மலையையும் பாராட்டிக் கூறியுள்ளார்; (குறு. 59, 84, 376) இவர் நெய்தலையுங் குறிஞ்சியையுஞ் சிறப்பித்துக் கூறியவர். முகம்புகுகிளவி பாடியவரிலிவருமொருவர் - இவர் பாடியனவாக நற்றிணையில் 342 ஆம் பாடலொன்றும் குறுந்தொகையில் மூன்றும் அகத்திலொன்றும,் புறத்திலைந்தும், திருவள்ளுவ மாலையிலொன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்
மேலே (131) பேரிசாத்தனார் பார்க்க
166. வண்ணக்கன் சொருமருங்குமரனார்
நாணய ஆய்வாளராகிய இவர் குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடலில் தலைமகன் இரவில் வருநெறியின் ஏதங்கூறிய பகுதி வியப்பைக் கொடுக்குந் தன்மையது. இவர் பாடியது நற். 257 ஆம் பாட்டு.
167. வண்ணப்புறக் கந்தரத்தனார்
இவரது இயற்பெயர் கந்தரத்தன் என்பது. இவரை ஏனைக்கந்தரத்தனாரின் வேறுபடுத்தவேண்டி, இவரது பாடலில் "வண்ணப் புறவின் செங்காற் சேவல்" என்ற அடியில் புறாவினை வண்ணப்புறவு என்ற சொற் சிறப்பு நோக்கி அச் சொல்லையே இவர்க்கு அடைமொழியாகக் கொடுக்கப்பெற்றவர்; (நற். 71) பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடலிற் செவிலி மனையிருந்து வருந்திய பகுதி மிக்க சுவையுடையதாயிருக்கும். (அகம். 49) இவர் பாடியனவாக முற்காட்டிய இரண்டு பாடல்களே கிடைத்திருக்கின்றன.
168. வன்பரணர்
இவர் கடையெழுவள்ளல்களுள் ஒருவனாகிய கண்டீரக் கோப்பெருநள்ளியைப் பரிசில் வேண்டிப் பாடியவர். அந் நள்ளி வேட்டையாடு மிடத்து இவர் போனபொழுது தன்னை இன்னானென்றறிவிக்காமல் அவன் பரிசு கொடுத்ததாகச் சொல்லும் பாடல் கேட்போர் மனத்தை மகிழ்விக்கும்; (புறம். 148, 149, 150) மற்றொருபொழுது கொல்லியாண்ட வல்வில்லோரியிடத்துச் சென்று பாடிப் பரிசில்பெற்று மீண்டனர்; (புறம். 152, 153) இவர் பாடிய முதுபாலை (கணவனைக் கானகத்தேயிழந்து புலம்புவது) இரங்கத்தக்கதாகும்; (புறம். 255) வினைமுற்றி மீள்வான் நெறியிடைக் கண்டவரை நோக்கிக் கூறியதாக ஒருதுறை புதுவதின் அமைத்தவர் இவரே. (நற். 374) இவர் பாடியனவாக மேற்காட்டிய ஏழுபாடல்கள் கிடைத்திருக்கின்றன.
வாலம் பேரிசாத்தனார்
மதுரை ஆருலவியநாட்டு ஆலம் பேரிசாத்தானரெனவும் ஆலம்பேரி சாத்தனாரெனவுமிவர் கூறப்படுவர்.
மேலே (10) ஆலம்பேரி சாத்தனார் பார்க்க.