திணை : முல்லை.

     துறை : இது, வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.

     (து - ம்) என்பது, தலைமகன் வேற்று நாட்டுச் சென்று வந்துழி, அவன் குறித்த பருவம் கடந்ததனாலே தலைவி துனிகூருமென்ற வாயில்களை நெருங்கித் தோழி 'நீயிர் கவல்வதென்னை? அவனது தேரைக் குதிரைகள் கொண்டுவந்து தந்தன; அதுகண்ட இறைவி தானடைந்த துன்பமெல்லாம் நீங்குதலாலே விருந்தேற்கும் விருப்பினளாய் இராநின்றன'ளென உறழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதனை, "பெறற்கரும்" (தொல். கற். 9.) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனாற் கொள்க.

    
சிறுவீ முல்லைப் பெரிதுகமழ் அலரி 
    
தானுஞ் சூடினன் இளைஞரும் மலைந்தனர் 
    
விசும்புகடப் பன்ன பொலம்படைக் கலிமாப் 
    
படுமழை பொழிந்த தண்ணறும் புறவின் 
5
நெடுநா ஒண்மணி பாடுசிறந்து இசைப்ப 
    
மாலை மான்ற மணன்மலி வியனகர்த் 
    
தந்தன நெடுந்தகை தேரே என்றும் 
    
அரும்படர் அகல நீக்கி 
    
விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே. 

     (சொ - ள்) சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி - சிறிய மலரையுடைய முல்லையினது பெரிதும் மணம் வீசுகின்ற மலரை; நெடுந்தகை தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர் - நெடிய புகழையுடைய இறைவன் தானுஞ் சூடினன் உடன் வந்த இளைஞரும் சூடினர்; விசும்பு கடப்பு அன்ன பொலம் படைக் கலி மா - விசும்பைக் கடந்தாலொத்த பொன்னால் ஆகிய கலனை அணிந்த கனைக்கின்ற குதிரைகள்; படு மழை பொழிந்த தண் நறும்புறவின் நெடு நா ஒள் மணி பாடு சிறந்து இசைப்ப - மிக்க மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியோசை மிக்கு ஒலிப்ப; தேர் மாலை மான்ற மணல் மலி வியன் நகர்த் தந்தன - அவனது தேரை மாலைப் பொழுது மயங்கிய மணல்மிக்க அகன்ற மாளிகை வாயிலிலே கொணர்ந்து நிறுத்தின; திருந்து இழையோள் என்றும் அரும் படர் அகல நீக்கி - திருந்திய கலனணிந்த தலைவி தான் முன்பு எந்நாளுங் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பமெல்லாம் ஒருங்கே நீங்கி; விருந்து அயர் விருப்பினள் - இறைமகனுக்கு விருந்தயரும் விருப்பத்தையுடையளா யிராநின்றனள்; ஆதலின் அவள் துனிகூருமென்று நீயிர் கவல வேண்டா? எ - று.

     (வி - ம்) படை - கலனை: சேணம். கலிமா - குதிரையெனவுமாம். கலிமா தேரைத் தந்தனவென இயைக்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வாயில்கள் மகிழ்தல்.

     (பெரு - ரை) 'மணம்மலி வியனகர்த்' என்றும் பாடம்.

(361)