இவன் கடையெழுவள்ளல்களுள் ஒருவன்; வல்விலோரி யெனவும், ஆதனோரியெனவும் கூறப்படுவான், கொல்லிமலையையும் அதனைச் சூழ்ந்த நாட்டினையும் அரசாண்டிருந்தவன் - "ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி"
(அகம். 201;) "வல்வில் லோரி கொல்லிக் குடவரை"
(குறு. 100) இரவலர்க்கு வரையாது கொடுக்கும் வண்மையன். இவன் கொல்லி மலையை ஆண்டுவருநாளில் அதியமா னெடுமானஞ்சி சென்று திருக்கோவலூரை முற்றி வென்று கைப்பற்றிக்கொண்டான். அதனை ஆண்டிருந்த மலையமான் திருமுடிக்காரி அஞ்சியொடு போரில் எதிர் நிற்கலாற்றாது தோற்றோடிச் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையிடம் அடைக்கலம் புகுந்தான். அச் சேரமான் கொல்லிமலையைத் தான் பெற வேண்டுமென்னுங் குறிப்புடையனாதலை யறிந்த காரி படையொடு சென்று கொல்லிமலையில் ஓரியுடனே போர்புரிந்து ஓரியைக் கொன்று தான் மிக்க ஆரவாரத்தோடு ஓரியினது நகரினுட் புகுந்தான்; அங்ஙனம் புகுதலும் ஊர் முழுதும் ஒல்லென்னும் ஒலியுண்டாயிற்று; "ஓரிக்கொன்றவொருபெருந் திருவிற், காரி புக்க நேரார் புலம்போற், கல்லென் றன்றாலூரே"
(நற். 320) பின்னர் அக் கொல்லிமலை முதலியனவற்றைச் சேரலனுக்கே கொடுத்துவிட்டனன்; "முள்ளூர் மன்னன், கழறொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வி, லோரிக் கொன்று சேரலற்கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி"
(அகம். 209) இவ்வோரியை நற்றிணையில் 6 ஆம் பாடலிலும் 265 ஆம் பாடலிலும் சிறப்பித்தவர் பரணர்; 320 இல் சிறப்பித்தவர் கபிலர்.
8. காரி
இவன் மலையமான் திருமுடிக்காரி யெனவுங் கூறப்படுவன்; மலையமான் நாடாகிய திருக்கோவலூர்ப்பக்கத்தை அரசாண்டவன்; கடையெழுவள்ளல்களுள் ஒருவன்; சேரசோழ பாண்டியர்களுக்குப் படைத் துணையா யிருப்பவன்; புலவர்க்குப் பலபலவாகப் பரிசுகொடுத்து ஆதரிப்பவன்; புலவர்க்குத் தேர்கொடுத்தலானே தேர்வண்மலையனெனப்படுபவன;(நற். 100)முள்ளூர்மலையை யுடைமையின் "முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி" எனவுங் கூறப்படுபவன்; கபிலராலும் பரணராலும்