மாதிரத்தன். (பி-ம்.) 1.’மாதீரத்தன், மாதீர்த்தன்’ 2. ‘சேய்த்துமன்று’; 3. ‘தியாவரும்’; 5.’கூழைக்கேர் மணங்குறுகம்’, ‘கூழைக் கேருமணங்குணர்கஞ்’.
(ப-ரை.) தலைவ, பொய்கை---, ஊர்க்கும் அணித்து- ஊருக்கும் அருகிலுள்ளது; சிறு கான் யாறு - சிறிய காட்டாறு, பொய்கைக்கு சேய்த்தும் அன்று - அப்பொய்கைக்குத் தூரியதும் அன்று; அணிமையிலே உள்ளது; பொழில் - அங்குள்ள சோலை, இரைதேர் - அப்பொய்கையிலும் யாற்றிலும் உணவை ஆராய்கின்ற, வெண்குருகு அல்லது - வெள்ளிய நாரைகளை அன்றி, யாவதும் - வேறு எவ்வுயிரும், துன்னல் போகின்று - நெருங்கல் ஒழிந்ததாகும்: யாம் எம் கூழைக்கு - நாங்கள் எமது கூந்தலுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு, எருமண் கொணர்கம் - எருமண்ணைக் கொணர் வேமாய், சேறும் - அங்கேசெல்வேம்; பெருபேதை - பெரிய பேதைமையையுடைய தலைவி, ஆண்டும் வருகுவள் - அங்கும் வருவாள்.
(முடிபு) பொய்கை ஊர்க்கும் அணித்து; யாறு சேய்த்து மன்று; பொழில் யாவதுந் துன்னல் போகின்றது; யாம் சேறும்; பெரும்பேதை ஆண்டும் வருகுவள்.
(கருத்து) பொய்கைக்கு அணித்தாகிய காட்டாற்றின் கரையிலுள்ள பொழிலகத்தே தலைவியைக் கண்டு அளவளாவலாகும்.
(வி-ரை.) பொய்கை என்றது, ஊரினர் உண்ணுதற்கும் ஆடுதற்கும் பயன்படும் பொய்கையை, ஊர்க்கு அணித்தாயிருத்தல் பற்றி அதனை ஊரணியென வழங்குதலும் உண்டு;
“சேர், 1 ஊரணி யுற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கு மூதியமே” (திருச்சிற். 400, பி-ம்.); பொய்கை - மானிடர் ஆக்காத நீர்நிலை. ஊர்க்கும் : உம் எதிரது தழீஇய எச்சவும்மை; சிறுகான் யாற்றுக்கும் அணித்தென்னும் பொருளைத் தழுவி நின்றது. தலைவன் சிறுகான்யாற்றைக் கடந்து வரும் வழக்கம் உடையன் ஆதலின் அவ் யாற்றைச் சுட்டிக் கூறினாள். இரை - மீன் முதலியன. போகின்று - நீங்கியது. எருமண் என்றது களிமண்ணை. கூந்தலிலுள்ள எண்ணெய்ப்பசை, சிக்கு முதலியன போகும் பொருட்டுக் களிமண்ணைத் தேய்த்துக் கொண்டு மகளிர் நீராடுதல் வழக்கு; இதனைச் சிற்றூர்களில் இன்றும் காணலாம்;
“கூழைபெ யெக்கர்” (குறுந். 372:5),
“்கூந்த னறுமண்” (பெருங். 1.40:28) என்பவற்றைப் பார்க்க.
ஆண்டும் வருகுவளென்றது ஈண்டு வந்ததையன்றி யென்னும் எச்சப் பொருளைத் தந்தது.
பெரும்பேதை யென்றாள், கூழை முடியா நிலையிலுள்ள தனக்கு எருமண் வேண்டிற்றிலதாகவும் எம்மொடு வருவாளென்பது கருதி.
ஊர்க்கு மணித்தே பொய்கை, அப்பொய்கைக்குக் கான்யாறு அருகிலுள்ள தென்றதனால் ‘யாங்கள் வரல்எளிது’ என்பதைக் குறிப்பித்தாள். இங்ஙனம் வருதற் கெளியதாகிய இடத்துத் தனியிடமு முண்டாங் கொலோ வென்னும் ஐயம் நிகழாதபடி யாவதும் துன்னுதல் நீங்கியது அப்பொழில் என்றாள். யாம் வருவது எம் கூழைக்கு எருமண் கொணர்தற் கேயாதலின் யாமும் கான் யாற்றங் கரையிலே நிற்றலன்றிப் பொழிலிற் புகுதோம் என்பதை அறிவித்தாள்.
“தோழியின் முடியு மிடனுமா ருண்டே” (தொல். களவு. 30) என்னும் விதிபற்றித் தோழி குறியிடங் கூறினாள்.
ஏகாரங்கள் அசைநிலைகள்.
மேற்கோளாட்சி 1. உயர்வு சிறப்பும்மை வந்தது (தொல். இடை. 7, கல், ந.)
2. ஐயவும்மை வந்தது (தொல். இடை . 7, கல்.)
1-2. ஐயவும்மை வந்தது (தொல். இடை. 7, ந.); நான்காம் வேற்றுமையுருபு இதற்கிது வென்பதுபட வந்தது (நன். 297, மயிலை; இ.வி. 201.)
மு. பகற்குறி நேர்ந்தது (தொல். களவு. 24, இளம்.); பகற்குறி நேர்ந்து இடங்காட்டியது (தொல். களவு. 23, ந.) நயந்தமை கூறிய தோழி தலைமகற்குக் குறிப்பினாற் பகற்குறியிடங் காட்டியது (களவியற்.)
ஒப்புமைப் பகுதி 3-4. குருகு குறியிடத்தில் இருத்தல்: குறுந். 25:4-5.
(113)
1. | ‘‘காரணி கற்பகம்’’ என்னும் முதலையுடைய இச் செய்யுளின் ஈற்றடியின்முதல் ‘‘ஊரணி’’ என்று ஒரு பழம்பிரதியிற் காணப்பட்டது. எதுகை நயத்தையும், ‘உற்றவர்க்குச் சேர் ஊரணி - சுற்றத்தார்க்கு அவர் வேண்டிய செய்யவிருத்தலின் அணித்தாகிய ஊரணியோடொக்கும்’ என்ற பேராசிரியர் உரையையும், இக் குறுந்தொகைச் செய்யுட் பொருளையும் கருதுகையில் இப்பாடம் சிறப்புடையதாகத் தோற்றுகின்றது. ஊருக்கு அணித் தானமையின் பொய்கையை ஊரணி என்று கூறுதலும், ஊரினரால் உண்ணப்படும் தகுதியுடைய நீர் நிலையை ஊருணி என்று கூறுதலும் வழக்கென்று கொள்ளுதல் பொருந்தும். |