lxv


169. விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

    இவர் இயற்பெயர் பெருங்கண்ணனாரென்பது. இவர் பாடலில் மான்குட்டியை விழிக்கட்பேதையென்று கூறிய சொற்சிறப்பால் அதனையே அடைமொழியாகக் கொடுக்கப்பட்டார்; (நற். 242) முல்லைத்திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற். 242 ஆம் பாடலொன்றும், திருவள்ளுவமாலையி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
170. விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

    விற்றூற்று - ஓரூர். வண்ணக்கன் - நாணய சோதகன். தத்தன்-இயற்பெயர். இவ்வூரில் மூதெயினனென ஒரு புலவர் இருந்தனரென்று அகநானூற்றால் தெரிகிறது. இத் தத்தனார் தமது பாடலிற் பாண்டியனையும் அவனது மதுரையையும் பாராட்டிக் கூறுகின்றார். பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற்றிணையில் 298 ஆம் பாட்டு.

  
171. வினைத்தொழிற் சோகீரனார்

    இவர் நெய்தல் வளத்தைச் சிறப்புறப் பாடியுள்ளார். இவர் பாடலில் இரவு நடுயாமத்தில் கடற்கரையூரின் நிலைமை கூறியது ஆராயத்தக்கது. இவர் பாடியது நற்றிணை 319 ஆம் பாட்டு.

  
172. வெள்ளியந்தின்னனார்

    இவர் நெய்தல் வளத்தைப் புனைந்து பாடியவர். கடலில் இறாமீனைப் பிடித்து உணக்குந்திறங் கூறுவது ஆராயத்தக்கது. இவர் பாடியது நற்றிணையில் 101 ஆம் பாட்டு.

  
173. வெள்ளிவீதியார்

    இவர் பெண்பாலார். மதுரையில் வெள்ளியம்பலத் தெருவிலிருந்ததனால் இப் பெயர் பெற்றார்போலும். இயற்பெயர் புலப்படவில்லை இவர் எக்காரணத்தாலோ தம் கணவனை விட்டுப் பிரிந்து தனித்து வைகியவர். காமமேலீட்டினால் தம் மாமைக் கவினைப் பசலையுண்டு அழிக்கக் கடவதென்று சினந்து கூறுவாராயினார்; (குறு. 27) சினந்து கூறியும் என்னோ? பிற்பட்டுத் தனியே யிருத்தலாற்றாது காமமேலீட்டினாற் பலவாறு புலம்பி "என் காமம் பெரிதாயிராநின்றது! இதனைக் களைபவராகிய காதலரும் நீத்தகன்றன" ரெனவும,் "திங்கள் முதலாயவை வருத்தவந்தன" வெனவுங் கூறி வருந்துவாராயினார்; (நற். 335) நாரைவிடுதூது பாடிப் புலம்பியுள்ளார்; (நற். 70) மற்றும் ஆசை தாங்காது இரவினிலையுந் தம்நிலையுங் கூறிவருந்தினார்; (நற். 348) இனித் தேடிச் சென்றால் அகப்படாரோ இவ்வாறு தேடினாலென்னென்று கூறி வருந்தினார். (குறு. 130) அங்ஙனமே புறப்பட்டுச் சிறிதுதூரம் நோக்கிச் சென்று ஆற்றாராய்ப் பாடி வருந்துவாராயினார்; (குறு. 44) அக்காலத்து இவர்பால் நட்புடைய சிலர் வந்து தேற்றத் தேறி "நும்மாற் சிறிது தணிந்தேம், இக்காமநோய் பொறுத்தற் கொவ்வாது கண்டீர்" என்று கூறினார்; (குறு. 58) இந்நோய் சிறிது குறைந்து நாண்மீதூர்ந்துளது; நோய் தலையெடுப்பின் நாணம் கைந்நில்லாது கழியுமென அவர்கேட்பக் கூறியுள்ளார்; (குறு. 146) மாலைக்காலத்துப் புலம்பியழுதுளார்; (குறு. 386) என் காதலர் சுரநெறியே சென்றகன்றனரே; அலர் பெரிதாயிரா