(‘தலைவி தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையிலளாயினாள்’ என்று கவலை உற்ற தோழி கேட்கும்படி, ‘‘தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்தே யான் வருந்துகின்றேன் என்பதை உணராமல் இவ்வூர், பிரிவை ஆற்றேனாயினேன் என்று வேறொன்றைக் கூறாநின்றது; இஃது என்ன பேதைமை!’’ என்று தலைவி சொல்லியது.)
    
 12.   
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய 
    
உலைக்க லன்ன பாறை யேறிக் 
    
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும் 
    
கவலைத் தென்பவவர் சென்ற வாறே 
5
அதுமற் றவலங் கொள்ளாது 
    
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. 

என்பது ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

ஓதலாந்தையார்.

     (பி-ம்.) 2. ‘உலைக்கனலன்ன’ 4. ‘கவலைத்தவர் தேர்சென்ற’, ‘கவலைத்தென்பவவர் தேர்’ 6. ‘நொதுமலர்க் கழறும்’, ‘நொதுமற்கலுழும்’.

     (ப-ரை.) அவர் சென்ற ஆறு-தலைவர் போன வழி யானது, எறும்பி அளையின் - எறும்பின் வளைகளைப் போல, குறுபல் சுனைய- குறுமையை உடைய பலவாகியசுனையை உடைய, உலைகல் அன்ன- கொல்லனது உலைக் களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்மையை உடைய, பாறை ஏறி-பாறையின் மேல் ஏறி, கொடு வில் எயினர்-வளைந்த வில்லை உடைய எயினச் சாதியினர், பகழி மாய்க்கும்- தம் அம்புகளைத் தீட்டுதற்கு இடமாகிய,கவலைத்து- கவர்த்த வழிகளை உடையது, என்ப-என்று கண்டோர் கூறுவர், இ அழுங்கல் ஊர்-இந்த ஆரவாரத்தை உடைய ஊரானது, அது அவலம் கொள்ளாது-அவ்வழியின் கொடுமையைப் பற்றித் துயரத்தை உட்கொள்ளாமல், நொதுமல் கழறும்-அயற்றன்மையை உடைய சொற்களைக் கூறி இடித் துரைக்கும்.

     (முடிபு) அவர் சென்ற ஆறு கவலைத்து என்ப; ஊர் அவலங் கொள்ளாது கழறும்.

     (கருத்து)தலைவர் சென்ற வழி மிக்க கொடுமையை உடையது; அதனைத் தோழி நினைந்திலள்.

     (வி-ரை.) எறும்பி- எறும்பு; எறும்பை எறும்பி என வழங்கும் மரபு திருவெறும்பியூர் என்னும் சிவ தலத்தின் பெயராலும் அறியப்படும்; ‘‘எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே’’ (தே. திருநா.) அளை-வளை;எறும்பின் வளையை இங்ஙனம் கூறும் வழக்கு, ‘‘நுண்பல் லெறும்பு கொண்டளைச் செறித்த வித்தாவல்சி’’ (அகநா.377:3-4) என்பதனாலும் பெறப்படும். சுனைகள் குறுமையும் பன்மையும் உடையன என்பதை‘மீன்க ணற்றதன் சுனையே’’ (புறநா.109:10) என்பதற்கு, ‘மீன்கணென்றது சுனையினது பன்மையும்... சிறுமையும்’ என்று எழுதப்பட்டுள்ள விசேட உரையும் வலியுறுத்தும். குறும்பல் சுனை-ஒன்றற்கொன்று அண்ணிதாய்ப் பலவாகிய சுனை என்றலுமாம் (பட்.38,ந.) சுனையபாறை, அன்னபாறையென இயைக்க. உலைக்கல்லை உவமை கூறியது வெம்மைக்கு; ‘‘ஞாயிறு காயும் வெவ்வறை’’ (குறுந். 58:3) என்பது பாறையின் வெம்மையைப் புலப்படுத்தல் காண்க. கொடு வில் எயினர் வழிப்போவாரைக் கொல்லுதற்குக் காரணமாகிய கொடுமையை உடைய வில்லை உடைய எயினர் எனலுமாம்; ‘கொடுவில் எயினர்-கொடிய வில்லை உடைய வேடர்’ (பட்.266,ந.) மாய்த்தல்- தீட்டுதல்; ‘‘மாய்த்த போல’’ (அகநா.5:12) என்பதன் உரையைப் பார்க்க. மற்று: அசை. நொதுமற்கழறல் என்றது, வழியின் கொடுமையை அறிந்து வருந்துதலை உணராமல், பிரிவினால் ஆற்றாது இருந்தாள் என்று தோழி சொல்வதை; நொதுமல்- அயல். அழுங்கல்-தடை செய்தலுமாம். ஊர் என்றது தோழியை; தோழியை ஊரென்றல் மரபு; ‘‘யானெவன் செய்கோ பொய்க்குமிவ் வூரே’’ (ஐங். 154) என்பதன் உரையில், ‘பொய்க்குமிவ்வூரென்றது, தலைமகன் குணம் கூறுகின்ற தோழியை நோக்கி எனக்கொள்க’ என்றுள்ள பகுதியினாலும், ‘‘இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத் திற்கே, ஏதில ரென்னுமிவ்வூர்’’ (குறள், 1129) என்பதன் விசேட உரையில், ‘தன் கருத்தறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாளாதலின் தோழியைவேறுபடுத்து இவ்வூரென்றாள்’ (பரிமேல்.) என்றுள்ள பகுதியினாலும் இதனை அறியலாம். வழியினது வெம்மையும் ஆறலைகள்வரால் வரும்அச்சமும் வழியினது மயக்கமும் அவலத்திற்கு ஏதுவாயின.

     மேற்கோளாட்சி 1-2. இயற்சீர் வெள்ளடி ஆசிரியம் தொடுக்குங்கால் பா ஒன்றாகத் தொடுக்கப்படும் (தொல். செய். 162, பேர்.); இயற்சீர் வெள்ளடி ஆசிரியத்தில் விரவி வரும் (தொல். செய். 112, இளம்,62, பேர், ந; இ.வி. 745.)

    மு. தலைவன் பிரிந்துழி வழியருமை பறர் கூறக் கேட்டுத் தலைவி கூறியது (தொல்.கற்பு. 6, ந.); தலைவி கொடுஞ்சொல் சொல்லியது (நம்பி. 170); இயற்சீர் வெள்ளடி ஆசிரியத்தில் விரவி வரும் (யா.வி.29;யா. கா. ஒழிபு 4).

    ஒப்புமைப் பகுதி1. சுனையின் குறுமை; ‘‘மட்டம் பெய்த மணிக்கலத்தன்ன, இட்டுவாய்ச் சுனைய’’ (குறுந். 193:1-2.)

    1-2. சுனையை உடைய பாறை; ‘‘பிடிதுஞ்சு வன்ன வறைமேல நுங்கின், தடிகண் புரையுங் குறுஞ்சுனை’’ (கலித்.108; 40-41); ‘‘பாறை நெடுஞ்சுனை’’ (அகநா.2:4.)

    3. கொடுவில் எயினர்: ‘‘மாரி வளம்பெறா வில்லே ருழவர், கூற்றுறழ் முன்பொடு கொடுவி லேந்தி’’ (சிலப்.11: 210-11.)

    4. ஆறு கவலைத்து: ‘‘கவலை யாத்த வவல நீளிடை’’ (குறுந்.224:1.)

    6. அழுங்கலூர: குறுந். 140:5, 289:8.

 மு. 
‘‘மண்டுந் திரைவையை சூழ்தஞ்சை வாணற்கு வன்புலியும் 
  
 செண்டுங் கொடுத்தகல் செம்பியர் போலன்பர் சென்றுழிமுள் 
  
 இண்டுங் கழையும் பயிலும்வெங் கானியல் கேட்டுமிந்நோய் 
  
 கண்டுங் கலங்கல்செல் லாதிந்த வூரெற் கழறனன்றே’’-(தஞ்சை. 266) 
(12)