(து - ம்) என்பது, தலைமகன் ஒருவினை மேலிட்டுப் பிரிந்து போகியபின் வருந்திய தலைமகளைத் தோழி, வலிதிற் பொறுத்திருவென்றாட்கு அவன்பாற் கொண்ட நட்பின் அளவானது ஏதிலாட்டியர் அலர் தூற்றுமாறு இங்ஙனமாயினதே யென்று அழிந்து கூறாநிற்பதுமாகும்.
(உரை இரண்டற்கும் ஒக்கும்.) (இ - ம்) இதனை, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்பதனாற் கொள்க.
| யாமமும் நெடிய கழியுங் காமமும் |
| கண்படல் ஈயாது பெருகுந் தெண்கடல் |
| முழங்குதிரை முழவின் பாணியின் பைபயப் |
| பழம்புண் உறுநரின் பரவையின் ஆலும் |
5 | ஆங்கவை நலியவும் நீங்கி யாங்கும் |
| இரவிறந்து எல்லை தோன்றலது அலர்வாய் |
| அயலிற் பெண்டிர் பசலை பாட |
| ஈங்கா கின்றாள் தோழி ஓங்குமணல் |
| வரியார் சிறுமனை சிதைஇ வந்து |
10 | பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பிப் |
| பாடிமிழ் பனிநீர்ச் சேர்ப்பனொடு |
| நாடாது இயைந்த நண்பினது அளவே. |
(சொ - ள்) தோழி யாமமும் நெடிய கழியும் - தோழீ! இரவு நடுயாமமும் நெடும்பொழுதுடையவாகிக் கழியாநிற்கும்; காமமும் கண்படல் ஈயாது பெருகும் - எமக்குளதாகிய காமமும் கண்ணுறங்கவொட்டாது பெருகாநிற்கும்; தெள் கடல் முழங்குதிரை முழவின் பாணியின் பைபயப் பழம்புண் உறுநரின் பரவையின் ஆலும் - தெளிந்த கடலின்கண்ணே முழங்குகின்ற அலைகளும் முழவோசை போல மெல்லமெல்ல ஒலித்து நெடுநாட் புண்ணுற்றாரைப் போலப் புரண்டு புரண்டு அக் கடலிடத்து அசைந்து இயங்காநிற்கும்; அவை ஆங்கு நலியவும் நீங்கி இரவு இறந்து எல்லை தோன்றலது - அவை அவ்வண்ணம் நம்மை வருத்தாநிற்கவும் நீங்கி இராப்பொழுதைக் கடந்து ஞாயிறு தோன்றினபாடில்லை; ஓங்கு மணல் வரி ஆர் சிறுமனை சிதைஇ வந்து - உயர்ந்த மணற் பரப்பிலே புனைந்து கோலமிட்ட சிறிய மணற் சிற்றிலைச் சிதைத்து நம்பால் வந்து; பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி - அன்பு மிகும்படி கூறிய மெல்லிய சூளுரையை மெய்யென விரும்பிக்கொண்டு; பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு நாடாது இயைந்த நண்பினது அளவு - பக்கத்தில் ஒலிக்கும் குளிர்ச்சியையுடைய கடற்கரைத் தலைவனுடனே முன்பு இவன் இத்தன்மையன் என்று ஆராய்ந்து பாராது உடன் பட்டதனாலாகிய நட்பின் அளவானது; அலர்வாய் அயலில் பெண்டிர் பசலை யாங்கும் பாட - பழிச்சொற் கூறும் வாயையுடையஅயல் வீட்டு மாதர்கள் எம்முடைய நெற்றியிலுண்டாகிய பசலையைக் குறித்துப் பலவாய இழிந்த பாடல்களைக் குறிப்பாக எவ்விடத்தும் பாட; ஈங்கு ஆகின்று - இவ்வாறு இழிதகவெய்தப் பண்ணியது கண்டாய்; எ - று.
(வி - ம்) முழவின் பாணிபோல எனவும் புண்ணுறுநர் போல எனவுங் கூறி அவற்றின் வினை கூறாமையின் "வந்த" (தொல். பொ. சூ. 276) என்றதனால் இல்லாத வினை வருவித் துரைக்கப்பட்டது, இப் பாட்டின் கருத்தைத் தழுவி "நாடாது நாட்டலிற் கேடில்லை" என்றார் (791) குறளினும். சிறுமனை சிதைத்தல் மைந்தர்க் கியல்பு. "மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய, கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி" என்றார். (51) கலியினும். இது, துன்பத்துப் புலம்பல். தோழி கூற்றுக்கு. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல். தலைவி கூற்றுக்கு. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை) "நாடாது நட்டலிற் கேடு பிறிதில்லை" என்பாள் நாடாது இயைந்த நண்பு என்றாள்.
(378)