(து - ம்,) என்பது, வரையாது வந்தொழுகுங் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைவிபடுந் துன்பமனைத்துங் கேட்டு விரைய வரையுமாற்றானே தோழி தலைவியை நோக்கி நமது முன்னைவினையாலே நாம் துன்புறுவதாயிருக்க நீ ஏன் மயங்குகின்றனை ? இதனை அவர்பாற் சென்று கூறுவோம் வா, நீ வாடுதற்கு யான் அஞ்சா நிற்பேன்; நாம்படுந் துன்பத்தைக் கண்டு அவர் குன்றமும் அழாநின்றதுகாண்; அவர்மட்டும் இரங்குவாரல்லாரென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "அனைநிலைவகையால் வரைதல் வேண்டினும்', என்னும் (தொல்-கள- (23) ) விதியினால் சிறைப்புறமாகத் தோழி தலைவியின் துயர்மிகுதிகூறி வரைவு கடாயது என்க.
| யாஞ்செய் தொல்வினைக்கு எவன்பேது உற்றனை |
| வருந்தல் வாழி தோழி யாஞ்சென்று |
| உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக் |
| கடல்விளை அமுதம் பெயற்கேற் றாஅங்கு |
5 | உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண் |
| தம்மோன் கொடுமை நம்வயின் ஏற்றி |
| நயம்பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது |
| கண்ணீர் அருவி யாக |
| அழுமே தோழிஅவர் பழமுதிர் குன்றே. |
(சொ - ள்.) தோழி யாம் செய் தொல் வினைக்கு எவன்பேது உற்றனை வருந்தல் வாழி - தோழீ ! நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ எதன்பொருட்டு மயங்குகின்றனை ? அவ்வண்ணம் வருந்தாதே கொள்! நீடுவாழ்வாயாக !; யாம் சென்று உரைத்தனம் வருகம் எழுமதி - இத்துன்பத்தை அவர்பால் நாம் சென்று கூறிவிட்டு வருதும் என்னுடன் எழுவாயாக! புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாங்கு உருகி உகுதல் அஞ்சுவல் - பொருந்திய அலைகளையுடைய கடல் நீரால் விளைந்த உப்புக் குவடு மழையின்கண் அகப்பட்டாற் கரைந்தொழிதல் போல நீ உள்ளம் உருகியொழிதலுக்கு யான் அஞ்சா நிற்பேன்; தம்மோன் நம்வயின் கொடுமை ஏற்றி - தம் தலைவன் நம்மிடத்துச் செய்த கொடுமையை நினைந்து; அவர் பழம் உதிர் குன்று - அவருடைய பழங்கள் உதிர்கின்ற குன்றுகள்; நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது கண்ணீர் அருவி ஆக அழும் - நம்பாற் பெரிதும் அன்புடைமையாலே தம் வருத்தத்தை அடக்கிக் கொள்ள மாட்டாதே தங்கண்ணீர் அருவியாகப் பெருகும்படி அழாநிற்கும்; உதுகாண் - அதனை உவ்விடத்தே பாராய் ! அவர் மட்டும் இரங்குபவர் அல்லர்; எ - று.
(வி - ம்.) கடல்விளையமுதம் - ஈண்டு உப்பு. நம்வயின் ஏற்றி, ஏற்றல் - நினைதல்; "ஏற்றம் நினைவுந் துணிவு மாகும்" என்பது (தொல்-சொல்- சூ 337) தம்மோன் - தம்மான். தம் தலைவன்; "தம்மானை யறியாத சாதியா ருளரே" என்றார் தேவாரத்தினும்.
ஊழ்வினை யூட்டாது கழியாதாகலான் அதனைத் துய்க்குங்காறும் அவரின்பத்தை நாம் அடைதலரி தென்பாள் 'தொல்வினைக் கெவன்பேதுற்றனை' யென்றாள். குன்றமும் அழாநின்றதென்றது அதனினும் அவர் நெஞ்சு வன்மையுடையதெனலுமாம். எவன் பேதுற்றனையென்றது துன்பத்துப் புலம்பல். உருகியுகுதலென்றது ஆங்குநெஞ்சழிதல்.
கொடுமையுடையோன் குன்றாயிருந்தும் பசித்தவுயிர்களின் பசிகெடப் பழங்களை உதிர்க்கின்றன; இஃதென்ன வியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றிற்று. மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.) 'உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று' என்பது பற்றி, கற்புச் சிறப்ப நாண் துறந்தாலும் குற்றம் அன்று என்பாள் 'யாம் சென்று உரைத்தனம் வருகம் எழுமதி என்றாள். இனி, யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை" என்னும் தோழியின் அறிவுரை "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால், அல்லற் படுவ தெவன்" என்னும் அருமைத்திருக்குறட் கருத்தினை (குறள் 379) உட்கொண்டிருத்தலும் உணர்க.
(88)