(பாங்கியிற் கூட்டத்தை விரும்பிய தலைமகன் செங்காந்தள் பூவைக் கையுறையாகக் கொடுத்துத் தோழியின்பால் தன் குறை கூறிய வழி அவள், “இஃது எமது மலையிடத்தும் உள்ளதாதலின் இதனை வேண்டேம்” என்று மறுத்துக் கூறியது.)
 1.   
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த  
    
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்  
    
கழறொடிச் சேஎய் குன்றம் 
    
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 

என்பது தோழி கையுறை மறுத்தது.

    (கையுறை -கையின் கண்ணே சேர்ப்பது.)

திப்புத் தோளார் (பி-ம். தீப்புத் தேளார்.)

     (பி-ம்.) 3. ‘கழறொடீஇ’

     (ப-ரை.) வெற்ப, செங்களம் பட-போர்க்களம் இரத்தத்தால் செந்நிறத்தை உடைய களமாகும்படி, அவுணர் கொன்று தேய்த்த - அசுரர்களைக் கொன்று இல்லை ஆக்கிய, செ கோல் அம்பின் - இரத்தத்தால் சிவந்த திரண்ட அம்பையும், செகோடு யானை - சிவந்த கொம்பினை உடைய யானையையும், கழல் தொடி - உழல இட்ட வீர வளையையும் உடைய, சேஎய் குன்றம் - முருகக் கடவுளுக்குரிய இம் மலையானது, குருதிப் பூவின் குலை காந்தட்டு - சிவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளை உடையது.

     (முடிபு) சேயினது குன்றம் காந்தட்டு.

     (கருத்து) காந்தள் பூவால் குறைவிலேமாதலின் நின் கையுறையை ஏலேமென்றபடி.

     (வி-ரை.) வெற்பவென்னும் விளி முன்னத்தால் வருவிக்கப்பட்டது (தொல். செய்.207.) கொன்று - வருத்தி எனவுமாம்; “கரும்புபோற், கொல்லப் பயன்படுங் கீழ்”(குறள்,1078.) தேய்த்த - இல்லையாக்கின (முருகு. 69,ந.) கொன்று தேய்த்த வென்க; தேய்த்த சேயென்க. செங்கோலம்பு: செம்மை வளைவு இன்மையுமாம்; ‘அம்பு வடிவாற் செவ்விதாயினும்’ (குறள்.279, பரிமேல.்) முருகக் கடவுளுக்கு அம்பு உண்மை, “பொறிவரிச் சாபமும்” (பரி.5:65) என்பதனால் பெறப்படும். செங்கோடு - பகைவரைக் குத்திச் சிவந்த கொம்பு.

     முருகக் கடவுளின் ஊர்திகளுள் யானை ஒன்றென்பதும், அதன் பெயர் பிணிமுகம் என்பதும், அருள் செய்வதற்கும் போர் செய்வதற்கும் எழுந்தருள்கையில் அதனை அவர் ஊர்ந்து செல்வார் என்பதும் “வேழமேல் கொண்டு”, “அங்குசங் கடாவ வொருகை”, “ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி” (முருகு.82, 110, 247), “கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு” (பதிற்.11:6), “சேயுயர்பிணிமுக மூர்ந்தம ருழக்கி” (பரி. 5:2) என்பவற்றாலும் அவற்றின் உரைகளாலும் அறியலாகும்.

     கழறொடியென்றாள், “கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்பவொருகை” (முருகு.114) என்று கூறுதலின். கழறொடி - உழலுந்தொடி (சிறுபாண். 95, ந.) சேஎயென்றது அளபெடுத்த வழியும் விளியன்றி நின்றது, “செவ்வேற் சேஎய், சேவடி” (முருகு. 61-2) என்புழிப்போல. குருதிப்பூவின் குலைக் காந்தள் என்றது முதற்கேற்ற அடையடுத்து நின்றது; “குவிமுகி ழெருக்கங் கண்ணி” (குறுந். 17:2), “உளைப்பூ மருதி னொள்ளி ணர்” (முருகு. 28), “நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர்” (சிலப்.14:89) என்ற இடங்களிற்போல. குருதி - சிவப்பு. வெண் காந்தளும் உண்மையின் குருதிப்பூவென்றாள்; குருதிப் பூ - இரத்தம் போன்ற நிறத்தை உடைய பூவெனினும் ஆம். கொத்தாகவே பூத்தலின் குலைக் காந்தள் என்றாள்.

     (மேற்கோளாட்சி) 3-4. ‘குன்றங் ... காந்தட்டு: என்புழி யாம் காந்தட் பூவாற் குறைவிலமெனப் பின்னும் கூற்று, சொல்லெச்சமாய் நிற்குமாறு உணர்க’ (தொல். எச்ச.45,ந.)

    மு. ‘செங்களங் ... காந்தட்டே: இது தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’ (தொல். களவு. 23, ந.); ‘இதனுள் 1. பலவடியும் வந்தவாறு காண்க’, ‘இதனுள் எழுத்து அளவு மிகாமல் குறையாமல் உச்சரிக்க அவ்வழி நின்ற ஓசையால் ஆசிரியம் வந்தவாறு காண்க’ (தொல். செய். 50,76, இளம்); ‘செங்களம் ... காந்தட்டே: எனச் செய்யுள் முடிந்த வழியும் இவற்றால் யாம் குறையுடையேம் அல்லேமென்று தலைமகற்குச் சொன்னாளேல் அது கூற்றெச்சமாம்; என்னை? அவ்வாறு கூறவும் சிதைந்தது இன்மையின். தலைமகட்குச் சொன்னாளேல் அது குறிப்பெச்சம்; என்னை? அது காண்பாயாகிற் காணெனத் தலைமகளை இடத்துய்த்து நீங்கிய குறிப்பினளாகிஅது தான்கூறாளாதலின் என்பது’ (தொல்.செய். 206 பேர்.); ‘இக் காந்தளால் யாம் குறையுடையம் அல்லம் எனத் தலைவற்குக் கூறிற் கூற்றெச்சமாம், அக் கூற்றும் செய்யுட்குச் சிதை வின்மையின்; அது காண்பாயாகிற் காணெனத் தலைவியை நோக்கி இடத்துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம்; அவனைக் கூடுகவெனத் தான் கூறாளாகலின்’ (தொல்.செய்.206, ந; இ.வி.581);’ 2. தலைமகனது வரவு உணர்ந்து தோழி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டு சென்று, யான் செங்காந்தட்பூக் கொய்துகொடு வருவல்; அவ்விடம் தெய்வ முடைத்து; நின்னால் வரப்படாது; நீ அவ்வளவும் இப் பொழிலிடத்தே நில்: என்று நிறீஇ நீங்குவதற்குச் செய்யுள்’ (இறை. 18; நம்பி.149); ‘தோழி தலைமகளைக் குறிவயின் நிறுத்திப் பெயர்ந்தது’ (தமிழ்நெறி விளக்கம், 17); ‘இஃது அளவடியானும் அகவல் ஓசையானும் வந்த நேரிசை ஆசிரியப்பா’ (யா.கா. செய்.2); இந்தப் பாட்டில் கூற்றெச்சமும் குறிப்பெச்சமும் வந்தன’(கல். ‘வானவர்க்கிறைவன்’ மயிலேறும்.)

     ஒப்புமைப் பகுதி 1. செங்களம்: “செங்களம் வேட்டு” (பதிற். 4-ஆம் பத்துப் பதிகம், 11); “செங்களந் துழவுவோள்” (புறநா. 278:7); “தேன்மிடைந்த தாரினான் செங்களஞ் சிறந்ததே” (சீவக. 279); “செங்களத்து மறங்கருதி”, “செங்களத்துச் செழுஞ்செல்வம்” (பு.வெ.127,207).

     அவுணர்த்தேய்த்தல்: “செறுநர்த் தேய்த்த”, “பொருநர்த் தேய்த்த”, “செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கி” (முருகு. 5, 69, 99.)

     2. செங்கோலம்பு: “செங்கோ லம்பினர்” (அகநா. 337:13). செங்கோட்டியானை: “புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின், தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்த”, “தொன்றுறை துப்பொடு முரண்மிகச் சினைஇக், கொன்ற யானைக் கோடுகண் டன்ன, செம்புடைக் கொழுமுகை யவிழ்ந்த காந்தள்” (நற்.39:5-6, 294: 5-7); “பொருதிகல் புலிபோழ்ந்த பூநுத லெழிலியானைக் குருதிக்கோட்ட டழிகறை தெளிபெறக் கழீஇயின்று”(பரி: 20:4-5); “மறமிகு வேழந்தன் மாறுகொண் மைந்தினாற், புகர்நுதல் புண்செய்த புய்கோடு போல, உயர்முகை நறுங்காந்தணாடோறும் புதிதீன” (கலித். 53:3-5.)

     3. கழறொடி: “கழறொடி யாஅய்” (குறுந். 84:3; புறநா.128:5) “கழறொடித்தடக்கை” (புறநா.91:2) தொடிச்சேய்: “தொடியணி தோளன்” (முருகு.211.)

     4. காந்தளின் குருதிப்பூ: “தோடார் குருதி பூப்ப” (முல்லை. 96); “காந்தட்குருதி யொண்பூ”, “குருதி யொப்பின் கமழ் பூங் காந்தள்” (நற். 34:2-3, 399:2); “குருதி மலர்த்தோன்றி” (கைந்நிலை, 26.) குலைக் காந்தள்: “சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்’’ (குறுந். 239;3); ‘‘அகலிலைக் காந்தளலங்குகுலைப் பாய்ந்து”, “காந்தட், கமழ்குலை யவிழ்ந்த நயவருஞ் சாரல்”, “அலங்குகுலைக் காந்தள்” (நற்.185:8, 313:6-7, 359:2); “எடுத்த நறவின் குலையலங் காந்தள்” (கலித். 40:12); “பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள்” (அகநா. 108:15); “பூந்தண் சாரற் பொங்குகுலை யெடுத்த, காந்தட் கொழுமுகை” (பெருங்.2.12:67-8)

(1)
 1.  
பலவடி யென்றது ஐந்து வகைக் கட்டளை அடிகளை.
 2.  
இக் கருத்துக்கு உரியவனாக, ‘‘ அஞ்சிறை வண்டறை காந்தளம் போதுசென்றியான்றருவேன், பஞ்சுறை தேரல்கு லாய்வரற் பாற்றன்று பாழியொன்னார், நெஞ்சுறை யாச்செற்ற வேன்மன்ன னேரி நெடுவரைவாய், மஞ்சுறை சோலை வளாய்த்தெய்வ மேவும் வரையகமே’’, ‘‘ நீவிரி கோதையிங் கேநின்னின் னால்வரற் பாலதன்று, தீவிரி காந்தள்சென் றியான்றரு வேன்றெய்வ மங்குடைத்தாற், பூவிரி வார்பொழிற் பூலந்தை வானவன் பூவழித்த, மாவிரி தானையெங் கோன்கொல்லி சூழ்ந்த வரையகமே’’ (பாண்டிக் கோவை) என்னும் செய்யுட்களும் இறையனாரகப் பொருளுரையில் காட்டப் பெற்றுள்ளன.