பாடப்பட்டோர் வரலாறு
1. அஞ்சி
இவன் நற்றிணை 381 ஆம் பாட்டில் ஒளவையாரால் புகழ்ந்து கூறப்படுகிறான். இவன் கதை வருமாறு :-
இவன் அதியமானெடுமா னஞ்சியெனவும் பெயர்பெறுவன். அதியர் மரபினனாதலின் அதியமானெனக் கூறப்படுவான். இயற்பெயர் அஞ்சி யென்பதுபோலும் - "ஆர்கலி நறவி னதியர்கோமான், போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி"; (புறம். 91) இதனை அகம். 352 இல் "அஞ்சி அத்தை மகனார்" என்ற வாக்கியத்தாலும் பிறவற்றாலும் தெளிக. கொல்லிக்கூற்றத்து மலையினின்று இவன் பெருஞ்சேர லிரும்பொறையொடு போர் செய்தவனென்று பதிற்றுப்பத்து எட்டாம் பதிகத்தாலறியப்படுதலால், இவனது தகடூர் கொல்லிக்கூற்றத்தின் கண்ணதெனக் கொள்க. இவன் சேரமானுக்கு உறவினனாதலால் பனைமாலையுடையவன்; குதிரைமலைக்குத் தலைவன்; இவன் முன்னோர்க்கு வரங்கொடுக்கும்பொருட்டுத் தகடூரின் கண்ணே வானவர் வந்து தங்கிய சோலை யொன்றிருந்தது; (புறம். 99) வேற்று நாட்டுச் சென்று அங்குள்ள கரும்பைக் கொண்டு வந்து இந்நாட்டிற் பரவச் செய்தவர் இந்த அஞ்சியின் முன்னோரே; (புறம். 99)
ஒருகாலத்து இவன் தன்பாற் பாடிச்சென்ற ஒளவையாருக்கு யாதும் பரிசில் கொடானாகி நீட்டிப்ப, அவர் வெகுண்டு மீள்வாராயினார்; (புறம். 206) அதனை யறிந்த அஞ்சி அஞ்சிவந்து உடையும் நெல் முதலிய பிறவும் அளவுகடப்பக் கொடுத்து அவரால் புகழ்ந்து பாடப்பெற்றான்; (புறம் 390) பிறிதொருபொழுது இவன் மாற்றரசனுக்கு அஞ்சித் தன்னினத்தோடு காட்டகத்து ஒளிந்திருந்தனன். "சினமிகு முன்பின் வயமா னஞ்சி, யினங்கொண் டொளிக்கு மஞ்சுவரு கவலை"; (அகம். 115) அஞ்சி யொளித்ததனால் அஞ்சியெனப்பட்டான் எனவுங் கருதற்கிடனாகிறது. ஒருபோது இவனது கொடைத்தன்மையாற் பாண்மகளாகிய ஒளவையார் புதியனவாகச் சில பாடல் பாடிப் பொருள் கூறக்கேட்டு மகிழ்ந்திருந்தனன்; அதனையறிந்த இவனின் அத்தை மகனாற் புகழ்ந்து பாடப்பெற்றனன்; (அகம். 352) வேறொருகாலத்து இவன் திருக்கோவலூரை வென்றபொழுது பரணராற் புகழ்ந்து பாடப்பெற்றான். (அகம். 372) அதனையெடுத்துக் காட்டிப் பரணராற் பாடப்பெற்ற நீயன்றோ வென்று ஒளவையார் சிறப்பித்துக் கூறியுள்ளார். (புறம். 99) இவனொருகால் மலைமேற் சென்றபொழுது அங்கு விடரிலுள்ள கருநெல்லியின் பழத்தைக்கண்டு அதனையுண்டார் சாவாது நெடுங்காலம் உயிரோடிருப்பரென்பதனை அறிந்ததனால் அப்பழத்தைப் பறித்துவந்து ஒளவையார்க்குக் கொடுத்து உண்பித்து அப்பால் அதன் சிறப்பைக் கூறி அவராற் பாடப்பெற்றான். (புறம். 91) பெருஞ்சித்திரனா ரென்னும் புலவர் பரிசிலுக்கு வந்திருக்கிறாரென்று கேள்வியுற்றவளவிலே அவரை நேரிற் காணாமற் பரிசில் வரவிடுத்தனன். அதனை அவர் ஏற்றுக்கொள்ளாராய் வெறுத்துப் பாடப்பெற்றான்; (புறம். 208) ஒளவையாரால் பலகால் புகழ்ந்து பாடப்பெற்றவன். (நற். 381 குறு: 91.) (புறம்.