(து - ம்,) என்பது, தலைமகன் ஒரு சிறைப்புறமாக வந்திருப்பதனை யறிந்த தோழி அவன் விரைவில் வரையுமாறு தலைவியை நெருங்கித் "தோழீ! தினை கொய்யும்பதங் கொள்ளும்; அதனால் நாம் மீண்டு மனையகம் புகுவேம் போலத் தோன்றா நின்றது; அங்ஙனமானால் நம்முடைய தடை நீக்கிச் சென்று முன்பு நம்மைக் கைவிட்ட காதலனை எவ்வாறு அணைகிற்போம் என நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.
| கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் |
| பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத் |
| தகைவனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து |
| ஒலிபல் கூந்தல் அணிபெறப் புனைஇக் |
5 | காண்டற் காதல் கைம்மிகக் கடீஇயாற்கு |
| யாங்கா குவங்கொல் தோழி காந்தள் |
| கமழ்குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் |
| கூதள நறும்பொழில் புலம்ப ஊர்வயின் |
| மீள்குவம் போலத் தோன்றுந் தோடுபுலர்ந்து |
10 | அருவியின் ஒலித்தல் ஆனா |
| கொய்பதங் கொள்ளுநாங் கூஉந் தினையே. |
(சொ - ள்.) தோழி கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினை - தோழீ! கதிர் கொய்யும் பதம் கொள்ளநின்ற நாம் கூவிக் கிளியோப்பும் தினைப்புனமெல்லாம்; தோடு புலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆனா - மேல் இலை காய்ந்து மலையருவி ஒலித்தாற்போல ஒலித்தல் அமையாவாயிராநின்றன; காந்தள் கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல் கூதள நறும்பொழில் புலம்ப - அதனால் யாம் காந்தளின் கமழ்கின்ற குலைமலர்ந்த விருப்பமிகுஞ் சாரலின்கண்ணே கூதாளி படர்ந்து மலர்ந்த நறிய சோலை தனிமையாகும்படி; ஊர்வயின் மீள்குவம் போலத் தோன்றும் - கைவிட்டு ஊரிடத்து மீண்டு செல்வேம் போல எனக்குத் தோன்றாநிற்கும்; கண்ணழி கட்டு அழித்து கருங் கால் வேங்கை உறு நாள் புதுப்பூப் பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப - இங்ஙனமாகையில் தடைமுழுதும் அழித்துக் கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில் நாட்காலையின் மலர்ந்த மிக்க புதிய பூ பொன்னைப் பணி செய்யும் பொற்கொல்லன் உடைய கைவினையைப் போல; தகை வனப்பு உற்ற ஒலி பல் கூந்தல் அணி பெறப்புனைஇ - மிக அழகுபொருந்திய தாழ்ந்த பலவாய கூந்தலில் அணிபெறச் சூடி; காண்டல் காதல் கைம்மிக - காண்பதற்கு அளவு கடந்த விருப்ப மிகுதலாலே; கடீஇயாற்கு யாங்கு ஆகுவம் - நம்மை இப்பொழுது கைவிட்டிருக்கின்ற தலைவனை எவ்வாறு சென்று சேர்வோம்? எ - று.
(வி - ம்.) கண்ணழிவு - தடை. கட்டழித்தல் - முற்ற ஒழித்தல்; இஃது அழிவில் கூட்டத்து அவன் புணர்வு மறுத்தல்.
கொய்பதங் கொள்ளுந் தினையென்றதனால் புனமழிவு கூறிப் பகற்குறி இயலாதென மறுத்தாள். அணிபெறப் புனைந்து காண்டற் காதல் கைம்மிக என்றதனால், அவன் இன்றியமையாமை கூறி விரைவில் வரைந் தெய்துக என்றாள். ஊர்வயின் மீள்குவம் போலத் தோன்றுமென்றதனால், வரைந்து எய்த இயலாதாயின் இரவுக் குறியேனும் வந்தெய்துக வென்று குறிப்பித்தாள். கடீஇயா னென்றதனால், இங்ஙனம் அடைந்த எம்மைக் கைவிட்ட அறனிலாளனென நொந்து கூறினாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) வேங்கையின் நாள் உறுபுதுப்பூ கம்மியன் கைவினை கடுப்ப வனப்பு உற்றன. அவற்றைக் கூந்தலில் அணிபெறப் புனைஇ என இயைத்தல் நன்று.
(313)