திணை : நெய்தல்.

     துறை : இது, தோழி இரவுக்குறி நேர்ந்தது.

     (து - ம்.) என்பது, பகற்குறி இடையீடெய்திய தலைமகன் இரவுக்குறி விரும்பினானாக, அதுகேட்டு உடன்பட்ட தோழி குறியிடங் கூறுகின்றாள்; எமது சிறுகுடிப் பாக்கம் பனையின் கூட்டத்தின் நடுவணது; வண்டொலி மிகுதியால் நின் தேரொலி கேட்டலுமரிது; வருநெறியுமீதே யாதலால் மறவாது வருவாயாகவென இயைந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "புணர்ச்சி வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
ஓங்கித் தோன்றுந் தீங்கள் பெண்ணை  
    
நடுவ ணதுவே தெய்ய மடவரல் 
    
ஆயமும் யானும் அறியாது அவணம் 
    
மாய நட்பின் மாண்நலம் ஒழிந்துநின் 
5
கிளைமை கொண்ட வளையார் முன்கை 
    
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம் 
    
புலிவரி எக்கர்ப் புன்னை உதிர்த்த 
    
மலிதாது ஊதுந் தேனோடு ஒன்றி 
    
வண்டின் இன்னிசை கறங்கத் திண்தேர்த் 
10
தெரிமணி கேட்டலும் அரிதே 
    
வருமாறு ஈதவண் மறவா தீமே. 

     (சொ - ள்.) மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் கிளைமை கொண்ட வளையார் முன்கை நல்லோள் தந்தை - நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழிய விட்டு நின்னுடைய உறவைக்கொண்ட வளையணிந்த முன்னங்கையையுடைய நல்ல நின் காதலிக்குத் தந்தையின்; சிறுகுடிப் பாக்கம் - சிறு குடியையுடைய பாக்கமானது; ஓங்கித் தோன்றும் தீங்கள் பெண்ணை நடுவணது - உயர்ந்து தோன்றுகின்ற இனிய கள்வடிதலையுடைய பனைகளின் நடுவின் உளதாயிராநின்றது கண்டாய்; மடவரல் ஆயமும் யானும் அறியாது அவணம் - மடப்பம் வருதலையுடைய தோழியர் கூட்டமும் யானும் ஒருவரையொருவர் அறியாதபடி அவ்விடத்திலேயே இருப்போம்; புலிவரி எக்கர்ப் புன்னை உதிர்ந்த மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி - ஆங்கே புலியின் வரிபோன்ற மணல் மிக்க திடரில் இருக்கும் புன்னையினின்று உதிர்ந்த நிரம்பிய பராகத்தை உண்ணுகின்ற பெண்வண்டுகளுடனே; வண்டின் இன் இசை கறங்கத் திண்தேர்த் தெரி மணி கேட்டலும் அரிது - ஆண் வண்டுகளும் முரலுகின்ற இனிய ஓசை மிக்கு ஒலித்தலால் நினது திண்ணிய தேரின் விளங்கிய மணிகள் ஒலித்தலைப் பிறர் கேட்டலும் அரியதாகும்; அவண் வரும் ஆறு ஈது - அங்கு நீ வருதற்கு உரிய நெறியும் இதுவேயாகும்; மறவாதீம் - ஆதலினாற் சேர்ப்பனே மறவாது வந்து கூடுவாயாக! எ - று.

     (வி - ம்.) கிளைமை - உறவு. தேன் - ஒருவகை வண்டுமாம். ஊதல் - உண்ணுதல்.

    நீ வருமுன் யாம் அங்கே சென்று நின் வருகையை எதிர்கொள்வேம் என்பாள் அவணம் என்றாள். நீ வருவதனை அயலார் அறியாத இடமென்பாள். பெண்ணை நடுவணதென்றாள். இதனாற் குறியிடமும் அங்கென்றே கூறினாளென்பது. அஞ்சாது வரலாமென்பாள், மணியோசை பிறர் கேட்பது அரிதாகுமென்றாள். தீம்கள் பெண்ணையென்றதனால் நீ அங்குத் தங்கி விருந்துண்டு செல்லலாமென உலகியல் கூறினாளுமாம்.

     இறைச்சி:- புன்னை யுதிர்த்த தாதினை வண்டுகள் இமிர்ந்து உண்ணும் என்றதனால், தலைவியின் நலத்தை அஞ்சாதுண்டு மகிழ்ந்திருக்கலாம் என்பது மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி நேர்தல்.

     (பெரு - ரை.) நீ வாராதொழியின் அவள் இறந்துபடுவாள் என்பது தோன்ற. வரும் ஆறு ஈது என நெறிகாட்டியவள் பின்னரும் மறவாதே கொள் என்றாள். ஆயமும் யானும் நும்மை அறியாதேம் போல அவ்விடத்திலேயே இருப்பேம் என்றாள் எனினுமாம்.

(323)