திணை : மருதம்.

     துறை : இது, தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.

     (து - ம்) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்து ஆற்றாமை வாயிலாகப் புகுந்து பள்ளியிடத்தானாகிய தலைமகனைத் தலைமகள் நெருங்கி ஊடல் தீர்கின்றாள், ஊரனே! எனது நலன்முழுவதுந் தொலையினும், என்னை நீ நெருங்க விடேன்; நெருங்க விடுவேனாயின் என்வரைத்தன்றி என்கை நின்னை அணைத்து முயங்காநிற்கும்; சார்ந்த முதலாயின உடையையாதலின் நின்னை நீக்குவது கலங்கழிப்பது போலாம்; அதனால் இங்கு வாராதேகொள்; நின்னொடு அப் பரத்தை நீடுவாழ்வாளாக என வெகுண்டு கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு,

  
"புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு 
  
 அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி 
  
 இயன்ற நெஞ்சந் தலைபெயத் தருக்கி 
  
 யெதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்"     (தொல். கற். 6)  

என்னும் விதிகொள்க.

    
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் 
    
பழனப் பல்புள் இரியக் கழனி 
    
வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிருந் 
    
தேர்வண் விராஅன் இருப்பை அன்னஎன் 
5
தொல்கவின் தொலையினுந் தொலைக சார 
    
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇக 
    
கவவுக்கை தாங்கும் மதுகையம் குவவுமுலை 
    
சாடிய சாந்தினை வாடிய கோதையை 
    
ஆகில் கலங்கழீஇ அற்று 
10
வாரல் வாழிய கவைஇநின் றோளே. 

     (சொ - ள்) வெள் நெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல் புள் இரிய - வெள்ளிய நெற்கதிரை அறுக்கும் மள்ளர் முழங்குகின்ற தண்ணுமைக்கு அஞ்சி வயலிலுள்ள பலவாகிய புள்ளினமெல்லாம் இரிந்தோடிச் செறிதலால்; கழனி வாங்குசினை மருதம் தூங்கு துணர் உதிரும் - வயலின்மீது தாழ்ந்து வளைந்த கிளையையுடைய மருதமரத்தே தூங்குகின்ற பூங்கொத்துகள் உதிராநிற்கும்; தேர் வண் விராஅன் இருப்பை அன்ன - இரவலர்க்குத் தேர் கொடுக்கும் வண்மையுடைய (விராஅன்) என்னும் கொடைவள்ளலின் 'இருப்பையூர்' போன்ற; என் தொல் கவின் தொலையினும் தொலைக - எனது பழைய அழகெல்லாம் கெடுவதாயினுங் கெடுக; சார விடேஎன் விடுக்குவென் ஆயின் - என்னருகில் நீ நெருங்குமாறு விடுவேனல்லேன் அங்ஙனம் விடுகிற்பேனாயின்; கடைஇக் கவவுக் கை தாங்கும் - என்வாயினால் நின்னை விலக்கப்பட்டும் என் அகத்திடுகைகள் நின்னை வல்லே அணைத்து முயங்காநிற்கும்; மதுகை அம் குவவு முலை சாடிய சாந்தினை வாடிய கோதையை - நீதானும் வலிமையுடைய குவிந்த பரத்தையின் கொங்கையினாலே சாடப்பட்ட சந்தனத்தையுடைய அவள் குழைய முயங்கலாலே துவண்டு வாடிய மாலையையுடையை; ஆகில் கலம் கழீஇ அற்று - ஆதலால் நின்னைத் தீண்டுதல் கலங்கழித் தெறிந்த தாழி முதலியவற்றைத் தீண்டிய அத்தன்மையதாகும்; வாரல் நின் தோள் கவைஇ வாழிய - அதனால் என் மனையின்கண்ணே வாராதே கொள்; நின்னை அணைத்து முயங்கி அப் பரத்தை நின்னொடு நெடுங்காலம் வாழ்வாளாக! எ - று.

    (வி - ம்) கடைஇ - விலக்கி; இதனை விலக்கவெனத் திரிக்க.

     அவன்பால் வைத்திருந்த அன்பின்மிகுதியை அறிவுறுத்துவான் காண்டலும் கைகள் நின்னை அணைத்து முயங்கு மென்றாள்.

     உள்ளுறை :-மள்ளர் தண்ணுமைக்கு அஞ்சிப் புள்ளினம் இரிந்தோடி மருதிற் செறிதலானே அம் மருதங்கிளை அசைந்து பூங்கொத்துகள் உதிரா நிற்குமென்றது, என்பால் உனக்கு அன்பின்றி ஏதிலார் கூறும் பழிமொழியை அஞ்சி நீ இங்கு வருதலால் என்னுள்ளம் நின்னை வெறுத்தொழியாநிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி, பயன் - ஊடல் நீங்குதல்.

     (பெரு - ரை) 'ஆசில் கலந் தழீஇயற்று' என்றும் பாடம், நின்றோள் பரத்தையை முயங்கி வாழிய எனினுமாம்.

(350)