திணை : நெய்தல்.

     துறை : இது, தலைமகன் பகற்குறிவந்து மீள்வானது செலவு நோக்கித் தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது

     (து - ம்) என்பது, பகற்குறிவந்த தலைமகன் மீண்டு போகும் பொழுது அவன் செல்லுதலை நோக்கிய தலைவி புலம்புகின்றவள், "கானற்சோலையும் விளங்குதல் குறைவதாயிற்று; காதலன் ஏறிச் செல்லுந் தேருஞ் சென்று மறையாநிற்கும்; ஆதலின் இவ்வூரொடு, நாம் அவனை முயங்கியிருந்த சோலை இனி நமக்கு எவ்வண்ணமாகத் தோன்றாநிற்கு"மென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, ""பிரிந்தவழிக் கலங்கினும்"" (தொல். கள. 20)என்னும் விதிக்கொள்க.

    
நெய்தல் கூம்ப நிழல்குணக்கு ஒழுகக் 
    
கல்சேர் மண்டிலஞ் சிவந்துநிலந் தணியப் 
    
பல்பூங் கானலும் அல்கின் றன்றே 
    
இனமணி யொலிப்பப் பொழுதுபடப் பூட்டி 
5
மெய்ம்மலி காமத்து யாந்தொழுது ஒழியத் 
    
தேருஞ் செல்புறம் மறையும் ஊரொடு 
    
யாங்கா வதுகொல் தானே தேம்பட 
    
ஊதுவண்டு இமிருங் கோதை மார்பின் 
    
மின்னிவர் கொடும்பூண் கொண்கனொடு 
10
இன்னகை 1 மேவநாம் ஆடிய பொழிலே. 

     (சொ - ள்) நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகக் கல்சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய - நெஞ்சமே! நெய்தலின் மலர் குவிய நிழல்களெல்லாம் கீழைத்திசையைச் சென்றடைய மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றைச் சென்று புகுகின்ற ஆதித்த மண்டிலம் சிவந்த நிறமுற்று நிலத்தின் கண்ணே தான் காட்டிய கொடுமை முற்றும் தணியாநிற்ப; பல் பூங்கானலும் அல்கின்று - பலவாய மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் தன் தோற்றப் பொலிவு குறைவதா யிராநின்றதுமன்; மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய - இப்பொழுது உடம்பில் மலியப்பெற்ற காமத்தையுடைய யாம் அக் காமத்தைத் தணிக்கும் வகையைப் பெறாது பின்னே நின்று தொழுது ஒழியும்படி; பொழுதுபட மணி இனம் ஒலிப்பப் பூட்டி தேர் செல் புறம் மறையும் - பொழுது படலும் மணியினம் ஒலிப்பக் குதிரைகளைப் பூட்டப்பட்டுத் தேரானது தான் செல்லுகின்ற புறமும் மறையாநிற்கும்; ஊரொடு - ஆதலால் இவ்வூருடனே; தேம்பட ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் மின் இவர் கொடும்பூண் கொண்கனொடு - தேனைப் பொருந்த வுண்ணுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற மாலையணிந்த மார்பின்கண்ணே மின்னுதல் பொருந்திய வளைந்த கலன்களையுடைய கொண்கனும்; நாம் இன் நகை மேவ ஆடிய பொழில் யாங்கு ஆவது - நாமும் இனிய உவகை பொருந்த முயங்கி விளையாடிய சோலையானது நமக்கு எவ்வண்ணமாக அமையப்படுவதாமோ? அறிகிலேன்; எ - று.

     (வி - ம்) அல்குதல் - குறைதல்; வெயில் மறைதலாலே சோலையினது தோற்றம் கட்புலனாகாதபடி சிறிது சிறிதாக மறைந்து படுதல். யாங்கு - எப்படி. அறிகிலேன்: சொல்லெச்சம். இது துன்பத்துப் புலம்பல்.வரும்பொழுது எதிர்தொழுது போம்பொழுது புறந்தொழுதல் கற்புடை மகளிர்க் கியல்பாதலின் கையறவு தோன்றாதபடி கற்பின்றலைமைக் கேற்பத் தொழுதமை கூறினாள். காதலனொடு உறையாத விடத்து ஊரும் அவனுடன் முயங்கிக்கிடவாத விடத்துச் சோலையும் பொலிவழிந்து வெறுப்பாகத் தோன்றுதலின் அவற்றைக் காணுந்தோறும் யாங்காவது கொலெனத் தானுய்யாமை கூறி யிரங்கினாளென்பது. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல். கேட்போர் - நெஞ்சம்.

     (பெரு - ரை) இனி இச் செய்யுளை ஆசிரியர் இளம்பூரண அடிகளார் தோழி கூற்றாகக் கொண்டு ""நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்"" (தொல். கள. 23) என்னும் துறைக்கு எடுத்துக் காட்டுவர். கல் சேர் மண்டிலம் சிவப்ப நிலம் வெப்பந்தணிய எனலுமாம்.

(187)