(து - ம்.) என்பது, தலைவனுடன் பின்வருவேனென்ற தலைவியை நோக்கி 'நீ மாலைப்பொழுது தனியிருப்பதற்காற்றேனாதலின் நும்மொடு வருவேன் என்கின்றனை, கொடிய பாலை நெறியின்கண்ணே செல்லுகின்ற வன்மை உடையையாதல் நினக்குப் பொருந்துவதொன்றாமோ, ஆகாதன்றே? ஆதலின் நீ வரற்பாலையல்லை கா'ணெனத் தெளியக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "உடன் சேறற் செய்கையோடு அன்ன பிறவும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| மனையுறை புறவின் செங்கால் பேடைக் |
| காமர் துணையொடு சேவல் சேரப் |
| புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் |
| தனியே யிருத்தல் ஆற்றேன் என்றுநின் |
| 5 | பனிவார் உண்கண் பைதல கலுழ |
| நும்மொடு வருவல் என்றி எம்மொடு |
| பெரும்பெயர்த் தந்தை நீடுபுகழ் நெடுநகர் |
| யாயொடு நனிமிக மடவை முனாஅது |
| 1 வேலின் இற்றித் தோயா நெடுவீழ் |
| 10 | 2 வழிநாள் ஊசலின் கோடை தூக்குதொறும் |
| துஞ்சுபிடி வருடும் அத்தம் |
| வல்லை யாகுதல் ஒல்லுமோ நினக்கே. |
(சொ - ள்.) பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் - பெரிய சீர்த்தியையுடைய தந்தையினது நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையின்கண்ணே; யாயொடு நனிமிக மடவை - ஈன்ற தாயொடு பிரியாது வைகும் மிக்க இளமையுடையாய்!; முனாது மனை உறை புறவின் செங்கால் பேடை காமர் துணையொடு சேவல் சேர - முன்பு மனையிடத்து உறைகின்ற சிவந்த காலையுடைய புறாவின் பேடையாகிய அழகிய தன் துணையொடு அதன் ஆண்புறாவாகிய சேவல் கூடி மகிழாநிற்ப; புலம்பின்று எழுதருபுன்கண் மாலைத் தனியே இருத்தல் ஆற்றேன் என்று - அவற்றை நோக்கி வருத்தமுடையதாகும்படி எழுகின்ற துன்பஞ் செய்யும் மாலைப்பொழுதிலே தனியே இருப்பதற்கு ஆற்றேனாவேன் என்று; நின் பனி வார் உண்கண் பைதல கலுழ எம்மொடு - நின் நீர் வடிகின்ற மையுண்ட கண்கள் துன்புற்றனவாய்க் கலுழா நிற்ப எம்மை நோக்கி; நும்மொடு வருவல் என்றி - யான் நும்முடனே நீயிர் செல்லுமிடத்து வருகிற்பேன் என்று கூறாநின்றனை; வேலின் இற்றித் தோயா நெடுவீழ் - வேற்படை போலும் இலையையுடைய இத்தி மரத்தினுடைய நிலத்திலே படாது தொங்குகின்ற நெடிய விழுது; வழி நாள் கோடை தூக்குதொறும் - வைகறையில் மேல் காற்று வீசுந்தோறும்; ஊசலின் துஞ்சு பிடி வருடும் - ஊசலாடுதல் போன்று கீழே துயிலுகின்ற பிடியானைமீது புரளா நிற்கும்; அத்தம் வல்லை ஆகுதல் நினக்கு ஒல்லுமோ - பாலையின் கண்ணே செல்லுதல் நினக்குப் பொருந்துவ தொன்றாகுமோ? ஆகாதன்றே! ஆதலின் நீ வரற்பாலை அல்லைகாண்; எ - று.
(வி - ம்.) இற்றி - இத்திமரம். இச்சிமரமென இக்காலத்து வழங்கப்படுவது. முனாது - முன்பு: யான் புறப்படுமுன்பு வருவலென்றி யென்க.புறவின் சேவலும் பெடையுங் கூடக்காண்டலின் வேட்கை தாங்காது தானுங் கூடக்கருதித் தனியிருத்தலாற்றேனென்றாள்; அதனைத் தலைமகன் கொண்டு கூறினானாயிற்று. நீரும் நிழலுமின்றி முள்ளும் பரலும் நிரம்பிய பாலையாதலை நீ புறம்போந்து அறிந்திலையென்பான் தாய் ருங்ககலாத நனிமிக இளமையையென்றான்.
இறைச்சி :- கோடை தூக்குதொறும் இத்தி வீழ் பிடியை வருடா நிற்குமென்றது, யான் சென்று மீண்டு வருமளவும் நினக்கு இடையே ஆற்றாமை யுண்டாகியவழி தோழி நின்னை ஆற்றுவியாநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - மருட்கை. பயன் - தலைவியை ஆற்றுவித்தகலுதல்.
(162)
(பாடம்) 1. | வேனில் இற்றி. 2. | வழி நாரூசல். | |