(தலைவன் வேலிப்புறத்தானாக அவனுக்குப் புலப்படும்படி தோழி, “நின்மேனியின் வேறுபாடு கண்டு அன்னை வெறியாடத் தொடங்கினாள். அவ் வேறுபாடு நீங்குதற்குரிய வழி வெறியாடலன்றென்பதைத் தாய் அறியும் பொருட்டுத் தலைவன் இங்கே வந்து செல்லுதல் நலம்” என்று தலைவியை நோக்கிக் கூறியது.)
 111.    
மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன் 
    
வென்றி நெடுவே ளென்னு மன்னையும் 
    
அதுவென வுணரு மாயி னாயிடைக் 
    
கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன 
5
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் 
    
வல்லே வருக தோழிநம் 
    
இல்லோர் பெருநகை காணிய சிறிதே. 

என்பது வரைவு நீட்டித்த வழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறி யெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைவன் சிறைப் புறமாகத் தோழி கூறியது.

தீன்மிதி நாகன் (பி-ம். தீன்மதி நாகன்.)

     (பி-ம்.) 5. ‘செழுமலை’; 6-7. ‘நம், மல்லேர்’.

     (ப-ரை) தோழி-, மெல் தோள் நெகிழ்த்த செல்லல் - நின் மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம், வேலன் - வெறியாட்டாளன், வென்றி நெடுவேள் என்னும் - வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று சொல்லுவான்; அன்னையும் - நம் தாயும், அது என உணருமாயின் - அதுவென்றே நினைப்பாளாயின், ஆயிடை - அப்பொழுது, கூழை இரு பிடி - குறிய கருமையான பெண் யானையினது, கை கரந்தன்ன - கை மறைந்தாற் போன்றல, கேழ் இரு துறுகல் கெழுமலை நாடன் - கரிய நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டையுடைய தலைவன், நம் இல்லோர் பெரு நகை காணிய - நம் வீட்டிலுள்ளாரது பெரிய நகைக்கிடமான செய்கையைக் காணும் பொருட்டு, சிறிது - சிறிது நேரம், வல்லே வருக - இங்கே விரைந்து வந்து செல்வானாக.

     (முடிபு) தோழி, செல்லலை வேலன் நெடுவேளென்னும்; அன்னையும் அதுவென உணருமாயின், மலைநாடன் காணிய சிறிது வல்லே வருக.

     (கருத்து) தாய் நின் வேறுபாடு கண்டு வெறியெடுத்தலைத் தலைவன் அறிவானாக.

     (வி-ரை.) முருகக் கடவுளுக்குரிய வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வெறியாட்டாளன் வேலனென்னும் பெயர்பெற்றான்; இவன் படிமத் தானெனவும் கூறப்படுவான். பிள்ளையாயிராமல் தான்வேண்டிய வடிவு கோடலின் நெடுவேளென்றான்; “சேவலங் கொடிய னெடியன்” (முருகு. 210-11, ந.)

     அன்னையும்: உம்மை உயர்வு சிறப்பு; வேலன் நெடுவேளென்று கூறினானாயினும், பெண்ணியல்பினாலும் என்னோடு பயின்ற பயிற்சியினாலும் என் நிலையை ஓர்ந்தறிதற்குரிய தாயும் அதனை உண்மை யென்று கருதி, என் வேறுபாடு முருகனால் வந்ததென்றே உணர்தல் அருமையென்னும் கருத்தால் உணருமாயினென்றாள்.

     வாளா நோக்குவார்க்குப் பிடி கைகரந்தாற் போன்ற தோற்றத்தையும் ஆய்ந்தறிவாருக்குத் தன் உண்மைத் தோற்றத்தையும் தன்நாட்டிலுள்ள துறுகல் தருதலைப்போல, ஆய்வின்றிக் காண்பார்க்கு முருகனால் வந்த விளைவென்றும் ஆய்ந்து காண்பார்க்குத் தன்னால் வந்ததென்றும் தோற்றும்படி தலைவன் தந்த நோய் செய்ததென்பது குறிப்பு.

     வல்லே வருகவென்றது, தாய் விரைவில் வெறியெடுக்கக் கருதுவாளென்பதையும் குறிப்பித்தது.

     நகை - நகையை விளைக்கும் செயல். தாய் செயல் பேதைமையை யுடையதாதலின் அது கண்டு நகை விளையும்; “எள்ளலிளமை பேதைமை மடனென், றுள்ளப்பட்ட நகைநான் கென்ப” (தொல். மெய்ப். 4) என்பது காண்க. சிறிது காணிய வென்றமையால் இதனைப்போல எத்துணையோ நகைக்குக் காரணமான செயல்களை இல்லோர் புரிவரென்பது பெறப்படும்; அவையாவன: கட்டுப் பார்த்தல், கழங்கு பார்த்தல் முதலியன.

     நெடுவேள்: ஆகுபெயர், அவன் செயலுக்கு ஆயினமையின். சிறிதே: ஏகாரம் அசைநிலை.

     இதனால் தோழி சிறைப்புறமாக இருந்த தலைவனுக்கு, “தலைவன் இன்னும் வரைந்து கொள்ளாமையால் தலைவி துன்புற்றாள்; அவளுடைய அகத்துன்பம் புறத்தாருக்குப் புலனாகும்படி அவள் தோள்கள் நெகிழ்ந்தன. அதுகண்டு தாய் வெறியாட்டெடுக்க எண்ணியுள்ளாள்” என்பதைப் புலப்படுத்தினாளாயிற்று. தலைவன் இதனை யுணர்ந்து விரைவில் வரைந்து கொள்ளுதல் இதன் பயன்.

     ஒப்புமைப் பகுதி 1. தோள்நெகிழ்த்த செல்லல்:குறுந். 87:5, ஒப்பு.

     2. நெடுவேள்: முருகு. 211, 273; பெரும்பாண். 75; பரி.19:84; அகநா. 22:6, 98:27, 120:1, 383:5; புறநா.55:19, சிலப்.23:190.

     4-5. துறுகல்லுக்கு யானை: குறுந். 13: 1-2, ஒப்பு.

     துறுகல்லுக்குப்பிடி: “சுரும்புணக் களித்த புகர்முக வேழம், இரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத் தழூஉம்” (ஐங்.239:1-2); “பிடிதுஞ்சு வன்ன வறை” (கலி. 108:40.)

     1-7. வெறியாட்டெடுக்கையில் தலைவன் வருதலும் இல்லோர் பேதைமை கண்டு நகுதலும்: அகநா.22.

     கருத்து: அகநா.242, கருத்து.

(111)