(தலைவன் குறியிடத்தில் வந்ததைக் குறிப்பால் அறிவித்த காலத்தில் தலைவி அவன் வருதற்கு முன்னரே குறியல்லாததைக் குறியென றெண்ணிச் சென்று வறிதே மீண்டவளாதலின் வாராதொழிய, வருத்தமுற்ற தலைவன், “தலைவி நன்மையை உடையாள் என்பதை அறிந்தது போலப் பெறுதற் கரியாள் என்பதையும் இதுகாறும் அறிந்திலையே!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
 120.    
இல்லோ னின்பங் காமுற் றாஅங் 
    
கரிதுவேட் டனையா னெஞ்சே காதலி 
    
நல்ல ளாகுத லறிந்தாங் 
    
கரிய ளாகுத லறியா தோயே. 

என்பது (1) அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

     (2) இஃது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன், பிரிந்த வழிக் கலங்கியதுமாம் (பி-ம். கலங்கிற்றுமாம்.)

பரணர்.

     (பி-ம்.) 2. ‘நல்லா’.

     (ப-ரை.) நெஞ்சே---, இல்லோன் இன்பம் காமுற்றா அங்கு - பொருளில்லாத வறிஞன் இன்பத்தை விரும்பினாள்போல, அரிது வேட்டனை - பெறுதற்கரியதை நீ விரும்பினை; நீ, காதலி - நம் தலைவி, நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு - நமக்கு நன்மை தருபவளாதலை அறிந்ததுபோல, அரியள் ஆகுதல் அறியாதோய் - நாம் நினைக்கும் பொழுதெல்லாம் நமக்கு எளியளாய் வருவதின்றிப் பெறற்கரியளாதலையும் அறியாயாயினை.

    (முடிபு) நெஞ்சே, அரிது வேட்டனை; அறியாதோய்.

    (கருத்து)தலைவி பெறுதற்கரியள்.

    (வி-ரை.)இல்லோன் - பொருளில்லாதவன் (குறுந். 63, வி-ரை.) வறிஞனுக்கு இன்பம் இல்லையென்பதை இந்நூல் 63-ஆம் செய்யுளாலும் அதன் விசேட உரையாலும் உணரலாம். அரிதென்றது தலைவியைத் தான் நினைத்த காலத்தில் எதிர்ப்பட்டு இன்புறுதலை. காம மயக்கத்தால் நெஞ்சைக் கேட்பதுபோலக் கூறினான்.

    நல்லளாகுதலை யறிந்தது இதற்கு முன் நிகழ்ந்த கூட்டங்களில்.

    நெஞ்சே, அறியாதோய், அரிது வேட்டனை என்று கூட்டிப் பொருள் கொள்ளுதலும் ஒன்று.

    இரண்டாவது கருத்து: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தலைவியைப் பிரிந்து, ‘ இனி இவளைக் காணுமாறு எங்ஙனம்!” என்று மயங்கி, “இதுகாறும் நமக்கு நல்லளாகிய இவள் இனி அரியளன்றே!” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.

    மேற்கோளாட்சி மு. குறிபிழைத்தவழித் தலைவன் உள்ளத்திற்குச் சொல்லியது (தொல். களவு. 17, இளம்.); புணர்ந்து பிரிந்துழி அன்புமிகுதியால் தான் மறைந்து அவளைக் காணுங்கால் சீறூரிடைக் கண்டு இனிக் கூடுதல் அரிதெனத் தலைவன் இரங்கியது (தொல். களவு 11, ந.); 1 இரவுக்குறி கழிதல் (களவியற்.); தலைவன் தலைவியைப் பிரிந்துழிக் கலங்கிக் கூறுதல் (இ.வி. 501.)

     ஒப்புமைப் பகுதி 1. இல்லோனுக்கு இன்பம் அரிதாதல் : குறுந்.63:1, ஒப்பு; “பொருளிலார்க், கிவ்வுலக மில்லாகி யாங்கு”, “இன்மை யெனவொரு பாவி மறுமையும், இம்மையு மின்றி வரும்”(குறள். 247, 1042.)

     2. நெஞ்சு அரிது வேட்டல் : குறுந். 29:4.

    மு. குறுந். 128.     

(120)