(து - ம்.) என்பது, வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிந்தோன் குறித்தபருவத்து வாராமையால், தலைமகள் வருந்தியிருக்கும்பொழுது அவன் வரைவொடு வருகின்ற குறிப்பறிந்த தோழி அவளை நோக்கி நிதியுடன் அவர் வருகின்ற தேரினொலியைக் கேட்பாயாக, இது நாம் படுகின்ற துயரம் நீங்குகிற்போங்காணென உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "நாற்றமும் தோற்றமும்" (தொல்-கள- 23) என்னும் நூற்பாவினுள் "ஆங்கதன் தன்மையின் வன்புறை யுளப் பட" என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| கோட்சுறா வழங்கும் வாட்கேழ் இருங்கழி |
| கணியேர் நெய்தல் மாமலர் நிறையப் |
| பொன்நேர் நுண்தாது புன்னை தாஅம் |
| வீழ்தாள் தாழைப் பூக்கமழ் கானல் |
5 | படர்வந்து நலியுஞ் சுடர்செல் மாலை |
| நோய்மலி பருவரல் நாமிவண் உய்கம் |
| கேட்டிசின் வாழி தோழி தெண்கழி |
| வள்வாய் ஆழி உள்வாய் தோயினும் |
| புள்ளுநிமிர்ந் தன்ன பொலம்படைக் கலிமா |
10 | வலவன் கோலுற அறியா |
| உரவுநீர்ச் சேர்ப்பன் தேர்மணிக் குரலே. |
(சொ - ள்.) தோழி வாழி தெள்கழி வள் வாய் ஆழி உள்வாய் தோயினும் புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படைக்கலிமா-தோழீ ! வாழி ! தெளிந்த கழியின்கண்ணுள்ள நீரிடத்துப் பெருமை வாய்ந்த தேர் உருளின் உள்வாயளவு அமுங்கப் பெறினும் பறவை பறந்து சென்றாற்போன்ற பொன்னாற் செய்யப்பட்ட கலமுதலியவற்றை யுடைய மனஞ்செருக்கிய குதிரை; வலவன் கோல் உற அறியா உரவு நீர்ச் சேர்ப்பன் தேர் மணிக்குரல் கேட்டிசின் - தேர்ப்பாகன் தன் தாற்றுக்கோலாலே தூண்டப்பட்டறியாத பரவிய கடனீர்ச் சேர்ப்பனது தேரின் மணியொலிக்குங் குரலைக் கேட்பாயாக !; கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இருங் கழி மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய - கொல்லுந் தன்மையுள்ள சுறாமீன் இயங்குகின்ற ஒள்ளிய நிறத்தையுடைய பெரிய கழியிடத்து மலர்ந்த நீலமணி போன்ற நெய்தலின் கரியமலர் நிறையுமாறு; புன்னை பொன் நேர் நுண் தாது தாஅம்-புன்னையின் பொன் போன்ற நுண்ணிய தாதுபரக்கும்; வீழ் தாள் தாழைப்பூக் கமழ் கானல்-வீழூன்றிய அடியையுடைய தாழைமலர் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; படர் வந்து நலியும் சுடர் செல் மாலை -துன்பம் வந்து மேன்மேல் வருத்துகின்ற ஆதித்த மண்டிலம் மறையும் மாலைப் பொழுதில்; நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் - காமநோய் மிகுதலானாகிய மிக்க துன்பத்தினின்றும் நாம் இனி இங்கு உய்ந்து வாழ்துங்காண் !; எ - று.
(வி - ம்.) கலிமா கோலுற அறியாத் தேரெனக் கூட்டுக. நலியுமாலை தேர்மணிக் குரல் பிறர்க்குக் கேட்குமாறு வருதல் களவுக்காலத் தியைவதன்றாதலின்வரைய வருகின்றானெனக் கொண்டு வரைவு மலிந்ததாயிற்று.
இறைச்சிகள்:- (1) இருங்கழியின் நெய்தல்மலர் நிறைய நுண்ணிய தாதைப் புன்னை பரப்பாநிற்கு மென்றது, சேரியிடத்து நமர் கையேற்ப நிரம்பிய பொற்குவியலைச் சேர்ப்பன் நம்மை வரைதற் பொருட்டுக் கொடாநிற்கு மென்றதாம்.
இறைச்சிகள்:- (2) தாழம்பூவின் மணம் கானலெங்கும் கமழுமென்றது நின்வரைவு நாடெங்கும் மாட்சிமைப்படு மென்றதாம்.
மெய்ப்பாடு - உவகை.
பயன் - மகிழ்தல்.
(பெரு - ரை.) படர் வந்து நலியும் மாலை சுடர்செல்மாலை எனத் தனித்தனி கூட்டுக. புன்னை தூவும் என்றும், வீழ்தாழ் தாழை என்றும் பாடவேற்றுமையுண்டு.
(78)