காவன்முல்லைப் பூதனார். (பி-ம்.) 2. ‘றன்சிதர் மறைப்பத்’ 5. ‘பலவாகவ்வே’, ‘பலவாகுகவே’, ‘பலவாகுபவே’.
(ப-ரை.) தோழி, அம்ம - ஒன்று கூறுவன்; கேட்பாயாக; காதலர் - நம் தலைவர், நூல் அறு முத்தின் - நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப் போல, தண் சிதர் உறைப்ப - குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, தாளி தண்பவர் - குளிர்ந்த தாளியறுகின் கொடியை, நாள் ஆ மேயும் - விடியற்காலத்தில் பசுக்கள் மேயும், பனி படு நாளே - பனி வீழ்கின்ற காலத்திலே, பிரிந்தனர் - என்னைத் தலைவர் பிரிந்து சென்றார்; பிரியும் நாளும் - அங்ஙனம் பிரிந்து சென்று உறையும் நாட்களும், பல ஆகுவ - பலவாகின்றன; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!
(முடிபு) தோழி, காதலர் பனிபடு நாளே பிரிந்தனர்; பிரியும் நாளும் பல ஆகுவ.
(கருத்து) தலைவர் காலமல்லாத காலத்திற் பிரிந்ததோடன்றிப் பல நாட்களாகியும் மீண்டாரிலர்.
(வி-ரை.) வாழி: அசை. பனித்துளி ஒன்றோடொன்று தொடர்பின்றித் தனித்தனியே வீழுமாதலின் நூலறுமுத்தை உவமை கூறினாள். தாளி - ஒருவகை யறுகு; “தாளி யறுகின்றாராய் போற்றி” (திருவா. போற்றி. 201); ஒருவகைக் கொடியுமாம். நாட்காலையில் பசு மேயும்பொழுது அறுகின் நுனியிலுள்ள பனித்துளிகள் துளிக்கும். பனிபடுநாளே பிரிந்தனரென்பது பிரிதற்குரிய காலமன்றென்னுங் கருத்தினது.
தலைவர் பிரிந்த நாள் உண்மையிலே சிலவாயினும் அவை தலைவிக்குப் பலவாகத் தோற்றுதல் இயல்பு: நெடுநல்வாடையென்ற பெயர்க்காரணம் கூறவந்த நச்சினார்க்கினியர், ‘தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந் தலைவிக்கு ஒருபொழுது ஓரூழிபோல் நெடிதாகிய வாடையாய்’ என்றதைக் கருதுக.
“என்னோடு உடனிருத்தற்குரிய பருவத்திற் பிரிந்தனர்; அது துன்பத்திற்குக் காரணமாயிற்று; அங்ஙனம் பிரிந்தவர் சில நாளில் மீண்டு வந்திருப்பின் அத்துன்பத்தை ஆற்றியிருப்பேன்; அவ்வாறின்றிப் பல நாட்களாகவும் இன்னும் வந்திலர்; யான் என் செய்கேன்!” என்று தலைவி கூறி இரங்கினாள்.
நாளே: ஏகாரம் பிரிநிலை; ஆகுவவே: ஏகாரம் அசை.
இரண்டாவது கருத்து: தலைவன் தான் கூறிய பருவத்தே வாராது தாழ்த்தானாக அவன் கொடுமையை நினைந்து வருந்திய தலைவியை நோக்கி “ அவன் நின்மாட்டுச் செய்த தலையளியை நினைந்து இக் கொடுமையை மறப்பாயாக” என்ற தோழிக்குத் தலைவி, “அவர் பிரிந்த காலமும் ஏற்றதன்று; வருங்காலமும் கடந்தது; பன்னாளாயின; இனி எங்ஙனம் மறப்பது?” என்று கூறியது. இது முன்னையதினும் சிறப்புடையதன்று.
மேற்கோளாட்சி 1. அம்மவென்னும் இடைச்சொல் கேளென்னும் முன்னிலை யேவற்பொருட்கண் வந்தது (நன். 437, மயிலை.)
மு. பாலைக்குப் பின்பனிப்பருவம் வந்தது; தலைவி தோழிக்கு உரைத்தது (தொல். அகத். 10, ந.)
ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.
2. நூலறு முத்து: குறுந். 51:2.
தண்சிதர் உறைத்தல்: குறுந். 242:2.
2-3. அறுகின் நுனியிலுள்ள பனித்துளிக்கு முத்து: “ஊசியறுகை யுறுமுத்தங் கோப்பனபோல், மாசி யுகுபனிநீர் வந்துறைப்ப” (நக்கீரர் வாக்கு.)
3-4. நற். 391:3-4.
(104)