(து - ம்,) என்பது, தோழி வரையாது களவின் வழிவந் தொழுகுந் தலைமகனை நெருங்கி, மலைநாடனே! நீ விரும்பிய இவள்பால் வந்து போகுங் களவினை அன்னை அறிவாளேயாயின் இவள்கண் நீர்கலந்து சிவந்து வேறுபாடெய்தி எவ்வண்ணமாக முடியுமோவென அஞ்சி உரையாடுவாளாகி உள்ளுறையால் வரைந்துகொண்டு செல்வாயாகவெனவும் நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| நீடுஇருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த |
| பூம்பொறி ஒருத்தல் ஏந்துகை கடுப்பத் |
| தோடுதலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை |
| பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் |
5 | உயர்வரை நாடநீ நயந்தோள் கேண்மை |
| அன்னை அறிகுவள் ஆயின் பனிகலந்து |
| என்னா குவகொல் தானே எந்தை |
| ஓங்குவரைச் சாரல் தீஞ்சுனை ஆடி |
| ஆயமொடு குற்ற குவளை |
10 | மாயிதழ் மாமலர் புரைஇய கண்ணே. |
(சொ - ள்.) நீடு இருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப - நீண்ட கரிய மலையிலே பிடியானையொடு கலந்த பொலிவுற்ற முகத்திலே புள்ளியையுடைய களிற்றியானையின் தூக்கிய கைபோல; தோடு தலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை - மேலிலையகத்தினின்றும் நீண்டு வளைந்த பசிய தினைக்கதிரை; பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் உயர்வரை நாட - பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் கொய்துகொண்டுபோகாநிற்கும் உயர்ந்த மலைநாடனே!; நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள் ஆயின் - நீ விரும்பிய இத் தலைவியிடத்து வைத்திருக்கும் களவொழுக்கத்தாலாகியநட்பை எம்மன்னை அறிகுவாளாயின்; எந்தை ஓங்குவரைச் சாரல் தீம் சுனை ஆடி - எந்தையினது உயர்ந்த மலைச் சாரலினுள்ள இனிய சுனையிலே நீராடி; ஆயமொடு குற்ற குவளை மாஇதழ் மாமலர் புரைஇய கண் - தோழியரோடு சென்று பறித்த அச் சுனைக் குவளையின் கரிய இதழ்களையுடைய சிறந்த மலரையொத்த கண்கள்; பனிகலந்து என் ஆகுவ - நீர்கலந்து வடியப் பெற்று இனி எப்படியாகி முடியுமோ? எ - று.
(வி - ம்.) வாங்கிய கதிர் - நீண்டு பறிந்த கதிருமாம். குற்ற பறித்த. கள வொழுக்கம் அன்னையறியின் ஒறுப்ப. அதனாலே தலைவி அழுது இறந்துபடு மென்பது.
உள்ளுறை:- தினைக்கதிர் உண்ணுங்கிளி கொய்து கொண்டுபோகலான் அக் கிளிக்குப் பயன்படு மஃதன்றித் தான் விளைந்த கொல்லைக்குப் பயன்படாதன்றே, அவ்வாறே இவளும் நலனுகருகின்ற நினக்குப் பயன்படுவ தன்றிப் பிறந்த இல்லகத்துக்கு யாதும் பயன்படுவதின்மையின், நீ வரைந்துகொண்டு செல்க வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) தோட்டினின்றும் தலைவளைந்து பக்குவமுற்றவுடன் பசிய கிளி கவர்ந்துகொண்டு போவது போல் நீயும் தமரினின்றும் வேறுபட்டு நின்பகுதியளாகிவிட்ட தலைவியை வரைந்துகொடு நின் மனைக்குச் செல்வாயாக என்பது உள்ளுறை என்க. வற்புறுத்தற்பொருட்டு அன்புறுதகுந இறைச்சியிற் சுட்டுவாள் உயர்வரை நாட என்று விளித்தாள்.
(317)