87, 95) நெடுநாட் பிள்ளைப்பேறின்றி அரிய தவத்தாற் பிறந்த தன் மகனைப் பார்க்க எண்ணி அப்பொழுது வேற்றுநாட்டிலே தான் செய்யும் போரை நிறுத்தித் தான் கொண்ட போரக்கோலத்தோடு வந்து நோக்கியகாலை ஒளவையாராற் புகழ்ந்து பாடப்பெற்றான்; (புறம். 100) இவன் கோவலூரை அழித்துக் கைக்கொண்டதனால் அதன் தலைவனாகிய மலையமான் திருமுடிக்காரி இவனை எதிர்க்க வலியின்றித் தோற்றோடிப்போயினன். அங்ஙனஞ் சென்ற காரி தான் மூவேந்தர்க்குந் துணைபோகக் கூடியவனாதலிற் (புறம். 122) பேரரசனாகிய பெருஞ்சேரலிரும்பொறையை யடுத்து நிகழ்ந்தது கூறி அங்கு வைகுவானாயினான். அந்நாளிற் பெருஞ் சேரலிரும்பொறை கொல்லிமலையைத் தான் பெற வேண்டுமென்னுங் கருத்துடையனாதலை யறிந்த காரி படையொடு சென்று கொல்லிமலையை அரசாண்டிருந்த வல்வில்லோரியைப் போரிலே கொன்று அம் மலையைச் சேரமானுக்குக் கொடுத்துவிட்டனன்; (அகம். 208, 209) அது தேன் முதலாய மிக்க வருவாயையுடையது. "கொல்லிமலைத் தேன்சொரியுங் கொற்றவா" (கம்பர்) என்பதனாலறிக.
பின்பு திருமுடிக்காரியின் முயற்சியாலே சேரமான் படையெடுத்துத் தகடூரை முற்றுகை செய்தான். அதனை யறிந்த அஞ்சி தனக்கு நட்பாளராகிய பாண்டியனுக்குஞ் சோழனுக்குந் தூதுவிடுத்து அவர் வருவதற்குச் சிறிது காலம் தாழ்த்தமையாலும் தகடூர் மிக்க வீரராற் காக்கப்படுதலாலும் தன்னூர் பகைவராற் பிடித்தற்கரியதென்று எதிர்த்துப் போர்புரியாது தகடூரினுள்ளேயே யிருந்துவிட்டான்; (தொல்,பொருள் 62 உரை) பாண்டியருஞ் சோழரும் படையொடு தனக்குத் துணையாக வந்தவுடன் அக் கொல்லிக் கூற்றத்திலேயே பெரும்போர் நடந்தது; (பதிற்றுப்பத்து எட்டாம்பத்து பதிகம்) அப் போர் செய்தற்குச் சேரமான் புறப்பட்டது முதல் போர்புரிந்து வென்று மீண்டு வருமளவும் நிகழ்ந்தவற்றைக் கூறுநூல் தகடூர் யாத்திரை எனப்படும். அப் போர் நிகழுங் காலத்து ஒளவையார் பாடின பாடல்கள் பல.
அப்போரில் அதியனெழினி யென்பான் யானையெறிந்த வேல்பாய்ந்திறந்தா னென்று தெரிகின்றது. அவன் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியோவென் றையப்படுதற்கிடமாகிறது- "அதிய னெழினி யருநிறத் தழுத்திய, பெருங்களிற் றெஃகம் போல", (அகம். 216)
பின்னர்ப் புண்பட்டு நின்று (புறம். ") ஈற்றிற் பகைவரெறிந்தவேல் மார்பிலே பாய அதனாலிறந்தான்; (புறம். 235) இவனுக்குத் துப்பாகிவந்த சோழனும். பாண்டியனுந் தத்தங்குடையுங் கலனும் முரசும் களத்தே போட்டோடிவிட்டார்கள்; (பதிற். எட்டாம் பத்து, பதிகம்) அக்காலத்து ஒளவையார் புலம்பி யழுத பாடல் கேட்போரிரங்குந் தன்மையது; (புறம். 235) பின்பு அவனைத் தகனஞ் செய்து விட்டு (புறம். 231) அவ்விடத்திலே கல்நாட்டிவிட்டார்கள்; (புறம். 232) அஞ்சியை வென்ற பெருஞ்சேரல் இரும்பொறை அவனது குதிரைமலையைக் கைப்பற்றித் தன் சேனாபதி பிட்டங்கொற்றனுக்கு முற்றூட்டாக அளித்தனன். இவனை நற்றிணையிற் பாடியது ஒளவையார்.
இந்த அஞ்சி மரபு கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்னரும் இருந்ததாகத் தெரிகிறது. இது விடுகாதழகிய பெருமாள் சாதனமொன்றில் வரும்.