திணை : பாலை.

     துறை : இது, பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.

     (து - ம்,) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிதலாலே வருந்திய தலைமகளைத் தோழி நெருங்கி 'அவரை நாம் கருதும் போதெல்லாம் சுவரின்கண்ணே பல்லி சொல்லநின்றதாதலின், அகன்று போகிய காதலர் இன்னே வந்து நின்னை முயங்குவர் போலுமென்று தோன்றுகின்றது; நினது துயரம் நீங்குவாய்கா'ணென வலியுறுத்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.

    
மழைதொழில் உலந்து மாவிசும்பு உகந்தெனக் 
    
கழைகவின் அழிந்த கல்லதர்ச் சிறுநெறிப் 
    
பரலவல் ஊறற் சிறுநீர் மருங்கில் 
    
பூநுதல் யானையொடு புலிபொருது உண்ணுஞ் 
5
சுரன்இறந்து அரிய என்னார் உரனழிந்து 
    
உண்மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி 
    
அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து 
    
திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும் 
    
நீங்குக மாதோநின் அவலம் ஓங்குமிசை 
10
உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி 
    
நயவரு குரல பல்லி 
    
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே. 

     (சொ - ள்.) ஓங்கு மிசை உயர் புகழ் நல்இல் - (தோழீ!) உயர்ந்த இடத்தில் உயர்ந்த புகழையுடைய நல்லவீட்டின் கண்ணே; நள் என் யாமத்து உள்ளுதொறும் - செறிந்த இரவு நடு யாமத்தில் நாம் நம் காதலரை நினைக்குந்தோறும்; நயவருகுரல பல்லி - இனிமையான குரலையுடைய பல்லி; ஒள் சுவர்ப் பொருந்திப்படும் - ஒள்ளிய சுவரிலே பொருந்தி நின்றுநன்மையான சொற்களைக் குறிப்பாற் கூறாநின்றது; மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என - ஆதலின் மேகம் தான் செய்ய வேண்டிய பெய்தற் றொழிலை இன்மையாக்கிக் கரிய ஆகாயத்திலே சென்றொழிந்ததனால்; கழை கவின் அழிந்த கல் அதர்ச்சிறு நெறி - வெப்பமிக்கு மூங்கில் எல்லாம் வாடி அழகழிந்த மலை வழியின் சிறிய நெறியிலே; பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கில் - பருக்கைக் கற்கள் நிரம்பிய பள்ளத்தில் ஊறுகின்ற மிகக் குறைவுபட்ட சிறிய நீரிடத்தில்; பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் சுரன் இறந்து - பொலிவு பெற்ற நெற்றியையுடைய யானையொடு புலி போர் செய்து அந் நீரையுண்ணுகின்ற சுரநெறியிலே சென்று; அரிய என்னார் உரன் அழிந்து உள்மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி - ஈட்டப்படும் பொருள் நமக்கு அரியவாம் என்று நினையாமல் நல்லறிவிழந்து, உள்ளே மகிழ்ச்சியுற்ற வன்மைமிக்க நெஞ்சுடனே தாம் வண்மைமிக்குடையராயிருத்தலை விரும்பி; அரும் பொருட்கு அகன்ற காதலர் - அரிய பொருள் காரணமாக அகன்ற நங் காதலர்; முயக்கு எதிர்ந்து திருந்து இழைப் பணைத்தோள் பெறுநர் போலும் - நின்னை முயங்குவதை எதிர் நோக்கித் திருத்தமாகிய கலன்களை அணிந்த நின் பருத்த தோளை இன்றுவந்து கூடுவார் போலத் தோன்றாநின்றது காண்!; நின் அவலம் நீங்குக - இனி நின் அவலம் நீங்குவாயாக! எ - று.

     (வி - ம்.) உகத்தல் - உயரப்போதல். ஓங்குமிசை - உயர்ந்த இடம்.

     இறைச்சி:- பள்ளத்திலுள்ள நீரை யானையொடு புலி போர் செய்து உண்ணாநிற்குமென்றது, வேற்று நாட்டிலே பொருளை யெய்தும்படி வேற்றரசரை நின்காதலர் போர் செய்து வென்று பொருள் கொண்டு வருவர்காணென அவனது வென்றிகூறி மகிழ்வித்தாள் என்பதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைமகளை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) இச் செய்யுளில் 'உரன் அழிந்து' என்பதற்கு 'நல்லறி வழிந்து' எனப் பொருள் கொள்க. நல்லறிவாவது பொருளீட்டு முயற்சி. நாளது சின்மையும் இளமைய தருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மைய திளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஆகிய எட்டனையும் பொருந்தா தென்னும் ஆராய்ச்சி யறிவு. இவ்வறிவு அழியாவிடின் அவர் பிரியார் என்பது கருத்து.

(333)