vii


உரையாசிரியர் முகவுரை

    நற்றிணை நானூறென்னும் இந்நூல் மதுரைமாநகரில் முன்னாளில் நிலையிட்ட தமிழ்ச் சங்கத்திருந்த புலவர் பலராலும் பாடப்பெற்ற எட்டுத் தொகையுள் ஒன்று.

    பலபல காலத்திற் பற்பல புலவர்களாற் பாடப் பெற்ற அகவற் பாக்களும் பரிபாடலும் கலிப்பாக்களுமாக அகத்திணை, புறத்திணை இரண்டனையுந் தழுவிச் சுமார் இரண்டாயிரத்தைஞ்ஞூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் முன்னிருந்தன.

    அவற்றை, அக்காலத்துள்ள அரசர்கள் கட்டளைப்படி, புலவர் பலர் அகத்திணைக்குரிய செய்யுட்களில் நாலடி முதல் எட்டடி வரையிலுள்ள நானூறு அகவற்பாக்களைத் தொகுத்துக் குறுந்தொகை எனவும், ஒன்பதடி முதல் பன்னிரண்டடி வரையிலுள்ள நானூறு அகவற்பாக்களைத் தொகுத்து நற்றிணை எனவும், பதின்மூன்றடி முதல் முப்பத்தேழடி வரையிலுள்ள நானூறு அகவற்பாக்களைத் தொகுத்து நெடுந்தொகை எனவும், (இதுவே அகநானூறென்பது.) தனித்தனி ஐந்து புலவர்களாற் செய்யப்பெற்ற ஐஞ்ஞூறு அகவற்பாக்களைத் தொகுத்து ஐங்குறுநூறு எனவும், பரிபாடலுறுப்பாற் செய்யப்பெற்ற எழுபது பாடல்களைத் தொகுத்துப் பரிபாடல் எனவும், கலிப்பாவாற் செய்யப்பெற்ற நூற்றைம்பது பாடல்களைத் தொகுத்துக் கலித்தொகை எனவும், புறத்திணைக்குரிய நானூறு அகவற்பாக்களைத் தொகுத்துப் புறநானூறு எனவும், தனித்தனி பத்துப்புலவர்களாற் செய்யப்பெற்ற நூறு அகவற்பாக்களைத் தொகுத்துப் பதிற்றுப்பத்து எனவும் பெயரிட்டுத் தொகை நூல் எட்டாக்கினார்கள்.

     அவ்வெட்டுத்தொகையுள் முதலாவதாக 1 அமையப்பெற்ற இந் நற்றிணையைச் சோதித்து அச்சிடவேண்டு மென்னும் விருப்புற்றிருக்கையில், என் நண்பரும், மன்னார்குடி மிசன் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் நாராயணசாமிப்பிள்ளை அவர்களின் குமாரரும், போலீசில் உத்தியோகம் வகித்திருப்பவருமாகிய ஸ்ரீமத். நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் யான் பொருளுக்கு முட்டுப்பாடுறாது வேண்டிய அளவு உதவி, ஏடுகள் தருவித்துச் சோதிக்கும்படி செய்தார்கள். அதன்பின் ஸ்ரீசுவாமி வேதாசலம் அவர்களுடைய முயற்சியைக்கொண்டு சென்னை இராசாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள பிரதியைக் காப்பிசெய்து தருவித்து ஒருவாறு திருத்தி வருகையில் மஹா மஹோபாத்தியாய பிரம்மஸ்ரீ உ.வே. சாமிநாதையரவர்கள் இரண்டு படிகள் அனுப்பினார்கள். அவற்றோடு ஒப்புநோக்கிய பின் மதுரைத் தமிழ்ச்சங்கஞ் சென்று அங்குள்ள படிகளோடு ஒப்புநோக்கினேன், பின்பு சென்னையிலிருக்கும் ஸ்ரீமான் தி. த. கனகசுந்தரம் பிள்ளை அவர்கள் தம்மிடத்திலிருந்த படிகள் இரண்டனையுங் கொடுத்துதவினார்கள். அவற்றினையும் பெற்று ஒருவாறு திருத்தி எனது அறிவிற்கெட்டியவாறு ஓர் உரையை எழுதி அச்சிடத்தொடங்கிய காலையில், வி. கோபாலசுவாமி இரகுநாத ராஜாளியாரவர்கள் (அரித்துவாரமங்கலம்) கெ. சுந்தரராம ஐயர் அவர்கள், டி.ஏ. பாலகிருஷ்ண உடையாரவர்கள், ராவ்பகதூர் கே. கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் (கும்பகோணம்), க. ப. சிதம்பரதேவரவர்கள் (தோலி), சி. வயி. அருணாசலம் செட்டியார் அவர்கள் (முத்துப்பேட்டை), சிதம்பர சபாபதிப்பிள்ளை அவர்கள் (மண்ணுக்குமுண்டான்), ஐ. சின்னசாமிப்பிள்ளை அவர்கள் (பாலைக்காடு) முதலிய தமிழபிமான சீலர்களின் பேருதவியால் ஒருவாறு அச்சிட்டு முடித்தனன்.

    எனக்குக் கிடைத்த எல்லாப் படிகளுள்ளும் 234 ஆவது பாடலும், 385 ஆவது பாடலிற் பிற்பகுதியும் காணப்படவில்லை. அவற்றையுந் தேடிச் சேர்த்த பின்னரே வெளியிட வேண்டுமென்றிருந்த யான் காலதாமதப்படுவதைக் கருதி அவை கிடைப்பின் மறுமதிப்பிற் சேர்த்துவிடலாமென்னு மெண்ணத்தோடு இதனை வெளியிடலானேன்.

    
                    அ. நாராயணசாமி ஐயன். 
  
 1. 
நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியே யகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை