ஆரவாரத்தோடு சென்றுவந்தா னென்பதாம். "குறுக்கையென்பது கும்பகோணம் புகைவண்டி நிலையத்துக்குத் தென்பால் இரண்டு மைல் தூரத்திலுள்ளது. வைப்பூர் நாகப்பட்டினந் தாலூகாவிலுள்ளதோரூர.் அன்னியின் கதையைக் கூறும் நற்றிணை 180 ஆம் பாட்டைப் பாடினார் பெயர் தெரியவில்லை.
5. ஆஅய் அண்டிரன்
இவன் கடையெழுவள்ளல்களுள் ஒருவன்: பொதியின் மலைத்தலைவன் ஆங்கு இவனிருந்த ஊரைப் பிற்காலத்தார் ஆய்குடி என்று பெயரிட்டனர். ஆஅய் எயின னென்பானொருவ னுளன்: அவன் சேரமானிடத்து நட்புடையனாயிருந்து பாரமென்னுமூரில் நடந்த போரில் மிஞிலியாற் கொல்லப்பட்டான். அவனின் இவன் வேறென்பது தெரியவேண்டி ஆஅய் அண்டிரனெனக் கூறுவர். இவனை அகத்தில் பாடியவர் உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனாரும் பரணரும் இவன் சுரபுன்னைப் பூமாலையுடையவன். கொங்குநாட்டாரோடு போர்செய்து அவர்களைப் புறங்காட்டி யோடச்செய்தவன். பாம்பு பெற்றுக்கொடுத்த நீலவுடையைச் சிவபெருமானுக்குக் கொடுத்தவன்:் (சிறுபா. 96, 99)) கவிரம் என்னும் மலைப்பக்கம் இவனுடையதே. அண்டிரனென்பது ஆந்திரனென்னுந் தெலுங்கச் சொல்லின் திரிபாதலின் இவன் தெலுங்க நாட்டினனெவும், அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிரைக் கொணர்ந்தாரென் றிருத்தலானே இவன் அவராற் கொண்டுவரப்பட்ட வேளிர் மரபினனெனவுங் கூறுவர். அந்தணர் பெருமானாகிய ஏணிச்சேரி முடமோசியார் சோழன் முடித்தலைக்கிள்ளியைப் பாடிச் சிறந்த பரிசிலொன்றும் பெறாராய்ப் (புறம். 132) பின்பு ஆஅய் அண்டிரனைப் பரிசிற்றுறையாகவும் வாழ்த்திய லாகவு மமைந்த (புறம். 135, 375) பாடல்களாற் புகழ்ந்து அவனால் அளவுகடந்த பரிசில் கொடுக்கப்பெற்றனர். ஏனைப் புலவர்களுக்கும் ஆஅய் யானை முதலாகிய பலபல பரிசில் கொடுத்து ஓம்பினோனென்பது புறம். 129, 130, 131 ஆம் பாட்டுகளா னறியப்படுகின்றது. இவனைத் துறையூர் ஓடை கிழார் என்னும் புலவர் தம் வறுமையை முற்றும் புலப்படுத்திக் கூறிய புறம். 136 ஆம் பாடல் நோக்குவா ரிரங்கத்தக்கது. இவன் கொடுத்த கொடை மலைப்படு மமிர்தாகிய சந்தனமும் யானைமருப்பும் ஆடுநடைப் புரவியுங் களிறுந் தேரும் வாடாயாணர் நாடும் ஊருமாம்: (புறம். 240, 374)
இவன் உரிமை மகளிராகப் பல மாதரை மணந்து இசைபட வாழ்ந்து வருநாளில் மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையரெனினும் வாழுநாளுலந்தான் மாய்வது திண்ணமென்பராதலின் அங்ஙனமே இவ் வாஅய் அண்டிரனும் புகழுடம்பை நிறுத்தி இறந்தொழிந்தான். இறந்த இவனை எரிவாயீமத் தேற்றலும் இவனுடைய உரிமை மகளிர் பலரும் ஒருசேரக் காட்டமேறித் துறக்கஞ் சென்றனர்: (புறம். 240) அப்பொழுது விசும்பிலே தேவரெதிர்கொள்ளு முழவொலி அங்குள்ளார் யாவர்க்குங் கேட்டது: (புறம். 241) இவனிறந்த பின்பு புலம்பி வருந்தினவர் குட்டுவன் கீரனாரும், முற்கூறிய மோசியாருமே: புறம். 240, 241 மோசியார் பற்பல பாடல்கள் இவன் மீது பாடினமையின் "மோசி பாடிய ஆயும்" என்று சிறப்பித்துக் கூறினார் பெருஞ்சித்திரனார்: (புறம். 158)இவனை நற்றிணை 167 இல் பாடினார் பெயர் காணப்படவில்லை.