நக்கீரர். (பி-ம்.) 1. ‘றொடவைப்’ 2. ‘கடியொண்’. ‘சில்குரல்’; 4.’வேர்த்துற்று’; 6. ‘நினைப்பாகும்மே’.
(ப-ரை.) தோழி----, புனவன் துடவை - குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த, பொன்போல் சிறுதினை - பொன்னைப் போன்ற சிறு தினையில், கடி உண் கடவுட்கு இட்ட செழு குரல் - புதியதை உண்ணும் தெய்வத்துக்குப் பலியாக இட்ட வளவிய கதிரை, அறியாது உண்ட மஞ்ஞை - தெரியாமல் உண்ட மயில், ஆடுமகள் வெறி உறு வனப்பின் - தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல, வெய்துற்று - வெம்மையுற்று, நடுங்கும் - நடுங்குதற்கு இடமாகிய , சூர்மலை நாடன் - தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது, கேண்மை - நட்பு, நீர் மலி கண்ணொடு - நீர் மிக்க கண்களோடு, நினைப்பு ஆகின்று - நாம் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது.
(முடிபு) மலைநாடன் கேண்மை நினைப்பாகின்றது.
(கருத்து) தலைவன் வரையாமையின் அவனை நினைந்து துன்புறு கின்றேன்.
(வி-ரை.) புனவன் - புனத்தையுடைய குறவன், மலைவாணர் தினையை வித்தி விளைத்து அதில் தோற்றும் முதற் கதிரைத் தெய்வத்துக்குப் பலியாக இடுதல் மரபு.
ஆடுமகள் - வெறியாடுபவள்; இவள் கணிக்காரிகையெனவும் கூறப் படுவாள். சூர் அச்சமுமாம்.
தெய்வத்துக்கிட்ட பலியை உண்டற்கினியதென்றெண்ணி அறியா துண்ட மஞ்ஞை பின்பு நடுங்குதலைச் செய்யும் மலைநாடனென்றது, என் தகுதிக்கு மேற்பட்டதாகிய தனது கேண்மையை இனியதென்றெண்ணி அறியாமற் பெற்றமையால், இப்பொழுது நடுங்கச் செய்தானென்னும் குறிப்பினது; திருச்சிற்.193, பேர் .
தலைவனுடைய கேண்மை கண்ணீர் மல்கச் செய்யும் துன்பத்தைத் தந்து நினைவளவிலே நின்றதேயன்றி இன்பத்தைத் தந்து வரையுஞ் செயலளவில் முற்றவில்லையென்பது தலைவியின் உட்கோள்.
மேற்கோளாட்சி 2. கடியென்னும் உரிச்சொல் புதுமையென்னும் பொருளில் வந்தது (தொல். உரி. 87, தெய்வச்.; நன், 456, மயிலை.457. சங்.; இ.வி. 282.)
மு. வரைவிடை வைத்த காலத்து வருத்தமுற்றவழித் தலைவி தானே கூறியது (தொல். களவு.21, இளம்.)
ஒப்புமைப் பகுதி 1. மு. குறுந். 133:1.
சிறுதினை: குறுந். 375:3.
3-4. வெறியாடுமகள்; குறிஞ்சி.175; பட்.154-5.
மஞ்ஞை நடுங்குதல்: குறிஞ்சி.169.
4. வெறியுறு வனப்பு: “வெறிகொள் பாவையிற் பொலிந்த” (அகநா.370:14.)
வெறியுற்றார் நடுங்குதல்: குறுந்.52:2, ஒப்பு.
9. ஆகின்று: குறுந்.15:4, 166:4
(105)