(து - ம்.) என்பது, தலைவன் இரவுக்குறி வருதலையறிந்த தோழி தலைவியை நோக்கி "இரவெல்லாம் காமவேட்கையால் நோய்கொண்டு புலம்பியதறிந்த நம் அன்னை நீ ஏன் தூங்குவாயல்லையோ வென்றாட்கு மெல்ல என்நெஞ்சினுள்ளே கானகநாடனைக் கருதினோர்க்குத் தூக்கமும் வருமோவென்று கூறினே"னெனத் தங்களுடைய துன்பத்தை அவனுணர்ந்து விரைய வரையுமாற்றாற் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் நயம்புரியிடத்தும் என்பதன் கண் அமைத்துக்கொள்க.
| கேளாய் எல்ல தோழி ! அல்கல் |
| வேணவா நலிய வெய்ய உயிரா |
| ஏமான் பிணையின் வருந்தினே னாகத் |
| துயர்மருங் கறிந்தனள் போல அன்னை |
5 | துஞ்சா யோவென் குறுமக ளென்றலிற் |
| சொல்வெளிப் படாமை மெல்லவென் நெஞ்சிற் |
| படுமழை பொழிந்த பாறை மருங்கில் |
| சிரல்வா யுற்ற தளவிற் பரலவற் |
| கான்கெழு நாடற் படர்ந்தேர்க்குக் |
10 | கண்ணும் படுமோ என்றிசின் யானே. |
(சொ - ள்.) எல்ல தோழி கேளாய் அல்கல் வேணவா நலிய வெய்ய உயிரா - ஏடி தோழீ ! யான் கூறுகின்ற இதனைச் கேட்பாயாக ! நேற்றிரவில் வேட்கை மிகுதியாலுற்ற ஆசைப்பெருக்கமானது துன்புறுத்தலாலே வெப்பமாகப் பெருமூச்செறிந்து; ஏ மான் பிணையின் வருந்தினேனாக - அம்புபட்ட மான்பிணைபோல வருத்த முற்றேனாக; அன்னை துயர் மருங்கு அறிந்தனள் போல என் குறுமகள் துஞ்சாயோ என்றலின் - அப்பொழுது அன்னை யானுற்ற துன்ப மிகுதியை அறிந்தாள் போல என்னை நோக்கி 'என்னிள மகளே ! நீ தூங்குவாயல்லையோ என்றலும்; சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சின் - யான் சொல்வது வெளியிலே தெரியாதபடி மெல்ல என் நெஞ்சினுள்ளே; படுமழை பொழிந்த பாறை மருங்கில் சிரல்வாய் உற்ற தளவின் பரல் அவல் கான்கெழு நாடன் படர்ந்தோர்க்கு - மிக்க மழை பொழிந்த கற்பாறை யருகிலே பூத்த சிச்சிலிப் பறவையின் வாய் போன்ற அரும்புகளையுடைய முல்லையும் பரல்கள் நிரம்பிய பள்ளங்களும் உடைய (விளங்கிய) காடு சூழ்ந்த நாட்டையுடைய தலைமகனைக் கருதியிருப்போர்க்குக் கண்ணுறக்கமும் வாரா நிற்குமோ ? என்றேன் காண்; எ - று.
(வி - ம்.) எல்ல; இருபாற் பொதுச்சொல். அல்கல் - இரவு. வேணவா - வேட்கையாலுண்டாகிய அவர்; 'வேட்கை, அவா' என்னுமிருசொல்லும் "செய்யுண் மருங்கின்" (தொல்-எழுத்- 288) என்ற சூத்திர விதிப்படி கெட்டு மருவி முடிந்தது, ஏ - அம்பு. படர்தல் - நினைத்தல். இது தலைவியைத் தோழி தானாகக் கொண்டு கூறியது, தான் அவள் என்னும் வேற்றுமையிலளாதலின்; இதற்கு முன்பு 28 ஆஞ் செய்யுளுரையிற் கூறிய விதியை ஈண்டுரைத்துக்கொள்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவறிவுறுத்தல்.
(பெரு - ரை.) பரல் ஆகுபெயராக மேட்டுநிலத்தைக் குறித்து நின்றது. எனவே, மிசையும் அவலும் உடைய கான் என்பதாயிற்று. "அவலா கொன்றோ மிசையா கொன்றோ" (புறம்- 187)எனப் புறத்தினும் வருதல் காண்க. அளியுடைமையும் அஃதின்மையும் ஒருங்கேயுடையான் என இறைச்சியிற் றோன்றுமாறு பரல் அவல் கான்கெழு நாடன் என்றாள்.
இனி, இச்செய்யுளைத் தலைவி கூற்றாகவே கொண்டு ஆசிரியர் நச்சினார்க்கினியர், "மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்த சான்றல் அருமறை யுயிர்த்தலும்" (தொல்-கள- 20) என்னும் துறைக்கு எடுத்துக்காட்டினர். தலைவி கூற்றெனலே நேரிதாம்.
(61)