(தலைவன் கேட்கும் அண்மையனாக இருக்கையில் தலைவிக்குக் கூறுபவளாய், “தலைவர் நாடோறும் வந்து பயின்று செல்லும் இக்காலத்தில் நின் நுதற்கவின் மாறியது என்?” என்று தோழி, அவனுக்கு வரைய வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)
 109.    
முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை 
    
புணரி யிகுதிரை தரூஉந் துறைவன் 
    
புணரிய விருந்த ஞான்றும் 
    
இன்னது மன்னோ நன்னுதற் கவினே. 

என்பது சிறைப்புறம். தம் வேறுபாடு கண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்றத் தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது.

நம்பி குட்டுவன்.

     (பி-ம்.) 1. ‘முட்கால்’; 2. ‘யிஃதிரை’, ‘மிகுதிரை’, ‘யுணரியிகுதிரை’; 3. ‘புணரியவிந்த’.

     (ப-ரை.) முடம் கால் - வளைவையுடைய காலையுடைய, இறவின் - இறாமீனின், முடங்குபுறம் பெரு கிளை - வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை, புணரி இகு திரை - கடலில் தாழும் அலையானது, தரூ உம் - கொண்டு வந்து தருதற்கு, இடமாகிய, துறைவன் - துறையையுடைய தலைவன், புணரிய இருந்த ஞான்றும் - அளவளாவ இருந்தபொழுதும், நல் நுதல்கவின் - நினது நல்ல நெற்றியின் அழகு, இன்னது - பிறர் அலர் கூறும் குறைபாட்டையுடைய இத்தகையதாயிற்று; மன் - இஃது இரங்கற்குரியது!

     (முடிபு) துறைவன் புணரிய இருந்த ஞான்றும் நன்னுதற் கவின் இன்னது மன்.

     (கருத்து) தலைவன் வரைந்தாலன்றி நின் வேறுபாடு நீங்காது.

     (வி-ரை.) தலைவன் வரைந்துகொள்ளாமல் நெடுங்காலம் ஒழுகினானாக, அதனால் தலைவி வருந்தினாள்; அவ்வருத்தத்தை அவளது நுதல் வேறுபாடு முதலியன வெளியிட ஊராரறிந்து அலர் தூற்றுவாராயினர். இந்நிலையைத் தலைவன் கேட்கும் அணிமையில் இருப்பத் தலைவிக்குக் கூறுவாள் போலத் தோழி அவனுக்கு அறிவித்தது இது. தலைவனோடு நாடோறும் பயின்று வரினும் அச்சத்தின்பாற்பட்ட அக்களவின்பம் தலைவிக்குத் துன்பத்தை உண்டாக்குவதென்றும் அலர் மிக்கதென்றும் அறிந்து தலைவன் அவளை வரைந்து கொள்ளுதல் இதன் பயன்.

     நுதற்கவின் இன்னதென்றது பசலை பெற்றதைக் குறித்தது. களவுக் காலத்து இடையீடு உண்மையின் அதனால் வருந்திய தலைவியின் நிலை நீங்க வரைந்துகொண்டு இடையீடின்றி உடனுறைந்து இல்வாழ்க்கை நடத்தலே தகுதியென்று தோழி குறிப்பால் அறிவுறுத்தினாள்.

     மேற்கோளாட்சி மு. தலைமகள் கவினழி புரைத்தது (நம்பி. 164.)

     ஒப்புமைப் பகுதி 1. இறவின் புறம் வளைந்தது: குறுந் 160:2; “சிலையு மான... பச்சிறாப் பிறழும்” (பெரும்பாண்.269-70); “முடங்கிறா”, “முடங்கு புற விறவின் மோவா யேற்றை, எறிதிரை தொகுத்த வெக்கர்” (நற். 49:3, 211:5-6); “முடங்குபுற விறவு”, “துய்த்தலை முடங்கிறா” (அகநா. 220:17, 376:16); “பூட்டுசிலை யிறவு” (சீவக. 1788); “முடங்கிறா முதுநீர்” (தே. திருநா. திருவாரூர்.)

     2. இகுதிரை: மலைபடு. 226;ஐங்.465:1; அகநா. 82:5, 112:14, 274:2.

     4. நுதற்கவின்: கலித்.53:24.

(109)