(இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து மீண்ட தலைமகனது வேறுபாடு கண்ட பாங்கன், “நினக்கு இஃது எற்றினான் ஆயிற்று?” என்றவழி, “ஓர் இளைய மகளால் ஆயிற்று” என்று தலைவன் கூறியது.)
 119.    
சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை 
    
கான யானை யணங்கி யாஅங் 
    
கிளையண் முளைவா ளெயிற்றள் 
    
வளையுடைக் கையளெம் மணங்கி யோளே. 

என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

சத்தி நாதனார் (பி-ம். சத்தி நாகனார்.)

     (பி-ம்.) 3. ‘கிளையமுளை’.

     (ப-ரை.) தோழி---, இளையள் - இளமையை உடையவளும், முளைவாள் எயிற்றள் - நாணல் முளையைப் போன்ற ஒளியை உடைய பற்களை உடையவளும், வளையுடைக் கையள் - வளையினை உடைய கையினளு மாகிய ஒருத்தி, சிறு வெள் அரவின் - சிறிய வெள்ளிய பாம்பினது, அ வரி- அழகிய கோடுகளையுடைய, குருளை - குட்டியானது, கானம் யானை - காட்டுயானையை, அணங்கி யாங்கு - வருத்தினாற் போல, எம் அணங்கியோள் - எம்மை வருந்தச் செய்தனள்.

     (முடிபு) இளையள், எயிற்றள், கையள் எம் அணங்கியோள்.

     (கருத்து) ஓர் இளைய மகள் என்னைத் தன் அழகினால் வருத்தினாள்.

     (வி-ரை.) கரும்பாம்பும் உளதாதலின் அதனை நீக்க வெள்ளர வென்றான். இதனைக் கோதுமை நாகமென இக்காலத்தில் வழங்குவர். தோற்றத்தால் அழகிய வரியை உடையதேனும் செயலாற் கொடியது என்பது குறிப்பு.

     இளைய பாம்புக்குட்டியானது, பிறருக்கு அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள் என்று உவமையை விரித்துக் கொள்க.

     பாம்பின் இளமை தலைவியின் இளமைக்கும், அதன் வரி வளைக்கும் உவமைகள். முளைவாளெயிறென்ற பொருளடையை உவமைக்குங் கூட்டுக. அரவின் குட்டி தன் எயிற்றால் யானையை வருத்தியது போல் தலைவி தன் முறுவலினால் என்னை வருத்தினாளென்றும் உவமையை விவரிக்க.

     இயற்கைப் புணர்ச்சிக்குமுன் காட்சியினால் இளையள் என்பதையும், முறுவற் குறிப்புணர்ந்த வழி முறைவாள் எயிற்றள் என்பதையும், இயற்கைப் புணர்ச்சியின்கண் தழுவு வழி வளையுடைளக் கையள் என்பதையும் உணர்ந்தவனாதலின் அவற்றை முறையே வைத்துக் கூறினான்.

     ஏகாரம் : ஈற்றசை.

     மேற்கோளாட்சி 1. குருளை யென்பது பாம்பிற்கும் சிறுபான்மை வந்தது (தொல். மரபு. 8, பேர்.)

     மு. தலைவன் உற்ற துரைத்தது (இறை. 3; களவியற். 26); பாங்கற்குத் தலைமகன் கூறியது (தமிழ்நெறி. 16); தூங்கிசை யகவற் சிறப்புடை இயற்சீரான் வந்த நேரிசையாசிரியப்பா (யா. வி. 71.)

     ஒப்புமைப் பகுதி 1. அரவின் குருளை : “சிறுவெள் ளரவின் குருளை” (சிலப். 12:22.)

     1-2. இளைய அரவு வருத்துதல்: “அளைதா ழரவு மரியும்வெந்தீயு மரசுமெங்ஙன், இளைதாயி னுங்கொல்லும்” (அம்பிகாபதி. 126.)

     அரவு யானையை வருத்துதல்: “குஞ்சரங் கோளிழைக்கும், பாம்பு” (திருச்சிற். 21.)

     4. எம் அணங்கியோள் : ஐங். 259:6.

     3-4. இளையளாயினும் தலைவி தலைவனை அணங்குதல்: “குன்றக் குறவன் காதன் மடமகள், வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி, வளையண் முளைவாள் எயிற்றள், இளையள் ஆயினு மாரணங்கினளே” (ஐங். 256.)

 மு. 
“அளையா ரவின் குருளை யணங்க வறிவழிந்து  
  
 துளையார் நெடுங்கைக் களிறு நடுங்கித் துயர்வதுபோல்  
  
 வளையார் முளையெயிற் றார்மன்னன் மாறன்வண் கூடலன்ன  
  
 இளையா ரொருவ ரணங்கநைந் தால்யா னினைகின்றதே’’. 
  
                (பாண்டிக்கோவை)  
(119)