(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)
 115.    
பெருநன் றாற்றிற் பேணாரு முளரே 
    
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு 
    
புலவி தீர வாளிமதி யிலைகவர் 
    
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல் 
5
மென்னடை மரையா துஞ்சும் 
    
நன்மலை நாட நின்னல திலளே. 

என்பது உடன்போக்கு ஒருப்படுத்து மீளுந் தோழி தலைமகற்குக் கூறியது.

கபிலர்.

     (பி-ம்.) 1. ‘பெருநன்றாற்றிய’, ‘பெருநன்றொன்றிற்’; 2. ‘புரிமாணாடு’; 3-4. ‘யிலை கவரப் பாடமை பொழுகிய’.

     (ப-ரை.) ஆடு அமை ஒழுகிய -அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, தண் நறு சாரல் - தண்ணிய நறிய மலைப் பக்கத்தின் கண், மெல் நடை மரையா - மெல்லிய நடையையுடைய மரையா, இலை கவர்பு - இலைகளை விரும்பி உண்டு, துஞ்சும் - துயிலுதற்கிடமாகிய, நல் மலை நாட -நல்ல மலை நாட்டையுடைய தலைவ, பெரு நன்று ஆற்றின் - பெரிய நன்மை யொன்றை ஒருவர் தமக்குச் செய்தால், பேணாரும் உளரே -அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உள்ளாரோ? யாவரும் போற்றுவர்; அது சிறப்பன்று; ஒரு நன்று -சிறிதளவு நன்மையை, உடையள் ஆயினும் - இத்தலைவி பெற்றவளாக இருக்கும் காலத்திலும், புரி மாண்டு - விருப்பம் மாட்சிமைப்பட்டு, புலவி தீர - புலத்தல் நீங்கும் வண்ணம், அளிமதி - இவளைப் பாதுகாப்பாயாக; நின் அலது இலள் - இவள் நின்னையன்றி வேறு பற்றுக்கோடு இல்லாள்.

     (முடிபு) மலைநாட, பெருநன்று ஆற்றிற் பேணாரும் உளரே? ஒரு நன்று உடையள் ஆயினும் அளிமதி; நின்னலதிலள்.

     (கருத்து) இவள்பால் இன்று போல என்றும் அன்பு வைத்துப் பாது காப்பாயாக.

     (வி.ரை.) ‘‘இவள் நினக்குப் பலவகையிலும் இன்பம் தரும் நிலையில் இருக்கின்றாள்; இவள்பால் இப்பொழுது நீ அன்பு பூண்டு பாதுகாத்தல் பெரிதன்று; பெரிய உபகாரம் செய்தாரைப் பாதுகாத்தல் உலகில் யாவர்க்கும் இயல்பே. ஆதலின் இவளால் இப்பொழுது பெறும் இன்பத்தை அடைய முடியாத முதுமைப் பருவத்திலும் இவளுக்கு நின் பாலுள்ள அன்பொன் றையே கருதிப் பாதுகாத்து வருவாயாக. இவளைப் பாதுகாப்பதற்கு வேறு யாரும் இலர்” என்று தோழி கூறித் தலைவியைத் தலைவனுடன் விடுத்தாள்.

     உளரே: ஏகார வினா எதிர்மறைப் பொருள் தந்தது: ஒரு நன்றென்றது தலைவிக்குத் தலைவன் பாலுள்ள அன்பை; “கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த, ஒன்றுநன் றுள்ளக் கெடும்” (குறள். 109) என்பது இங்கே நினைக்கத்தக்கது. இலை என்றது மூங்கில் இலையையன்று; பிற மரங்களில் உள்ளவற்றை. கவர்தல் என்னும் சொல் விலங்கினங்கள் உணவு தேடியுண்டலைக் குறித்தற்குச் சான்றோரால் ஆளப்படுகின்றது; “மரையா மரல் கவர” (கலி. 6:1) முதலியவற்றைப் பார்க்க.

     மரையா தனக்குப் பயன்படாது ஓங்கி வளர்ந்த மூங்கில்களையுடைய சாரலாயினும் தனக்குப் பயன்படும் இலைகளைத் தேடியுண்டு அதன்கண் அன்புவைத்துத் துயில்வதுபோல நினக்குப் பயன்படாத மூப்புடையளாயினும் நினக்கு உவந்த நல்லியல்பு கண்டு இன்புற்று இவள்பால் அன்பு வைத்தொழுகு வாயாக வென்பது குறிப்பு.

     இலளே: ஏ அசைநிலை.

     மேற்கோளாட்சி மு. பாங்கி தலைவனுக்கு ஓம்படை கூறியது (இறை. 23); தலைவன் ஒருவழித் தணக்கும்வழிப் பாங்கி ஓம்படை கூறியது (தொல்.களவு. 24, இளம், ந.)

     ஒப்புமைப் பகுதி 1. பெருநன்று : “சிறுநன்றி யின்றிவர்க்கியாஞ் செய்தக்கா னாளைப், பெறுநன்றி மன்னும் பெரிதென்று” (யா.வி. 4, மேற்.)

     4. ஆடமை: குறுந். 131:1; அகநா.82:1, 225:5.

     5. மென்னடை மரையா: “துளங்குநடை மரையா” (அகநா. 3:7.)

    6. தலைவி தலைவனை யன்றிப் பாதுகாப்பார் பிறரிலள் : குறுந். 397:7-8; “தம்மின் றமையா நந்நயந் தருளி” (நற். 1:7); “இவளே நின்னல திலளே” (இறை. 23, மேற்.)
(115)