் இவரை யாதோ ரூறுபாடுஞ் செய்யாது இவர் தாமே தூங்கி யெழுமளவும் அருகினின்று சாமரம் வீசிக்கொண்டிருந்தனன்; இவர் விழித்தெழுந்து துணுக்குற்றஞ்சி யியன்மொழி பாடி அரசனை உவப்பித்தார்; (புறம். 50) மற்றொருபொழுது கொண்கானம் (கொங்கணம்) கிழானிடஞ் சென்று பரிசில் வேண்டி இவர் கூறிய பரிசிற்றுறையும், பாணாற்றுப்படையும் இயன்மொழியும் நற்சுவை கொடாநிற்கும்; (புறம். 154, 155, 156) அரசரது கோட்பாடு இத் தன்மையதாயிருக்கற் பாலதென்று இவர் கூறிய பாடல் கவனிக்கத்தக்கது; (புறம். 186) இவர் கூறிய குறைநயப்பு ஏனையோர் பாடல்போன்று நுண்ணுணர்வினோரை மகிழ்விக்கும்; (அகம். 392) பரதவர்கோமான் அதலையென்பவனது மலையையும் ஆஅய் அண்டிரனது பொதிய