lxvii


நின்றது. ஆதிமந்திபோல வருந்துவேனோவென்று புலம்புவராயினார்; (அகம். 45) கனவிடைக் காதலனைக் கண்டு நனவாகக்கொண்டு அவனைக் கூட்டுவித்தாலன்றி யான் உயிர் வாழலே னென்றிரங்கினார்; (அகம். 362) மற்றொருகாலந் தோழியை நோக்கி நும்மூர்ச் சபை இத்தன்மையாயிருத்தலானே பிரிந்தோரை ஆங்குப் புணர்ப்பிக்கவல்ல மூதறிவாளருளரோ வென்று வினாவினார். உளரேல் தம் காதலனைக் கூட்டுவிக்கவேண்டுமென்பது கருத்து; (குறு. 146)அப்பால் தம் கணவனைச் சென்று கண்டு வருந்தி நும்மைப் பெற்றேமில்லையாயின் எம்முயிர் வீடுவதாகவென்று நொந்து கூறுவாராயினார்; (குறு. 169) இவ்வாறு இவர் கேள்வனைப் பிரிந்து வருந்தி ஆங்குச் சென்றாகிலும் அவனைக் காண்பேமென்று புறப்பட்டுப் போனதனை "வெள்ளி வீதியைப் போல நன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே" என ஒளவையார் எடுத்துக் கூறியதனாலும் அறிக; (அகம். 147) இவ் வெள்ளிவீதியார் கூறிய பாடலனைத்தினையுந் துறைப்பாற்படுத்தி எட்டுத்தொகைக்கட் பின்னுளோர் சேர்த்தார்களென்றறிக. இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று (70, 335, 348) பாடல்களும், குறுந்தொகையில் எட்டும், அகத்தில் இரண்டும், திருவள்ளுவ மாலையிலொன்றுமாகப் பதினான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
174. வெள்ளைக்குடி நாகனார்

    இவர் சோழநாட்டில் வெள்ளைக்குடியின்கணிருந்த நாகனெனப்படுவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தினர். அக்காலத்து இவருக்குள்ள நிலங்களுக்கு வரிசெலுத்த முடியாதவராய்த் தம்மீது நிலுவை நின்றதற் கஞ்சி அரசனைச் "செவியறிவுறூஉ" என்னும் பொருளை அகவலில் அமைத்துப் பாடி அவனது அவைக்களத்துச் சென்று அதனைப் படித்துப் பொருள்கூறித் தாம் செலுத்தவேண்டிய வரியைத் தள்ளி விடும்படி செய்துகொண்டார்; (புறம். 35) இவர் பாடலிலே சந்திரனை நோக்கித் தலைவி முனிந்து கூறுவது வியப்புடையதாகும்; (நற். 196) இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (158, 196) பாடல்களும், புறத்தில் ஒன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
175. வெறிபாடிய காமக்கண்ணியார்

    இவர் பெண்பாலார்; காமக்கண்ணி (காமாட்சி) யாரென்னும் இயற்பெயருடையவர். களவின்கண்ணே, தலைவன் பிரிதலானே தலைவி வருந்தி வேறுபடலும், அதனையறியாத அன்னை கட்டினுங் கழங்கினுங் குறிபார்த்து, இவள் முருகனால் அணங்கப்பட்டாளென்று குறியாலறிந்து வேலனை (பூசாரியை)யழைத்து, அம் முருகனுக்குப் பூசைசெய்து கள்ளை நிவேதித்து யாட்டைப் பலி கொடுத்துத் தன் மகளுக்குற்ற தீது நீங்கும் படி வேண்டிக்கொள்வது வெறியெனப்படும். இதனை விரிவாக அகத்தில் பாடியதனால் இவர் வெறிபாடிய காமக்கண்ணியா ரெனப்பட்டார்; (அகம் 22, 92) புறப் பொருளிற் செறுவிடை வீழ்தற்றுறையும், குதிரை மறமும் பாடியுள்ளார்; (புறம். 271, 302) இவர் நற்றிணையிற் பாடிய பாட்டிலும் (268) வெறியயர் வெங்களத்து வேலனை வினவுகமென்றது வெறிபாடிய பகுதியேயாம். இவர் பாடியனவாக நற்றிணையிலொன்றும் அகத்திலிரண்டும் புறத்திலிரண்டுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

பாடினோர் வரலாறு முற்றிற்று