மதுரைக் கண்ணனார், (பி-ம்.) 1. ‘ஒண்பூவென்னத்’; 3. ‘நல்லிருள்’; 6. ‘ரூரனொடு வதிந்த’; 7. ‘எம்மின்றுயில்’.
(ப-ரை.) குவி இணர் தோன்றி - குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளினது, ஒள் பூ அன்ன - ஒள்ளிய பூவைப் போன்ற, தொகு செ நெற்றி - தொக்க சிவந்த கொண்டையையுடைய, கணம் கொள் சேவல் - கூட்டங்கொண்ட சேவலே, நெடு நீர் - ஆழமாகிய நீரினால் உண்டாகும், யாணர் - புது வருவாயையுடைய, ஊரன் தன்னொடு வதிந்து - ஊரையுடைய தலைவனோடு தங்கிய, ஏமம் இன் துயில் - இன்பத்தைத் தரும் இனிய துயிலினின்றும், எடுப்பியோய் - எம்மை எழுப்பினை; நீ--, நள் இருள் யாமத்து - செறிந்த இருளையுடைய இடையிரவின் கண், இல் எலி பார்க்கும் - வீட்டிலுள்ள எலிகளை உண்ணும் பொருட்டு ஆராயும், பிள்ளை வெருகிற்கு -காட்டுப் பூனையின் குட்டிக்கு, அல்கு இரையாகி - சிலநாள் இட்டு வைத்துண்ணும் உணவாகி, கடுநவை படீஇயர் - மிக்க துன்பத்தை அடைக.
(முடிபு) சேவல், துயில் எடுப்பியோய்; நீ கடுநவைப்படீஇயர்.
(கருத்து) பொழுது புலர்ந்தமையால் நான் துன்புறுவேனாயினேன்.
(வி-ரை.) குவியிணரென்றது முதலுக்கேற்ற அடை. ‘பிள்ளை வெருகிற்கு எலியே உணவாகச் சாலும்; அதற்கு நீ அகப்படின் பல நாள் கவலையின்றி உண்ணுதற்கு உதவும்; நானும் நின்குரல் கேளாது இன்புறுவேன்’ என்பது தலைவியின் உள்ளக்கிடக்கை. கடுநவை யென்றது இறந்துபாட்டை. கடுநவைப்பட்டு இரையாகுக வென மாறிக்கூட்டுக. படீஇயரோ: ஓ அசைநிலை. எடுப்புதல் - எழுப்புதல் (கலி.70:21, ந.) ஏகாரங்கள் அசை நிலை.
தலைவன் பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து சென்று மீண்டானாக, அவனை நெடுநாட் பிரிந்த துயரறக் கூடியிருக்க எண்ணிய தலைவிக்கு ஓரிரவு மனநிறைவை உண்டாக்கவில்லை; ஏம இன்றுயிலைத்தரும் அவ்விரவு விரைவிற் புலர்ந்ததுகண்டு அவள் துயருற்றாள்; காம மயக்கத்தால், புலர்ந்ததென உணர்த்திய சேவலின்பாற் குறையுளதாகக் கருதி இது கூறினாள்; ஆதலின் இது காம மிக்க கழிபடர் கிளவியாயிற்று.
மேற்கோளாட்சி 2. கோழியின் ஆணிற்குச் சேவலென்னும் பெயர் உரித்து (தொல். மரபு. 48, பேர்.)
4. பிள்ளையென்னும் பெயர் நடப்பவற்றிற்கு வந்தது (தொல்.மரபு.5, பேர்.; மரபு.26, இளம்.)
மு. ‘இதனுள், தொகுசெந்நெற்றிக் கணங்கொள் சேவலென்பதனையும், கடுநவைப் படீஇயரோ நீயே யென்பதனையும், இன்று யிலெடுப்பியோ யென்பதனையும் கூட்டிப் பொருள் கொண்டமையான் கொண்டுகூட்டுப் பொருள் கோளாயிற்று’ (யா.வி. 95.)
ஒப்புமைப் பகுதி 1-2. சேவலின் கொண்டைக்குத் தோன்றிப்பூ; “கொய்மலர தோன்றிபோற், சூட்டுடைய சேவலும்”, “பூத்தலை வாரணப்போர்” (சீவக.73, 120.)
3. நள்ளிருள் யாமம்: குறுந். 6:1, ஒப்பு.
4. பிள்ளை வெருகு: புறநா. 117:8,
அல்கிரை; “கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய” (அகநா. 3:4)
(கு-பு.) அல்கிரை யென்பதற்கு மிக்க இரையென்று அகநானூற்று அரும்பதவுரை யாசிரிய ரெழுதினர்.
5. கடுநவைப் படீஇயரோ: “கடுநவைப் படீஇயர் மாதோ” (அகநா. 145:14); படீஇயர் - படுக; குறுந்.243:5, 395:5; ஐங்.142:3.
1-5. சேவல் வெருகிற்கு உணவாதல: “குவியடி வெருகின்பைங்கணேற்றை, ஊனசைப் பிணவி னுயங்குபசி களைஇயர், தளிர்புரை கொடிற்றிற் செறிமயி ரெருத்திற், கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ வன்ன, நெற்றிச் சேவ லற்றம் பார்க்கும்” (அகநா. 367: 8-12.) 7.
ஏமவின்றுயில்: “இருண்மென் கூந்த லேமுறு துயிலே” (அகநா. 92:13.)
(107)