கபிலர். (பி-ம்.) 2. ‘கடுக்கும்’; 3.’காந்தளஞ் சிலம்பிற் சிறுகுடி’, ‘பசித்தெனக்’; 4.’கடுங்கண் யானைக்.
(ப-ரை.) தோழி----, அருவி பரப்பின் - அருவி பாயும் பரந்த நிலத்தில், ஐவனம் வித்தி -மலைநெல்லை விதைத்து, பரு இலை குளவியொடு - இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய மலைமல்லிகையோடு, பசுமரல் - பசியமரலை, கட்கும் -களைந்தெறியும், காந்தள் வேலி - காந்தளையே இயற்கை வேலியாகவுடைய, சிறுகுடி - சிற்றூரிலுள்ளார், பசிப்பின் - உணவின்றிப் பசித்தாராயின், கடு கண் வேழத்து கோடு - தறுகண்மையையுடைய யானையினது கொம்பை, நொடுத்து உண்ணும் - விற்று அவ்விலையால் வரும் உணவை உண்ணுதற்கிடமாகிய, வல்வில் ஓரி - வலிய வில்லையுடைய ஓரியினது, கொல்லி குட வரை - கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள, பாவையின் - பாவையைப் போல, மடவந்தனள் - நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள்; ஆயினும், பணை பெருதோள் - அவளுடைய மூங்கிலைப்போன்ற பெரிய தோள்கள், மணத்தற்கு அரிய - தழுவுதற்கு அரியனவாகும்.
(முடிபு) நான் கண்டு காமுற்ற மகள் மடவந்தனள்: அவள் தோள் மணத்தற்கரிய.
(கருத்து) என் மனங்கவர்ந்த தலைவி பெறுதற்கரியள்.
(வி-ரை.) தோழவென்பது முன்னத்தாற் கொள்ளப்பட்டது. ஐவனம் - மலைநெல் (மலைபடு. 115) பருவிலை: “நெடுவிடை” (கைந்நிலை. 13) என்பதுபோல நின்றது: பரீஇயிலை, பரியவிலையென்று நிற்றலே பெருவழக்கு, குளவி: இதனைக் கொடியென்பர் (ஐந். எழு. 3, உரை.) மரல் மருளென்று வழங்கும்; இதனை ஒரு வகைக் கற்றாழை யென்பர். கடுங்கண் வேழமென்றது அவ்வேழத்தின்கோடு பெறுதற்கரிய தென்பது கருதிற்று. நன்மணமுடைய மலரையுடைய குளவியையும் மரலையும் ஒருங்கே களைந்து விடுதலும், தம்பாலுள்ள ஐவன முழுதையும் வித்தி உணவின்றிப் பசித்தலும், அங்ஙனம் பசிக்குங்காலத்து அரிதிற் பெறும் யானைக் கொம்பை எளிய விலைக்குக் கொடுத்தலும் மலைவாணர் அறியாமையைக் காட்டின.
வல் வில் ஓரி: இவன் ஏழு வள்ளல்களுள் ஒருவன். வல்வில்: ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி அம்பை எய்யும் வில்; இதனையுடைய வீரனை வல்வில்லியென்பது வழக்கு. ஓரியின் வல்வில் வீரத்தைப் பற்றி வன்பரணர் என்னும் புலவர்.
| “வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி |
| பேழ்வா யுழுவையைப் பெரும்பிறி துறீஇப் |
| புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி யுரற்றலைக் |
| கேழற் பன்றி வீழ வயல |
| தாழற் புற்றத் துடும்பிற் செற்றும் |
| வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்” (புறநா. 152: 1-6) |
என்று பாராட்டுதல் காண்க.
கொல்லிப்பாவை: இந்நூல் 89-ஆம் செய்யுள் உரை முதலியவற்றைப் பார்க்க. மடவந்தனள் - அறியாமையை உடையளாயினள். யான் அவளைக் கண்டு படுந்துன்பத்தை அறியாளாயினளென்பது கருத்து. கொல்லிப்பாவை தோற்றத்திற் பாவைபோல இருப்பினும் பெறுதற்கரியது. போல, தோற்றத்தில் மடவந்தாள் போலிருப்பினும் பெறுதற்கரியாள் என்றபடி. மடவந்தனள் - வெருவினாளென்றலுமொன்று (குறள். 1089,) பரிமேல்.) கொல்லிப் பாவையைப் போல மடவந்தனளென்று இங்கே உள்ளவாறே பிறரும், “கொல்லி... கடவுளெழுதிய பாவையின், மடவது மாண்ட மாஅ யோளே” (அகநா. 62:13-6) என்று கூறுதல் காண்க. பெருந்தோள்: 95-ஆம் செய்யுள் உரையைப் பார்க்க.
ஏகாரங்கள்: அசைநிலைகள்.
தலைவன் ஒரு தலைவிபாற் காமுற்று வந்ததை அவள் வாயிலாய் அறிந்த பாங்கன், “அவள் எவ்வியல்பினள்?” என்றானுக்குத் தலைவன் கூறியது இது.
இரண்டாவது கருத்து: தலைவன் இரவில் தலைவியின் மனைப் பக்கத்தே வந்து தான் வந்ததைச் சில குறிப்பினாற் புலப்படுத்தினான்; தலைவி அவன் வருவதற்குமுன் இயற்கையாக உண்டான சில ஒலிகளைத் தலைவன் செய்த குறியாக எண்ணிவந்து பார்த்து அவன் வாராமையின் வறிதே மீண்டவளாதலின், பின்பு உண்மையிலே அவன் வந்து குறி செய்ததையும் முன்னதைப் போன்றதென்றே எண்ணி வாளாவிருந்தாள்; அதனால் தலைவியைக் காணாத தலைமகன், “என் மனத்தைக் கவர்ந்து துன்புறுத்திவிட்டுத் தான் ஒன்றும் அறியாள்போல இருக்கும் தலைவியை இனிப் பெறுதல் அரிதுபோலும்!” என்று தன் நெஞ்சை நோக்கி வருந்திக் கூறியது. இக்கருத்து முன்னையதினும் சிறப்புடையதன்று.
மேற்கோளாட்சி 3-4. செய்தெனவென்னும் வாய்பாட்டெச்சம் தன் வினை முதல் வினையைக் கொண்டு முடிந்தது. (நன். 343, மயிலை, 344.சங்.; இ.வி. 247.) (கு.பு.) பசித்தெனவென்பது இவ்வுரையாசிரியர்கள் கொண்ட பாடம்.
ஒப்புமைப் பகுதி 1. ஐவனம்: மதுரைக்.288; ஐந். எழு.12.
அருவிப்பரப்பில் ஐவனம் வித்தல்: “மைபடு சிலம்பி னைவனம் வித்தி, அருவியின் விளைக்கு நாடன்” (குறுந். 371:2-3); “ஐவனங்கள், அணியா ரருவி கவர்கிளி யோப்புமின் சாரல்” (11-ஆம். திருவேகம்ப. அந். 57.)
2. மரல்: குறுந். 232:3.
3. காந்தள் வேலி: குறுந். 76:1, ஒப்பு.
2-3. குளவியும் காந்தளும்: “உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள், அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல்” (புறநா. 90:1-2); “இலையடர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற், குலையுடைக் காந்தள்” (ஐந். எழு. 3.)
3-4. குறவர் யானைக் கொம்பை விற்றல்: “மகிழ்நொடை பெறாஅ ராகி நனைகவுட், கான யானை வெண்கோடு சுட்டி” (அகநா. 245: 10-11.)
5. வல்வில்: “வல்வில் விடலை”, “வல்விற் காளை” (ஐங். 373: 5, 390:3); “கைபுனை வல்வில்”, “வல்வி லைவர்” (கலி. 7:6, 104: 58); “வல்வில் லிளையர், “வான்போழ் வல்வில்” (அகநா. 120:12, 152:15, 281:5); ‘‘வல்வில் வேட்டுவன்’’ (புறநா. 150:7); ‘‘வல்விலி ராமன்’’ (திவ். பெரியதிரு. 5.1: 4) ; ‘‘வல்வில் லிளையன்’’, ‘‘’வல்வில் வயவர்”, “வல்விற் குமரர்”, “வல்வில் லிளையர்” (பெருங். 1.47: 32, 56:45, 264:3.17:217); “சுற்றார் வல்வில்”, “மராமர மேழு மெய்த வாங்குவிற் றடக்கை வல்வில், இராமன்” (சீவக. 1057, 1643)
வல்வில்லின் தன்மை: கம்ப. குலமுறை. 26, மராமரப். 138-9.
வல்வில் ஓரி: நற்.6:9; அகநா. 209:13-4; புறநா. 158:5.
கொல்லிமலை ஓரிக்குரியது: “ஓரி கொல்லி” (நற். 265:7); “ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 208:21-2); “ஓங்கிருங் கொல்லிப் பொருநன்”, “கொல்லி யாண்ட வல்வி லோரி” (புறநா. 152:31, 158:5.)
5-6. கொல்லிப்பாவை: குறுந். 89: 4-6, ஒப்பு.
7. தோள் மணத்தல்: குறுந். 50:5, ஒப்பு.
தோள் அரிய: குறுந். 272:1-8.
(100)