அஃது இயங்குவதையும் நகைப்பதையுங் கண்டு மடந்தைபோலுமென்று மயங்கிக் காமநோய் கொண்டு கிடந்து மடிவரென்பதாம். இது நகைத் துயிர் வாங்குமென்பது "திரிபுரத்தைச் செற்றவனுங் கொல்லி செழும்பா வையுநகைக்கக், கற்றதெல்லா மிந்த நகை" கண்டேயோ (சித்திரமடல்) என்பதனாலறிக. இப் பாவை காற்று இடி மழை முதலாயவற்றாற் கெடாதென்பதை நற். 201 ஆம் செய்யுளாலறிக. இப் பாவையைக் கூறுவது நற். (185, 192, 201) ஆம் செய்யுள்கள்.
11. சேந்தன்
இவன் அழிசியின் மகன்; இவன் வரலாற்றினை மேலே 3 அழிசியின் வரலாற்றுட் காண்க.
12. தழும்பன்
இவன் ஒரு கொடையாளி; ஊணூர் என்னும் நகரத்தின் தலைவன.் போரிற் புண்பட்ட அழகுடையவன் என்று பரணரால் சிறப்பிக்கப்பட்டவன்;(நற். 300) அத் தழும்புடைமையின் தழும்பனெனப்பட்டான். இவன் இயற்பெயர் புலப்படவில்லை. "தூங்கல் பாடிய வோங்குபெரு நல்லிசைப், பிடிமகி ழுறுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன், கடிநகர் வரைப்பி னூணூரும் பரவி" என அகம். 227 இல் நக்கீரனாராற் சிறப்பித்துப் பாடப்பெற்றவன். ".....கண் கொண்ட தீந்தேனிரியக், கள்ளரிக்குங் குயஞ்சிறுசின், மீன் சீவும் பாண்சேரி, வாய்மொழித் தழும்ப னூணூ ரன்ன...... வருந்தலமன் னெம் பெருந்துறை மரனே" - எனப் பரணராற் (புறம். 348)இல் புகழ்ந்து பாடப்பெற்றவன். இவனைப் பாடியவர் பரணர்; (நற். 300)
13. நன்னன்
இவன் மலையாளம் சில்லாவின் மேல்பால் மேலைக் கடலோரத்திலுள்ள பூழி நாட்டையாண்ட ஒரு சிற்றரசன்; சேரர் பரம்பரையைச் சேர்ந்தவன். "நன்னன் உதியன் அருங்கடிப் பாழி" -(அகம். 258) உதியன்-சேரன். இவன் சிற்றரசனாதலின் வேள் என்னும் பட்டமெய்தினான். "நறவுமகி ழிருக்கை நன்னன் வேள்மான்" - (அகம். 97) பாண்டியர் நாயக்கர்க்குக் கப்பங்கட்டத் தொடங்கியபின் வேள் எனப்பட்டஞ்சூடியது இங்கு நோக்கத் தக்கது-சீவலவே ளெனமகுடஞ் சூடினானே." இந்நன்னனது பூழிநாடும் பிறவுங் கொங்கண தேசமெனப்படும்; "பொன்படு கொண்கான நன்னன்"- (நற். 391)(கொண்கானம் - கொங்கணம்) கடம்பின் பெருவாயில், பாரம், பிரம்பு வியலூர் - இவை இவனுடைய ஊர்கள்; பதிற்று 6 ஆம் பதிகம்; (அகம். 152, 356, 97)இவனாடு மிக்க நீர்வளமுடையது; (அகம். 396) ஏழில்மலை, பாழிச்சிலம்பு - இவனுடைய மலைகள்; (அகம். 152) [ஏழில்மலை மேலைக் கடலருகிலுள்ள கன்னனூரிலிருந்து வடக்கே 18 மைலில் உள்ளதொரு மலை. ஏழில்மலையென்ற புகைவண்டி நிலையமுமுள்ளது; அதனைச் சப்த சைலமெனப் பலருங் கூறுவர்.] பாழியை முன்பு வடுகர் கைப்பற்றி ஆண்டுவருநாளில் சோழன் நெய்தலங்கானலில் உள்ள இளஞ்சேட் சென்னியென்பவன் படையொடு சென்று பொருது வடுகர்களைக் கொன்று பாழியையும் அழித்து மீண்டான்; அதனால் இவன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி